August 19, 2018

"பள்ளிவாசல்களின் இந்த நிலைப்பாடுதான், சமூகத்தின் இன்றைய சாபக்கேடு"

 – அபூ ஷாமில் –

ரமழான் என்றால் இப்தாரும் ஹஜ் என்றால் குர்பானுமாக கள நிலவரங்கள் களை கட்டுகின்றன. கடமையான பல விடயங்கள் இருக்கையில் உபரியான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்படுவதில் இந்த இரண்டு பெருநாட்களும் நல்லதொரு தொடர்பை வெளிக்காட்டுகின்றன.

இஸ்லாத்தின் ஐந்து தூண்களான கலிமா, தொழுகை, ஸக்காத்து, நோன்பு, ஹஜ் என்பவற்றில் ஹஜ்ஜைத் தவிர ஏனைய அனைத்துக் கடமைகளும் ரமழானில் நிறைவேற்ற முடியுமானவை. இந்த வகையில் கடமையான தொழுகைகளை நிலைநாட்டி,  ஸக்காத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக ரமழான் அமைந்தாலும் ஸுன்னத்தான தொழுகைகளும் உபரியான ஸதகாவும் தூண்டப்படும் மாதமாகவே பள்ளிவாசல்கள் ரமழானை பயன்படுத்திக் கொள்கின்றன. கடமையான ஸக்காத்தைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லி, மக்களை ஸகாத்தின் பால் தூண்டி, ஸகாத்தைக் கணக்கிட்டுச் சேகரித்து, உரிய முறையில் அதனைப் பிரயோகிப்பதற்கான செயற்பாடுகள் மிகவும் குறைந்த பள்ளிவாசல்களிலேயே நடைபெறுகின்றன.

ரமழானிலே எத்தனை குத்பாக்கள் ஸகாத்தை மையப்படுத்தி அமைகின்றன ? ஸகாத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எத்தனை குழுக்கள் நியமிக்கப்பட்டன ? இதற்காக எத்தனை ஜமாஅத்தினரை அணுகியிருப்பார்கள் ? எத்தனை கூட்டங்கள் நடத்தியிருப்பார்கள் ?

ஆனால் ஹஜ் என்று வரும் போது கூட்டுக் குர்பானை வலியுறுத்தி ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே குத்பாக்கள். ஒவ்வொரு ஜும்ஆவின் பின்னும் துஆ ஓதுவதற்கு முன்னரே எழுந்து நின்று இஃலான்கள். கூட்டுக் குர்பான் வழிகாட்டலுக்கான துண்டுப் பிரசுர விநியோகங்கள். குர்பானுக்குப் பங்களிப்புச் செய்யக் கூடியவர்களை வீடுவீடாகச் சென்று சந்திப்பதற்கான ஏற்பாடுகள். ஏகப்பட்ட குர்பான் கமிட்டிகள். ஒன்றுக்குப் பலதடவை குர்பான் கமிட்டிக் கூட்டங்கள்.

இத்தனை களேபரங்களுடன் ஹஜ்ஜுப் பெருநாள் கூட்டுக் குர்பானி ஏற்பாடுகள். போதாமைக்கு கூட்டாகக் கொடுக்காமல் தனித்தனியாக வீடுகளிலேயே குர்பான் கொடுப்பதனால் அரசாங்கத்தால் ஏற்படக் கூடிய கெடுபிடிகள் என்று சொல்லி விடுக்கப்படும் அச்சுறுத்தல் பாணியிலான அறிவித்தல்கள். இத்தனையும் ஹஜ்ஜுப் பெருநாளைக்கென ஸுன்னத்தாக்கப்பட்ட உழ்ஹியாவை நிறைவேற்றுவதற்கு பள்ளிவாசல்கள் முன்னின்று செயற்படும் ஆரவாரங்கள்.

உழ்ஹிய்யாவின் சிறப்பை மிம்பர்களில் முழங்கும் மௌலவிமார்கள், கூடவே பள்ளிவாசலின் வேண்டுகோளுக்கிணங்க அதனைக் கூட்டாக நிறைவேற்றுவதையும் சேர்த்தே பிரசங்கம் செய்கிறார்கள். ஆறாறு பேராக ஒரே ஸஹனில் உட்கார்ந்து கூட்டாக உண்ணுவதை ஸுன்னத்தாக நினைத்துக் கொண்டிருக்கின்ற சமூகம், கூட்டுக் குர்பானையும் ஹஸ்ரத் சொல்கிறாரே என்பதற்காக ஸுன்னத்தாக்கிக் கொள்கிறது. இந்த நிய்யத்துடன் தான் அது ஸகாத்தை விட முக்கியமாக உழ்ஹிய்யாவைக் கருதிச் செயற்படுகிறது.

சமூகத்தில் காணப்படுகின்ற முக்கியமான பிரச்சினை இந்த ஊதிப் பெருப்பிக்கும் செயற்பாடுதான். உம்ராவின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்துவதற்காக வானொலியையும் மிம்பர்களையும் பயன்படுத்தும் உலமாக்கள் தொழுகையை வலியுறுத்துவதில்லை. கூட்டு உழ்ஹிய்யாவை வலியுறுத்தும் பல பள்ளிவாசல்கள் ஸகாத்தை நடைமுறைப்படுத்த முன்வருவதில்லை. மார்க்கக் கடமைகளையும் இலாப நஷ்டம் பார்த்துச் செய்யும் வியாபாரமாகவே இந்த வியாபாரச் சமூகத்தின் நிர்வாகிகள் செயற்படுத்தி வருகின்றனர்.

பள்ளிவாசல்களின் இந்த நிலைப்பாடு தான் சமூகத்தின் இன்றைய சாபக்கேடாக மாறியிருக்கிறது. பர்ளைவிட ஸுன்னத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சாரத்தைக் கழற்றி தலையை மறைக்கும் தொப்பியை அணிகின்ற கலாச்சாரம் தான் சமூகத்தை நிலைகுலையச் செய்திருக்கிறது.

இதனால் தான் சமூகத்தின் ஒற்றுமையை விட தத்தமது ஈகோக்கள் முன்னிறுத்தப்படுகின்றன. பார்க்கப் போனால் அறுத்துப் பலியிட வேண்டிய பல விடயங்கள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றையும் கூட்டாக நிறைவேற்றுவதற்கு யாராவது அறைகூவல் விடுப்பார்களா ?

1 கருத்துரைகள்:

Much much more...
Shirk, Kabr Vanakkam, Mouleed, Fatiha, Seethanakkodumai, Pennukku pen veettaar veedu kattum nayavanjhaham, Nambikkai Duroham, Kudi, Kummalam, Poramai, Vatti, Uthavi seyya manam, Allahvin sattangalai maatta thunithal, pilayaana valipaadugal, Mattavarkku koduttu uthavaa thanmai...offff ippadi ettanayo....

Post a Comment