Header Ads



மழுப்பினார் மகிந்த, தனக்கு ஞாபகமில்லை என கைவிரிப்பு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சபாநாயகருமான கரு ஜெயசூரிய தனக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தாரா என்று ஞாபகத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

கொழும்பில் நேற்று  குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச.

“முன்னதாக கரு ஜெயசூரியவினால், அளிக்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் அமைந்திருந்தன.

அன்றிரவு 11.20 மணியளவில், கரு ஜெயசூரியவிடம் இருந்து கிடைத்ததாக கூறப்படும் தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் தான், அவர்கள் கேள்விகளை எழுப்பினர்.

தி நேசன் இதழின் ஆசிரியர் லலித் அழககோனிடம் இருந்தும் கூட  எனக்கு அழைப்பு ஒன்று வந்திருந்தது.

அதன் பின்னர், கீத் நொயார் விடுவிக்கப்பட்டார். வழக்கமாக எனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வரும். ஒவ்வொன்றையும் என்னால் நினைவில் வைத்திருக்க முடியாது.

அந்த தொலைபேசி அழைப்பு குறித்தே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கேட்டனர்.

கடத்தப்பட்ட ஒருவர் விடுவிக்கப்பட்டால் அது தவறா என்று நான் அவர்களிடம் கேட்டேன்.” என்றார்.

அதையடுத்து. ஊடகவியலாளர்கள், மகிந்த ராஜபக்சவிடம், உண்மையில் கரு ஜெயசூரியவின் தொலைபேசி அழைப்பை உங்களால் நினைவு கூர முடியவில்லையா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர்,“ அவர்கள் அப்படிக் கூறியிருப்பினும், கரு ஜெயசூரியவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததை என்னால் நினைவுகூர முடியவில்லை.

நான் அதிபராக இருந்த போது 10 மணிக்குத் தூங்கச் செல்வதில்லை. ஏனென்றால், எனது அமைச்சர்களிடம் இருந்து பெருமளவு அழைப்புகளை பெற்றுக் கொள்வேன்.

இந்த விசாரணைகள் ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. தற்போதைய அரசாங்கத்தில் உள்ள தலைவர்கள், எனக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள்.

அவர்களுக்குத் தெரியாமலோ, அவர்களின் ஆசியைப் பெற்றுக் கொள்ளாமலோ, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னிடம் வாக்குமூலம் பெற வந்திருக்க முடியாது” என்று பதிலளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.