Header Ads



சம்பந்தனின் தலை தப்புகிறது - எதிர்கட்சித் தலைவராக தொடருவார்

நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்பான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிலைப்பாடு, இன்றையதினம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது.

இதன்போது எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம், சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீரவினால், சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டது. 

எதிர்கட்சித் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவிற்கு வழங்குமாறு ஒரு குழுவும், குமார் வெல்கமவிற்கு வழங்குமாறு இன்னொரு குழுவும் தம்மிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டிருந்தார்.

அதிக உறுப்பினர்களைக் கொண்ட தங்களுக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று, ஒன்றிணைந்த எதிரணி சபாநாயகரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையிலேயே சபாநாயகர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கோரி இருந்தார். 

சுதந்திர கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர், சபாநாயகர் தமது தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனையே தொடரச் செய்வதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றிணைந்த எதிரணி என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் குழுவினர்கள் அனைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவானவர்களாவர்.

எனவே அவர்களில் ஒருவருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது உசிதமில்லை என்று நேற்றையக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.