Header Ads



இரத்தினபுரி அல்மக்கியாவில் பழைய மாணவர் சங்கம் அங்குராப்பணம்


ஜம்பத்தைந்து வருடகால கல்வி வரலாற்றைக் கொண்ட இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முதலாவது பழைய மாணவர் சங்கம் கடந்த சனிக்கிழழை (11) பாடசாலையில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இது தொடர்பான   முக்கிய நிகழ்வு  பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.எஸ்.எம்.மில்ஹானின் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த 1963ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி பாடசாலையிலிருந்து கல்வி  கற்று வெளியேறிய பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அதிபர் மில்ஹான் உரையாற்றுகையில்

"பாடசாலைகளும் மஸ்ஜித்துகளும் முஸ்லிம் சமூகத்தின்  இரு முக்கிய தளங்களாகும்.இவை இரண்டும் சமூகத்திற்கு ஆரோக்கியமான கல்வி அறிவும் ஒழுக்கமும் மிக்க மார்க்க சிந்தனையுள்ள நற்பிரசைகளை உருவாக்கிக் கொடுக்கிறது.

கிராம் கிராமமாக மஸ்ஜித்துகளை நிர்மாணிப்பதிலும் அபிவிருத்தி செய்வதிலும் போட்டி போட்டுக்கொள்ளும் எமது இஸ்லாமிய   சமூகம் ஆரோக்கியமான  அறிவு வளர்ச்சிக்கு  காரணமாக அமைந்திருக்கும் பாடசாலைகளை முன்னேற்றுவதிலும், அதற்கு உதவி செய்வதிலும் தொடர்ந்தும் பின்நிற்கின்றனர்.

ஆனால் இது சிறந்த  சமூக  எழுச்சிக்கான ஓர் நல்ல அறிகுறி  அல்ல.கல்வி கற்கத் தூண்டும் இஸ்லாம்  கல்வியை உலக் கல்வி,மார்கக் கல்வி என பிரித்து நோக்கவில்லை.இஸ்லாமிய சமூகத்தின் எழுச்சிக்கும் அதன் பாதுகாப்பிற்கும் ஒவ்வொரு கிராமத்திலும் மக்களை சரீஆவின் அடிப்படையில் வழிநடத்தக் கூடிய ஆலிம்கள் மற்றும் ஹாபிழ்கள் உருவாக்கப்படுவது அவசியம் என்பது போல  அந்த ஊர் பாடசாலைகளிலிருந்து புத்திஜீவிகளும்,ஆசிரியர்களும்,வைத்தியர்களும்,சட்டத்தரணிகளும்,பொறியியலாளர்களும் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களும் உருவாக்கப்படுவதை இஸ்லாம் (பர்ளு கிபாயா) சமூகக் கடமையாக நோக்குகிறது.

இந்த அனைத்து  எதிர்பார்ப்புக்களையும் நிறைவு செய்து கொடுக்கும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கும் அதனை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கும் முஸ்லிம்     சமூகமும் அதன் முக்கியஸ்தர்களும் உரிய பங்களிப்புக்களை வழங்க மறுப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.

எமது பாடசாலை கல்வி  வரலாற்றில் முதற்தடவையாக இன்று அங்குராப்பணம் செய்யப்பட்டிருக்கும் பழைய மாணவர் சங்கம் நிச்சயமாக  தனது பணிகளையும் பொறுப்புக்களையும்  முறையாக  நிறைவேற்றும் என நான் எதிர்பார்கின்றேன்.

 எமது  இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம்  பாடசாலை தனக்கு கிடைக்கப் பெற்றுள்ள பௌதிக வளங்களை திட்டமிட்டு பயணித்துக் கொண்டிருக்கிறது.அனைத்து அரசாங்கப் பரீட்சைகளிலும்,இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் தரம் 1 முதல்  13 வரை படிக்கும் அனைத்து  மாணவர்களும் தமது திறமைகளையும்,ஆற்றல்களையும் தொடர்ந்தும் வெளிப்பத்தி வருகின்றனர்.

எனினும் எமது மாணவர்களின்     எண்ணிக்கைக்கு ஏற்ப இட வசதிகளும்,ஏனைய இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கான போதுமான வசதிகள் இல்லாமையால் நாமும் எமது மாணவர் சமூகமும்   பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க நிர்பந்திக்கப்பட்டு வருகிறோம்.


இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் பாடசாலையின் கல்வித் தரத்தை உயர்த்து வதற்கும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கும் அல்மக்கியா பழைய மாணவர் சங்கம் உதவுமென்றிருந்தால் இதுவே இரத்தினபுரி முஸ்லிம் சமூகம் அடைந்த  மிகப்பெரிய வெற்றியாக நாம் நினைக்கின்றோம்", என அவர்  தனது நீண்ட உரையில் குறிப்பிட்டார்.

இதன்போது  பழைய மாணவர் சங்கத்  தலைவராக  அதிபர் எம்.எஸ்.எம்.மில்ஹானும்,செயலாளராக எம்.எம்.நுஸ்ஹாக் ஆசிரியரும்,பொருளாளராக எம்.என்.எம்.நப்றாஸும்,உதவித் தலைவர்களாக ஏ.எச்.எம்.றியாஜ்,எம்.ஐ.எம்.இம்தாத் உட்பட   உதவிச் செயலாளராக எம்.என்.எம்.றம்லான் ஆசிரியரும்,உதவிப் பொருளாளர்களாக என்.எம்.அர்க்கம்,அஷ்ஷைய்ஹ் எஸ்.எம்.றில்வான் ஆகியோரும்    உறுப்பினர்களாக  10 பேர் கொண்ட குழுவொன்றும்  தெரிவு செய்யப்பட்டனர்.

No comments

Powered by Blogger.