Header Ads



மனோவிடம் உள்ள முதுகெலும்பு, முஸ்லிம் தலைமைகளிடம் இல்லையா..?

மாகாணசபை எல்லை மீள் நிர்ணய அறிக்கை மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது, அதற்கு எதிராக வாக்களிக்க விருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.

மாகாண சபை எல்லைகள் மீள் நிர்ணய அறிக்கை மீதான விசேட விவாதம் எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.

அண்மையில் சபாநாயகரின் தலைமையில் கூடிய அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய இந்த விவாதம் இடம்பெறுகின்றது.

விவாதத்தின் பின்னர் இந்த அறிக்கையானது, அருதிப் பெரும்பான்மை ஆதரவின் பொருட்டு வாக்கெடுப்பிற்கு விடப்படும்.

அரசியல் கட்சித் தலைவர்கள் கடந்த ஜூலை 20 ஆம் திகதி ஒன்று கூடியபோது, மாகாணசபைத் தேர்தலை 2019 ஆம் ஆண்டு ஜனவரி ஐந்தாம் திகதியில் நடத்த இணக்கம் கண்டனர்.

எனினும், அதற்கு ஒக்டோபர் மாதம் நிறைவடையும் முன்னர் மாகாணசபை தேர்தல் சம்பந்தமான விடயங்களில் நாடாளுமன்றில் இணக்கம் காணப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மாகாண சபை எல்லை மீள் நிர்ணய அறிக்கையானது, கடந்த மார்ச் மாதம் ஆறாம் திகதி உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது.

கிழக்கு வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் அதிகார காலம் ஏலவே நிறைவடைந்துள்ளது.

அடுத்த மாதத்துடன், வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் அதிகார காலம் நிறைவடையவுள்ளது.

இந்த சூழ்நிலையில், மாகாண சபைகளின் தேர்தல்களை ஒத்திவைக்காமல் விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்புக்களால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

எனினும், இந்த தேர்தலை பழைய முறையிலா? புதிய முறையிலா? நடத்ததுவது என்பது தொடர்பில் இன்னும் முழுமையான இணக்கப்பாடு ஏற்படவில்லை.

கடந்த அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, புதிய முறைமையிலேயே மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.

எனினும், ஏனைய கட்சிகள் பழைய முறைமைக்கு ஆதரவு தெரிவித்தன.

இந்த நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ள விவாதமானது, மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பிலேயே அமைய வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோகணேசன் வலியுறுத்தியிருந்தார்.

அதேநேரம், மாகாணசபை எல்லை மீள் நிர்ணய அறிக்கையானது, சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை கடுமையாக பாதிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், தாங்கள் அதற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்திருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசன் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.