Header Ads



அவுஸ்திரேலியாவில் கைதான நிஸாம்தீன் பற்றி, வெளியாகியுள்ள புதிய தகவல்கள்


அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையை பின்னணி கொண்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் நிஸாம்தீன் என்ற 25 வயதுடைய இளைஞன் சிட்னி கென்ஸின்டன் (Kensington) பகுதியில் வைத்து நேற்று பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கும் ஐ.எஸ். அமைப்புக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுவதாக சிட்னி புலனாய்வு அதிகாரி மைக்கல் மெக்டிமென் கூறியதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்கள் அடங்கிய குறிப்பேடு ஒன்று பல்கலைக்கழக ஊழியர் ஒருவரால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் அதேநேரம் UNSW பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகிறார்.

சிட்னியில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டதற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி இந்நபர் தனியாகவே இயங்கியதாக நம்பப்படுவதாகவும் இதற்கு முன்னர் இவர் மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவரின் மாணவர் விசா செப்டம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், அவர் தொடர்ந்தும் இங்கே தங்கியிருப்பதற்கான நடடிவக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதேநேரம் இவர் இலங்கை உட்பட சில நாடுகளுக்கு சென்று திரும்பியதாகவும் கூறியுள்ளனர்.

குறித்த நபர் இன்று வெவெர்லி (Waverley) நீதிமன்றில் முன்னிலையான போது இவருக்கு பிணை வழங்க அனுமதி மறுக்கப்பட்ட அதேநேரம் அவரது வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 24-ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.