Header Ads



முஸ்லிம் தனியார் சட்ட சர்ச்சையால், மறைக்கப்பட்ட இஸ்லாமிய குடும்பவியல் ஒழுங்கு

-அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபளீல்-

 முஸ்லிம் விவாக விவாகரத்து பிரேரணைகள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் சூடு பிடித்திருக்கின்றன. இது விடயமாக  எமது அறிவுக்கு எட்டிய வகையில் வித்தியாசமான பல நிலைப்பாடுகள் இருப்பதைக் காண முடிகிறது.

நிலைப்பாடு - 1
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை எனக் கருதுவோர்.

நிலைப்பாடு - 2
இலங்கை முஸ்லிம்கள் ஷாபியீ மத்ஹபையே பாரம்பரியமாகப் பின்பற்றி வருவதால் அதற்கு மாற்றமான எந்த பத்வாக்களும் MMDA ல் உள்வாங்கப்படலாகாது என்று கூறுவோர்.

நிலைப்பாடு - 3
முஸ்லிம் சமூகத்தினுள் இருக்கும் ஆனால், மேற்கத்தைய சிந்தனைக் காவிகளாக இருக்கும் - முஸ்லிம் தனியார் சட்டத்தையே ஒரு பிற்போக்காகவும் நடைமுறைக்கு ஒவ்வாததாகவும் கருதும் குழுவினர்.  

நிலைப்பாடு 4
இந்த நாட்டுக்குப் பல சட்டங்கள் அவசியமில்லை என்றும் ஒரு சட்டமே போதும் என்றும் அழுத்திக் கூறும் முஸ்லிம் அல்லாத துவேஷிகள்.

நிலைப்பாடு 5
திரிசங்கு நிலையில் உள்ள அரசாங்கம். நடைமுறையில் உள்ள சட்டத்தில் திருத்தங்கள் செய்தால் அது இஸ்லாத்துக்கெதிரான போராக அமையும் எனக் கருதுவோரின் வாக்குகளை எதிர்வரும் தேர்தலில் இழக்க வேண்டிவருமோ எனப் பயந்து விழிப்பிதுங்க பார்த்துக் கொண்டிருக்கிறது.

நிலைப்பாடு 6
நடைமுறையில்  உள்ள சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரும்போது மிகுந்த நெகிழ்ச்சித்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும். ஷாபியீ மத்ஹப் என்ற வரையறையைத் தாண்ட வேண்டிய இடங்களில் நவீன அணுகுமுறைகள் கவனிக்கப்பட வேண்டும் என்று கூறுவோர்.

மேற்படி அபிப்பிராயங்களுக்கு மத்தியில் முஸ்லிம் விவாக விவாகரத்து ஆலோசனைகள் (MMDA) தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.

 இதனுடன் தொடர்பான விரிவான சில அவதானங்கள் வருமாறு:

 சிறுபான்மை சமூகங்களுக்கு தனித்தனியான தனியார் சட்ட ஒழுங்கு அவசியமில்லை என்றும் நாட்டில் ஒரு சட்டமே அமுலில் இருக்க வேண்டும் என்றும் பலமாக வலியுருத்திக்கொண்டிருக்கும் பெரும்பான்மை தீவிரவாதிகள் முஸ்லிம் தனியார் சட்டத்தையும் அகற்றி விட வேண்டும் என நீண்டகாலமாக் கூறி வருகிறார்கள். MMDA பற்றிய முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் நிலவும் அசிங்கமான வாதப் பிரதிவாதங்கள் அவர்களின் வாதத்தை மேலும் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அமீர் எம் ஃபாயிஸ் என்பார் Colombo Telegraph (August 12, 2018) வெப் தளத்துக்கு Who is blocking reform of this discriminatory law எனும் தலைப்பில் எழுதிய ஓர் ஆக்கத்துக்கு comment செய்துள்ள நவீன் என்பார் பின்வருமாறு எழுதுகிறார்:

 “இது அபத்தமானது. பல ஆண்டுகளாக இருந்து, அது சம்பந்தப்பட்ட நபர்கள் தமது  பொறுப்பைச் ஒன்றுபட்டுச் செய்து முடிக்க முடியாததுடன், முஸ்லிம் பெண்களுக்கு உதவுவதாகவும் தெரியவில்லை. இதற்கு முட்டுக் கட்டையாக இருப்பவர்களது பேச்சுக்கு இவர்கள் காது கொடுப்பதை நிறுத்தி விட்டு பெண்களுக்கு ஏதாவது செய்ய  வேண்டும். அவர்கள் இன்னும் கற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பழமையான சட்டங்களின் கீழ் இன்று பல பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சகலருக்குமான திருமண வயது ஒன்றாக இருந்தால் என்ன?


தற்போதைய பின்தங்கிய சட்டங்களின் கீழ் வாழ விரும்புவோர் ஒருவேளை சவுதி அரேபியாவிற்கு ஒரே ஒரு வழி விமான டிக்கெட் எடுக்க வேண்டும். அவர்கள் முஸ்லீம் பெண்களை வலுவூட்டி அவர்களுக்கு சட்டபூர்வமாக ஆதரவளித்தல் வேண்டும். அதனால் அவர்கள் தவறான துணைகளுடன் சமாளித்துக் கொள்ள முடியும்.(Empower the Muslim women and support them legally, so that they can deal with abusive spouses) அவர்கள் உடல் ரீதியிலும் மனரீதியிலும் சமாளிக்க தயாராக இல்லாத திருமணவாழ்வுக்குள் தள்ளப்படக் கூடாது. அவர்களது  கால்களை வாரிவிடுபவர்கள் அனைவரும் வெட்கப்படுங்கள்.” என்று நவீன் கூறுகிறார்.

கட்டுரையாளர் ஃபாயிஸின் கருத்தோ நவீனின் கருத்தை மிகைத்து நிற்பதாகத் தோன்றுகிறது. அவர் “இந்த நாட்டின் அரசியலமைப்பின் கீழ் பிற பெண்களுக்கு கிடைத்து வரும் குடும்ப, மற்றும் பிற உரிமைகள்  இலங்கையின் முஸ்லீம் பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன. காலாவதியான மற்றும் பாரபட்சமான முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை சீர்திருத்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்கம் நியமித்த குழு...” என அவரது ஆக்கம் தொடருகிறது.

குடும்ப வாழ்வு தொடர்பாக வல்லவன் அல்லாஹ் அருமையான, மனித இயல்புக்கு இயைபான ஒரு வாழ்வு நெறியைத் தந்திருக்கையில் இப்பாடியானவர்களால் பந்தாடப்படும் நிலைக்கு இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் வந்திருப்பதை நினைக்கையில் மிக்க கவலையாக இருக்கிறது.

முஸ்லிம் தனியார் சட்டம் பழமையான, கற்காலத்துக்குரியதாம். காலாவதியானதும் பாரபட்சமானதுமாம். அது சவுதிக்குத் தான் பொருந்துமாம். இதனால் முஸ்லிம் பெண்கள் பல வகையிலும் பாதிக்கப்பட்டிருக்கிறர்களாம். அதிலிருந்து விடுதலையடைந்தால் பாலியல் சுதந்திரத்தோடு வாழமுடியுமாம்.? இப்படிக் கூறும் இவர்கள் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அல்லாத பெண்கள் நிறைவான உரிமைகளைகளை பெற்று வாழுவது போல் நினைக்கிறார்கள் போலும். 

இந்த கருத்துக்கள் பற்றி இரு வகையில் பதிலளிக்க முடியும்:

1.இவர்கள் இப்படியெல்லாம் பேசுவதற்கு  இஸ்லாமிய சட்டத்திலுள்ள குறைபாடுகள் தான் காரணமா? அல்லது இஸ்லாத்தைப் பாதுகாக்கப் புறப்பட்டவர்கள் காரணமா? ஆனால், இஸ்லாம் ஒரு போதும் காரணமல்ல. முஹம்மத் அல்கஸ்ஸாலி எனப்படும் நவீன கால அறிஞர் கூறுவது போல் “இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதன் பக்கதிலேயே நியாயமிருக்கிறது. எனினும், அது சார்பாக வாதிடும் வழக்கறிஞர்கள் கையாலாகாதவர்களாக - இயலாமையில் இருக்கிறர்கள்.” என்கிறார். எனவே, இது காவாலளிகளின் தவறு.(இது பற்றி இன்ஷா அல்லாஹ் பின்னர் சற்று விரிவாக ஆராயலாம்)

2. இவர்கள் கூறுவதைப் பார்த்தல் இன்றைய உலகில் குடும்ப சீர்குலைவுக்கு ஏனோ இஸ்லாம் தான் காரணம் போல் தெரிகிறது. முஸ்லிம் அல்லாத சமூக அமைப்புக்களில் குடும்ப அமைப்பில் அமைதியும் சமாதானமும் பரிபூரணமாக நிலவுவது போல் தெரிகிறது.  அது உண்மையாயின் குறிப்பாக இலங்கையிலும்  பொதுவாக உலகிலும் குடும்ப நிறுவனம் முஸ்லிம் அல்லாத சமூக அமைப்புக்களில் நாற்றம்மெடுத்திருப்பதற்கும் பேரழிவுக்கு உள்ளாகி இருப்பதற்கும் இஸ்லாமிய சட்டம் தான் காரணமா? என்று அவர்களை நாம் வினவ வேண்டும். ஆனால், இஸ்லாத்தை அவர்கள் விட்டு விட்டு மனோ இச்சைப் பிரகாரம் நடக்க ஆரம்பித்ததே அதற்கு ஒரே காரணம்.

மேற்குலகில் எயிட்ஸ் போன்ற சமூக நோய்கள் தாண்டவமாடுகின்றன. தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. மன நோய்கள் மக்களைப் பிடித்து வாட்டுகின்றன. பிரதான காரணம் குடும்ப அமைப்பின் உடைவு (Broken Families) தான். விபசாரம் ஒருபாலுறவு மற்றும் பிரமச்சாரியம் போன்றன அதிகரித்துள்ளன. குடும்ப அமைப்பின் உடைவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் ஏராளம். வீதியோரச் சிறுவர்கள், அபலைப் பெண்கள், பொருளாதச் சீர்கேடுகள் என்று அடுக்கிக் கொண்டு போகலாம். அல்லாஹ் பாதுகாக்கட்டும்!

மிகச் சரியான மதிப்பீடிகளைச் செய்து பார்த்தால் ஒப்பிட்டு ரீதியில் இஸ்லாம் நடைமுறையில் இருக்கும் கீழைத்தேய நாடுகளில் குடும்பச் சிக்கல்கள் மேற்குலகை விடக் குறைவு என்பதை நாம் புரிய வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கீழைத்தேய நாடுகளில் புகுத்திய மோசமான வாழ்வு முறையாலும் கல்வித் திட்டத்தாலும் கவரப்பட்ட முஸ்லிம்கள் தான் தலை கால் தெரியாமல் வாழுகிறர்கள்.

மேற்கு நாடுகள் இஸ்லாமிய நாடுகளில் மட்டும் தலையீடு செய்யாமல் இருந்திருந்தால் யுத்தங்களைத் திணிக்காதிருந்தால் இன்று முஸ்லிம் நாடுகள் உச்சகட்ட முன்னேற்றத்தைக் கண்டிருக்கும். சிரியாவுலும் யமனிலும் மியன்மாரிலும் பச்சிளம் பாலகர்களும் குடும்பப் பெண்களும் கொல்லப்படுவதற்கும் அகதி முகம்களில் கண்ணீரும் கம்பலையுமாக இருப்போருக்கும் மத்திய தரைக் கடலில் தத்தளித்து மூழ்கும் குடும்பங்களுக்கும் யார் பொறுப்புச் சொல்வது? 

 முஸ்லிம் நாடுகளில் உள்ள குடும்பங்களை சீரழித்து விட்டு முஸ்லிம் நாடுகளில் குடும்ப வன்முறை இருப்பதாக கதை கட்டுகிறார்கள். சிறுவர் உரிமைகள் மீறப்படுவதற்கும் குடும்பங்கள் ஆபாசத் திரைப்படங்களால் தூர்ந்து போனமைக்கும் முழுக் காரணமும் மேற்குலகத்தார் தான். இவர்களுக்கு இஸ்லாமிய சட்டத்தில் குறை இருப்பதாகப் பேசுவதற்கு அருகதை கிடையாது.

இலங்கையை மட்டும் எடுப்போம். நடைமுறையில் இருக்கும் சட்டங்களால் பாதுகாப்பு வழங்கப்படாத நிர்க்கதியான பெண்கள் பற்றிய சில தகவல்கள் இதோ:  

“இலங்கையில் 15-49 வயதிற்குட்பட்ட திருமணமான பெண்களில் 17 சதவிகித்தினரும் . உலகெங்கிலும் உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினரும் அவர்களது  கணவன்மாரிடமிருந்து வீட்டுவன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். www.statistics.gov.lk/social/DHS_2016a/Chapter13.pdf


சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் அமைச்சால் 2006 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி இலங்கையில் மொத்தம் 60 வீதமான பெண்கள் உள்வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 சதவீத கர்ப்பிணிப் பெண்களும் துன்புறுத்துதலுக்கு உள்ளாகியுள்ளனர் என அருந்ததி அபயசிங்க குறிப்பிடுகிறார்.
 https://www.slideshare.net/arundathie81/domestic-violence-in-sri-lanka, Published on Oct 16, 2013

*குடும்ப அமைப்பு*

இது இப்பயிருக்க MMDA பற்றிய  இழுபறிகளும் தர்க்கங்களும் இஸ்லாத்தின் குடும்ப வாழ்வுப் பற்றிய புனிதமான அழகிய ஒழுங்கு முறையை திரை போட்டு மறைத்துவிட்டன. இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத்திட்டமாகும். அது வாழ்வின் சகல அங்கங்களுக்குமான வழிகாட்டல்களைத் தந்துள்ளது. அதில் குடும்ப அலகு பற்றிய வழிகாட்டலும் பிரதானமான ஒன்றாகும்.

அல்லாஹ் உயர்ந்தவனாகவும் புனிதமானவனாகவும் இருப்பதனால் அவனிடமிருந்து வந்த குடும்ப வாழ்வு தொடர்பான வழிகாட்டல்களும் புனிதமானவை தான். ஆண் - பெண் என்ற சோடியமைப்பை மனித வர்க்கத்திலும் அமைத்த அல்லாஹ் பிறப்புறுப்புக்களை கொடுத்து பாலுணர்வையும் ஏற்படுத்தி பால் கவர்ச்சியையும் ஏற்படுத்தினான். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் என்ற அடிப்படையில் மட்டுமே உறவு கொள்ள வேண்டும் என்றும், அதற்கப்பால் நிகழும் சகல உறவுகளும் ஹராம் என்றும் மானக்கேடானவை என்றும் தீய வழிகள் என்றும் திட்டவட்டமாக கூறினான்.

குடும்ப வாழ்வின் இலக்குகளாக

1.பாலியல் ஆசையை பாதுகாப்பாகவும் மன விருப்பத்தோடும் தீர்த்துக் கொள்வது,

2. மனதில் சந்தோசத்தையும், இரக்கத்தையும் (மவத்தா, ரஹ்மா) தோற்றுவிப்பது,

3. சந்ததிகளைப் பெருக்குது, 

4. குடும்பப் பிணைப்பினூடாக பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவது 

போன்ற உன்னதமான நோக்கங்கள் அடையப்பெற வேண்டும் என்பது அல்லாஹ்வின் எதிர்பார்ப்பாகும். இந்த இலக்குகளை அடையும் விதத்தில் தான் திருமணம் தொடர்பான சகல ஒழுங்குகளையும் இஸ்லாம் தந்திருக்கிறது.

இஸ்லாமிய சட்ட (பிக்ஹ்) நூல்களை நாம் எடுத்துப் பார்த்தால், *'கிதாபுந் நிகாஹ்'* என்பது ஒரு தனியான சட்டப் பகுதியாக இருப்பதைக் காண முடியும். அதில் மஹர், வலீ, சாட்சிகள், திருமணம் முடிக்க அனுமதிக்கப்படாதோர், நபகா, கருச்சிதைவு, குல்உ, தலாக், ஈலா, ழிஹார், இத்தா, தலாக்கின் வகைகள், வாரிசுரிமைச் சட்டங்கள், ஹளானத், பாலூட்டலும் அதன் மூலம் உருவாகும் விளைவுகளும் போன்றன தொடர்பான பல சட்டங்களை மிக விரிவாகக் காணலாம். 

சட்டமின்றி மனித வாழ்வு ஒழுங்குபடமாட்டாது. மிருகங்கள் எவ்வித சட்ட ஒழுங்கிலும் வாழுவதில்லை. அவற்றின் வாழ்வில் குடும்ப அலகோ அதனுடன் தொடர்பான சட்டங்களோ இருப்பதில்லை. அவை பாலுணர்வை விரும்பும் விதங்களில் தீர்க்கின்றன. பெற்றார் பிள்ளைகள் உறவு, உறவினர் தொடர்பு போன்ற எந்த ஒழுங்கும் அங்கில்லை. மனிதனும் அப்படித்தான் விரும்புகிறான் என்றால் அவனும் ஒரு மிருகமேயன்றி வேறில்லை.

எனவே, சகல படைப்புக்களையும் படைத்த அல்லாஹ் அவற்றை திட்டமிட்டுப் படைத்து, அளவுகளை நிர்ணயித்து வழிகாட்டல்களையும் வழங்கினான். *படைத்து சீராக்கி, அளவை நிர்ணயம் செய்து, (வாழும்) வழியையும் காட்டிய உயர்ந்தவனாகிய உமது ரட்சகனை நீர் துதி செய்வீராக!'* என அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிடுகிறான்.

மனிதன் என்ற மிக நுணுக்கமான படைப்பை உருவாக்கியவனுக்கே அவனது பலம், பலவீனம், அபிலாசைகள், தேவைகள் என்பன பற்றிய அறவு முழுமையாக இருக்கிறது. இயந்திரம் செய்தவன் தான் அதனைப் பயன்படுத்தும் முறையைக் கூறும் கைநூலையும் தயாரித்துத் தர வேண்டும் என்பது போல, மனிதனைப் படைத்த அல்லாஹ் தான் அந்த மனிதன் குடும்பம் நடத்துவதோடும் தொடர்பான வழிகாட்டல்களையும் தர வேண்டும். அவன் கூறியபடி நடக்காது முகம் போன போக்கில் மனித உறவுகள் நிர்ணயிக்கப்படும் போது, மனித வாழ்வு சீரற்றதாக, குளறுபடிகள் நிறைந்ததாக மாறி விடும். 

எனவே, அல்லாஹ்வும் அவனது தூதரும் குடும்ப வாழ்வுக்கான மிகவும் அடிப்படையான விதிகளை இடும் பொறுப்பை எடுத்திருப்பதையும், அதற்கான ஒழுங்குகளைத் தந்திருப்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். பிரம்மச்சாரியம் தடுக்கப்பட்டமை, திருமண பந்தத்தின் ஊடாக மட்டுமே பாலியல் ஆசை தீர்க்கப்பட வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறியமை, மஹ்ரம்கள் திருமணம் செய்யப்படலாகாது என்ற சட்டம், தலாக் சொல்லப்பட்ட பெண்களும் கணவன் இறந்த பெண்களும் இத்தா இருக்க வேண்டும் என்ற விதி போன்ற சட்டங்களில் எவ்வித மாற்றங்களையும் செய்ய எவருக்கும் உரிமை கிடையாது. 

ஆனால், கிளைச் சட்டங்களில் ‘இஜ்திஹாத்’ செய்யும் அனுமதியுண்டு. கால சூழலுக்கேற்ப மனித நலன்கள் மாறுவதற்கிணங்க மாறுபடும் சட்டங்களும் உண்டு. அவை பற்றி விளக்கமாக இங்கு எழுத முடியாது.

மனிதனது குடும்பம் என்ற புனிதமான நிறுவனத்தையும், பாலியல் உணர்வையும் பாதுகாக்க இஸ்லாம் தந்த அற்புதமான ஏற்பாடுகள் சில வருமாறு:

1. பார்வையை ஹராமான அம்சங்களைப் பார்ப்பதை விட்டும் தவிர்ப்பது.

2. ஆண்களும் பெண்களும் தத்தமது அவ்ரத்களை மறைப்பதுடன். குறிப்பாக பெண்களது ஹிஜாபுக்கான எட்டு வரையறைகளை இட்டிருப்பது.

3. அஜ்னபீக்களுடன் தனித்திருப்பதையும், பயணம் செய்வதையும் தடுத்திருப்பது.

4. வீடுகளுக்குள் நுழையும்போது, அனுமதி பெற்ற பின்னரே நுழைய வேண்டும் என்ற சட்டம்.

5. திருமண வயதை அடைந்தவுடன் ஆணோ, பெண்ணோ திருமணம் செய்வது அல்லது அவர்களுக்கு பிறர் திருமணம் செய்து வைப்பது.

6. அபாண்டம் சுமத்துவது பெரும் பாவங்களில் ஒன்று என்ற பிரகடனமும் அதற்கான கடும் தண்டணையும்.

7. விபசாரம் செய்தவர்களுக்கான குற்றவியல் தண்டணை.

8. கணவன் மனைவி தகராறின் போது, கணவன் பக்கத்திலிருந்து ஒரு மத்தியஸ்தரும், மனைவி பக்கத்திலிருந்து மற்றொரு மத்தியஸ்தரும் முன்வந்து சர்ச்சைக்கு முடிவு கட்டுவது.

9. பெற்றாரைக் கவனிப்பது ஒவ்வொருவரது அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தியிருப்பதுடன் பெற்றாரைப் புறக்கணிப்பதும் துன்புறுத்துவதும் ஷிர்க்குக்கு அடுத்த பெரும் பாவம் எனப் பிரகடனம் செய்திருப்பது.

10. இனபந்துக்களது உறவை முறிப்பது பெரும் பாவம் என்றும் அது அடியார்களுக்கான உரிமைகளின் மீதான அத்துமீறல்களில் ஒன்று என்றும் கூறியிருப்பதுடன், அதனைப் பேணுவதை அல்லாஹ்வின் உறவையும், நேசத்தையும் பெற்றுத் தரும் என்று வலியுறுத்தியிருப்பது.

இவை குடும்ப நிறுவனத்தை பேணிப் பாதுகாக்கவும், பலப்படுத்தவும் இஸ்லாம் தந்துள்ள தன்னிகரற்ற ஒழுங்கு விதிகளாகும். முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் (MMDA) உள்ள கருத்து வேறுபாடுகளுக்கு உள்ளாகியுள்ள சுமார் எட்டைத் தாண்டாத விவகாரங்களை வைத்துக் கொண்டு, நாம் எமக்கிடையே சர்ச்சைப்பட்டுக் கொண்டு ஊடகங்களில் மோதிக்கொள்வதாலும் பெண்ணிலைவாத அமைப்புக்கள் இவற்றுக்காக வீதிப் போராட்டம் நடாத்துவதாலும் இஸ்லாத்தின் அழகிய புனிதமான குடும்ப அமைப்புடன் தொடர்பான போதனைகள் மூடி மறைக்கப்பட்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இஸ்லாமிய குடும்ப விதிகள் என்றாலே சர்ச்சை தான் எழும் என்று பிறருக்கு எண்ணத் தோன்றியிருக்கிறது.

கருத்து பேதங்கள் வருவது இயல்பு. இஸ்லாமிய வரலாற்றில் நாற் பெரும் மத்ஹப்களும், அவற்றுக்கு அப்பால் வேறுபல இமாம்களும் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தார்கள். ஆனால், அது நாற்றமெடுக்கும் குப்பையாக இல்லாமல் இஸ்லாமிய வாழ்வொழுங்கை கால மாற்றத்துக்கேற்ப இசைந்து போக வைக்கும் அற்புதமான அறிவுப் பாரம்பரியமாக மிளிர்ந்தது. 

அந்த இமாம்கள் கருத்து வேறுபாடுகளை கண்ணியமாகக் கையாண்டனர். ஒழுங்குகளை அமைத்துக் கொண்டார்கள். அதில் ஜாதில்ஹும் பில்லதி ஹிய அஹ்ஸன்(அவர்களுடன் மிகவுமே அழகிய வழிமுறையில் கருத்துப் பரிமாறல் செய்யுங்கள்!) என்ற குர்ஆனிய கட்டளை அவர்களுக்கு வழிகாட்டியது. சிலபோது சிலர் வரம்பு மீறி நடந்திருக்கலாம். அது பொதுப் பண்பாக இருக்கவில்லை. 'எனது கருத்தே சரியானது. அதில் பிழை இருக்கலாம். பிறரது கருத்து பிழையானது. அதில் சரி இருக்கலாம்.' என இமாம் ஷாஃபிஈ (ரஹ்) கூறினார்கள் எனின் அது அவர்களது பணிவையே காட்டுகிறது. 

கலாநிதி தாஹா ஜாபிர் அலவானி அவர்கள் எழுதிய Ethics of Disagreement எனப்படும் சிறந்த நூலில் இதற்கான தாராளமான உதாரணங்களைக் காண முடியும். 

எனவே, MMDA சம்பந்தமாக பேசும்போது பின்வரும் விடயங்களைக் கவனத்தில் எடுப்பது நல்லது.

1. ஒரு விவகாரத்தில் அனுமதிக்கத்தக்க வித்தியாசமான கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் இஸ்லாமிய வரம்புக்குள்ளிருந்து வெளியேறி விட்டார்கள் என்று கூறாதிருப்பது. உதாரணமாக:- வலீ பற்றிய கருத்து வேறுபாடு.

2. இரண்டு தரப்பும் முன்வைத்துள்ள முன்மொழிவுகளை முழுமையாக வாசித்து விட்டு கருத்துக் கூறுவது.

3. இதுவரை இரு சாராரும் தத்தமது அறிக்கைகளைத் தயாரிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை மதிப்பதுடன், அவர்களை பொதுத் தளங்களில் படுமோசமாக விமர்சிப்பதையும் ஓரங்கட்டுவதையும் தவிர்ப்பது. 

4. அறிவை அறிவால் வெல்வோம். ஆதாரங்களோடும் தெளிவோடும் பேசுவோம். உணர்ச்சிகளுக்கோ, சுய சார்பியங்களுக்கோ இடம் கொடுக்காதிருப்போம் என்ற அணுகு முறையை கையாள்வது.

5. MMDA பற்றிய எமது சர்ச்சைகளை நாட்டிலுள்ள முஸ்லிம் அல்லாதவர்களும் ஏன் சர்வதேசத்தவர்களும் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாமல், எமக்கு கண்ணியமாகத் தீர்ப்பதற்கு முயற்சிப்போம்.

6. குடும்ப அமைப்பு தொடர்பான இஸ்லாம் தந்துள்ள மிக அழகான விதிமுறைகளையும், ஒழுக்கங்களையும், வழிகாட்டல்களையும் உலகத்துக்கு அழகிய வடிவங்களை முன்வைத்து, உலகை ஒழுக்க வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க முயற்சிப்போம்.

7. நாம் MMDA பற்றி அளவு கடந்து சர்ச்சைப்பட்டுக் கொண்டிருக்கையில், எமது இன்னும் பல விவகாரங்கள் குப்பையில் போய் விழுந்து கவனிப்பாற்றுக் கிடக்கின்றன என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வது. முஸ்லிம் சமூகத்தில் ரித்தத் பரவுவது, கல்வியில் பின்னடைவு, வறுமை, குடும்ப அமைப்பில் சீர்குலைவு, பிற சமூகங்களுடனான உறவுகளில் வீழ்ச்சி, ஷீஆ, காதியானி, ஐ.எஸ்.எஸ்.,அகதிகள் விவகாரம் போன்ற எப்போதுமே கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் நீறுபூத்த நெருப்பாக மாறியிருப்பதை கவனத்திலெடுக்க வேண்டும்.

8. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம். அது மிகக் கவனமாகத் திட்டமிடப்பட வேண்டும். இரு தரப்பிலும் சம்பந்தப்பட்ட பலர் மனமுடைந்து போயிருக்கிறார்கள். அவர்கள் உள்வாங்கப்பட வேண்டும். தத்தமது அறிக்கைகளை தயாரிப்பதற்கு அவர்களது பக்க நியாயங்கள் எவ்வித பக்க சார்புமின்றி செவிதாழ்த்தப்பட வேண்டும். அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய விடயம் என்பது மறக்கப்படலாகாது.

9. பள்ளிகளையும், பொது மேடைகளையும் பயன்படுத்தி பொது மக்களது உணர்வுகளைத் தூண்டும் வகையில் நடாத்தப்படும் நிகழ்ச்சிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.


இன்ஷா அல்லாஹ் நல்ல முடிவுகள் வெளிவர அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து செயற்படுவோமாக. இக்லாஸ், தீவிர முயற்சி, அல்லாஹ்வின் உதவிஆகிய மூன்றும் இணைந்தால் வெற்றி நிச்சயம். 

அல்லாஹ் அருள்பாலிப்பானாக!

No comments

Powered by Blogger.