Header Ads



மைத்திரி, கோத்தபாயவை கொலை சதி - 7 மணித்தியாலங்கள் விசாரணை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச கொலைச் சதி தொடர்பான தகவல்களை வெளியிட்ட ஊழல் ஒழிப்பு செயலணியின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமாரவிடம் ஏழு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மாகந்துரே மதுஸ் என்ற பாதாள உலகக்குழுத் தலைவரைக் கொண்டு ஜனாதிபதி, கோதபாயவிற்கு ஏதேனும் ஆபத்தை விளைவிக்க முடியும் என பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா கூறியதாக அண்மையில் நாமல் குமார கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் நாமல் குமாரவிடம் சுமார் ஏழு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த 14ம் திகதி இரவு 11.00 மணி முதல் 15ம் திகதி காலை 6.15 நிமிடங்கள் வரையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் முன்னதாக நாமல் குமாரவின் வீட்டுக்குச் சென்று வாக்கு மூலமொன்றை பதிவு செய்திருந்தனர்.

பின்னர் ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய குற்ற விசாரணைப் பிரிவினர் நாமல் குமாரவின் வீட்டுச் சென்று மீளவும் இவ்வாறு ஏழு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்த குரல் பதிவு அடங்கிய செல்லிடப்பேசியை, நாளை காலை 9.30 மணிக்கு குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு நமால் குமாரவிற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

தமக்கு இவ்வாற பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக நாமல் குமார உறுதி செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.