Header Ads



தள்ளாடுகிறது ஈரான் - நீதி விசாரணைக்கு உத்தரவு

ஈரான் சந்தித்து வரும் வரலாறு காணாத பொருளாதாரச் சரிவு, விலைவாசி உயர்வு தொடர்பாக அதிபரின் பதில் திருப்தியளிக்காததால் நீதி விசாரணைக்கு பாராளுமன்றம் பரிந்துரைத்துள்ளது.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஈரான் நாட்டு நாணயத்தின் மதிப்பு ஒரேநாளில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டுவாக்கில் 42,890 ரியால்களாக இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பு படிப்படியாக கூடிக்கொண்டே போய் கடந்த மாத இறுதியில் 57,500 ரியால்களாக உயர்ந்து கடந்த மே மாதவாக்கில் 80 ஆயிரம் ரியால்களுக்கு விலைபோனது. இதனால், ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாக நிலைகுலைந்து காணப்படுகிறது.

நிலைமை மேலும் மோசம் அடைவதை தவிர்க்கும் வகையில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பொருளாதார நிபுனர்களும், எதிர்க்கட்சியினரும் எச்சரித்து வருகின்றனர்.

ஈரான் நாட்டு பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித்துறை மந்திரி மசவுத் கர்பாசியன்-ஐ அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் வாக்களித்தனர்.

இந்நிலையில், வரலாறு காணாத பொருளாதாரச் சரிவு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் எல்லைப்பகுதிகள் வழியாக கடத்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.

அடுத்தடுத்து அமெரிக்கா விதித்த தடைகளால் பொருளாதாரம் நலிவடைந்ததாக அதிபர் ரவுகானி விளக்கம் அளித்தார். பெருகிவரும் விலைவாசியை கட்டுப்படுத்த சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், கடத்தலை தடுக்க எல்லைப்பகுதிகளில் காவல் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் இவ்விவகாரத்தில் நீதி விசாரணைக்கு வலியுறுத்தி பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் நினைத்தால் ரவுகானியை அதிபர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்தும் வாக்களிக்கலாம். ஆனால், தற்போதையை சூழ்நிலையில் அத்தகையதொரு நிலைப்பாட்டை பாராளுமன்றம்  எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. Iranum americawum mapula pondati nadikiranihal. Edho thitam podral

    ReplyDelete

Powered by Blogger.