Header Ads



CID விசாரணைக்கு 4 முறை ஆஜராகாத மகிந்த - வீட்டுக்குச் செல்ல நடவடிக்கை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, எதிர்வரும் 17ஆம் நாள், வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகுமாறு, மகிந்த ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் ரவி செனிவிரத்னவினால், அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்வருமாறு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்கனவே நான்கு தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்கவில்லை.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்கே சென்று வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடமும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலத்தைப் பெற்றிருந்தனர்.

அப்போது அமைச்சராக இருந்த  தாமே, கீத் நொயார் கடத்தல் தொடர்பாக, சிறிலங்கா அதிபருக்கு முதலில் தெரியப்படுத்தியதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய, கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.