Header Ads



முழு இலங்கை முஸ்லிம்களுக்கும், பங்காற்றிய ஹஸ்புல்லாஹ்

-எம்.எஸ்.எம். ஜான்சின்-

பேராசிரியர் ஹஸ்புல்லாவுடனான எனது முதல் சந்திப்பு வித்தியாசமானது. 1992 ஆம் ஆண்டு கரிய ஒக்டோபர்  நிகழ்வுகளை ஏற்பாடு செய்த பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் வெளியிடப் படும் அல் பிக்ர் என்ற சஞ்சிகைக்கு எனது சார்பில் கட்டுரை எழுதித்தருமாறு வேண்டப் பட்டேன். அந்த கட்டுரையை எழுதுவதற்காக திட்டமிட்ட போது முஸ்லிம்களின் வரலாறு, வெளியேற்றம், சொத்து இழப்புகள் , பொருளாதார இழப்புகள், இடம்பெயர்ந்து வாழும்  குடியிறுப்புகள் , அவர்களின் உடனடித் தேவைகள் என்ற வகையில் எனது ஆய்வு அமைய வேண்டுமென முடிவு செய்து தேடுதல் மேற்கொண்டு இறுதியில் ஜமாஅதே இஸ்லாமி கொழும்பு கிளையை அனுகி அவர்கள் சேகரித்து வைத்திருந்த தகவல்களையும் எனது தரவுகளையும் இனைத்து ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் வரைந்தேன்.  அந்தக் கட்டுரை பல்கலைக் கழக சமூகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 

இந்தக் கட்டுரையைப் பார்த்த ஹஸ்புல்லாஹ் சேர் பேராதனை பல்கலைக் கழகத்தில் வெளியேற்றப் பட்ட முஸ்லிம்கள் சம்பந்தமான ஒரு அமர்வில் யாழ்ப்பாணம் சார்பாக பேச வருமாறு சுபியான் மௌலவி மூலமாக அழைக்கப் பட்டேன்.  அங்கு தான் 38 வயதான துடிப்புடன் கூடிய பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்களைச் சந்தித்தேன். அன்புடன் வரவேற்று என்னை உபசரித்து கூட்டத்தில் பேசுமாறும் கேட்டுக் கொண்டார். 

அதன் பிறகு எனது கட்டுரையைப் பற்றி பேசினோம். தொடர்ந்து எழுதும் படி கூறினார். அது தான் ஆங்கிலத்தில் இடம்பெயர்வைப் பற்றி முதல் முதல் வெளியிடப் பட்ட கட்டுரை. தொடர்ந்து அதே கட்டுரையை ஐலண்ட் பத்திரிகையில் வெளியிட்டேன். தொடர்ந்து அதனை தமிழில் மொழி பெயர்த்து தருமாறு சுபியான் மௌலவி கேட்டார். அந்த தமிழிலான கட்டுரை அகதி இதழில் வெளிவந்தது. தொடர்ந்து அகதி இதழுக்கு ஆக்கங்களை எழுதி வழங்கியதுடன் , சரி பார்த்தல் போன்ற பணிகளையும் செய்து கொடுத்தேன். என்னை என் எம் ஆர் ஓவில் இனையுமாறு அழைப்பு விடுத்தார் மௌலவி. ஆனால் நான் வெளியிலிருந்து தேவையான ஒத்துழைப்புகளை வழங்க மட்டுமே உடன்பட்டேன். 

1993 இல் ஐக்கிய நாடுகள் சபை  முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்ய என் எம் ஆர் ஓ முடிவு செய்து முகாம்களுக்கு அழைப்பு விடுத்தது. மூன்று பேரே வந்திருந்தனர்.  எனது பல்கலைக்கழக நண்பர்கள் பலரை சுமார் ஐம்பது மட்டில் அழைத்துச் சென்று அந்த ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தினோம். அங்கு பேராசிரியர்  ஹஸ்புல்லாஹ்வும் சுபியான மௌலவி உட்பட சிலர் உட்சென்று ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்றைக் கையளித்தனர். 

தொடர்ந்து புத்தளத்தில் ஒரு மாபெரும் கூட்டமும் கண்காட்சியும் இடம்பெற்றது. அங்கும் ஹஸ்புல்லாஹ் சிறந்த உரையை ஆற்றினார். இதனால் எங்களுக்கிடையில் நெருக்கம் அதிகமாகியது.  மன்னார் மாவட்ட முஸ்லிம்களுடனும் நெருக்கம் ஏற்பட்டது. 

பிறகு ஹஸ்புல்லாஹ் அவர்கள் மேலதிக கல்விக்காக வெளிநாடு சென்ற நிலையில் நானும் வெளிநாடு சென்றுவிட்டேன். மீண்டும் இடையே ஹஸ்புல்லாவைச் சந்தித்த போதும்  2014 ஆம் ஆண்டு நான் வெளியிட்ட மணிபல்லவத்தார் சுவடுகளைப் பார்வையிட்டு என்னை பாராட்டினார்.   அவர் செய்த ஆய்வொன்றுக்கு எனது நூலில் இருந்து பல தகவல்களை எடுக்க அனுமதி கேட்டார். யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு வாழ்வியல் வெளியேற்றம் பொருளாதார இழப்புகள் மீள்குடியேற்றம், மீள்குடியேற்ற சவால்கள்  உட்பட ஏராளமான புள்ளிவிபரங்களைக் கொண்டுள்ளது.   அவர் ஒரு புவியியல் துறை பேராசிரியர் என்பதால் யாழ்ப்பாண படம், முஸ்லிம் குடியிருப்புகளின் படம், முஸ்லிம்களின் வர்த்தக நிறுவன அமைப்பு படம், விற்கப் பட்ட சொத்துக்களின் விபரங்கள் என்பன அந்த ஆக்கத்தில் முழு விபரங்களுடன் தரப்பட்டுள்ளது.  அந்த நூலை எப்படியாவது வெளியிட  வேண்டியது யாழ்ப்பாண முஸ்லிம்களின் கடமையாகும். 

2014 இக்கு பிற்பட்ட காலத்தில் அடிக்கடி என்னுடன் தொலைபேசியில் உரையாடுவார். கடந்த முறை எனது ஆக்கத்தை ஜெனீவாவில் சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொண்டார். கடந்த தேசிய மீலாத் விழாவின் போது ஜனாதிபதிக்கு தயாரிக்கப் பட்ட மகஜரை வாசித்து விட்டு அதனை சபாநாயகரிடன் சமர்ப்பிக்கும் படி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். 


முல்லைத்தீவைப் பற்றிய அவரது ஆய்வு நூல் மிகச் சிறப்பானது. மன்னாரைப் பற்றியும் அவர் நிறையவே எழுதியுள்ளார். அந்த வகையில் மன்னார் முஸ்ளிம்களுக்கு மட்டுமல்ல யாழ் முஸ்லிம்களுக்கும் அவரது இழப்பு ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. 

மாகாண சபை எல்லை மாற்றங்களின் போது முஸ்லிம்களின் பிரதினிதித்துவம் குறையும் என்பதை கண்ட அவர் புதிய எல்லைகளை பிரேரித்து முழு இலங்கை முஸ்லிம்களுக்கும் பங்காற்றியுள்ளார். எனவே அவரின்  மரணத்தால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் முழு இலங்கை முஸ்லிம்களுக்கும் பிரதினிதித்துவ இழப்புக்கு வழி செய்து விடலாம். எனவே அரசியல்வாதிகளும்  புவியியல் துறைசார் நிபுனர்களும் அவரின் வெற்றிடத்தை நிரப்பி புதிய  மாகாணசபை எல்லை நிர்ணயத்தால் முஸ்லிம்களுக்கு ஏற்படப் போகும் இழப்புகளை தடுத்து நிறுத்த வேண்டியது கட்டாயமான ஒரு சமூகக் கடமையாகும். 

யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவர் சமூகம் மீது கொண்டிருந்த பற்றை முதன்மைப் படுத்தி அவருக்கு சுவனபதியை வழங்குவாயாக! அவரது குடும்பத்தினரது ஹலாலான தேவைகளையும் இலகுவான முறையில் நிறைவேற்றி வைப்பாயாக! ஆமீன்

No comments

Powered by Blogger.