August 28, 2018

வடபுலம் முஸ்லிம்களுக்கு என தனியான இதிகாசங்களையும்,புராணங்களையும் தந்த பூமி

(பர்வீன்)

இங்கு இப்போதுகளில் காட்டுதர்பார் நடத்துகின்ற அரசியல் வாதிகளை இந்த அரசியலுக்கு கொண்டுவந்தவர் மர்ஹூம் நூர்தீன் மஷூர்.தன்னுடைய சொந்த செல்வத்தினை மக்களுக்காக செலவழித்து தனது ஈகைப்பண்பின் மூலம் ஆரம்பம்தொட்டே மக்கள் மத்தியில் தனக்கென்று தனியான அடையாளத்தை வகுத்துக்கொண்டவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

 மறைந்த பிரதியமைச்சர் நூர்தீன் மஷூர் நினைவாக மன்னார்,எருக்கலம்பிட்டியில்  வருடாந்தம் நடைபெற்றுவரும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டான விளையாட்டுப்போட்டியின் பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) எருக்கலம்பிட்டியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.  அங்கு தொடர்ந்து அவர் கூறியதாவது 

சகோதரர் நூர்தீன் மஷூர் அவர்களை நினைவு படுத்தாமல் இந்த வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் நகர்வுகள் பற்றி பேச முடியாது.மர்ஹூம் நூர்தீன் மஷூர் என்கின்ற தனிமனிதன் இந்த மண்ணையும் இங்குள்ள மனிதர்களையும் ஒற்றுமைப்படுத்திய மாதிரி,இந்த வன்னி மக்களை  யாராலும் ஒற்றுமைப்படுத்த முடியாது. இந்த எருக்கலம்பிட்டி கிராமம் நாகவில்லுக்கு இடம்பெயர்ந்த போது, தனிமனிதனாக அந்த மக்களுக்கு உதவிவந்தவர். ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் எனும் இந்த இயக்கத்தின் ஆரம்ப கட்ட போராளியாக செயற்பட்டு,மறைந்த தலைவர் அவர்களின் கரத்தினை பலப்படுத்தியவர். 

சொற்ப காலங்கள் பாராளுமன்றத்தில் இருந்தாலும், அவர் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த அந்த குறுகிய காலத்தில் பிரதியமைச்சராக இந்த மண்ணுக்கு செய்த சேவைகள், இந்த மண்ணுக்கு நிலையான அரசியல் அந்தஸ்தை பெற்றுக்கொடுப்பதில் அவரது பங்களிப்பு போன்றவற்றை யாராலும் மறுதலிக்க முடியாது. இன்று இந்த பிரதேசத்தில் காட்டு தர்பார் நடத்துகின்ற அரசியல்வாதிகளையும் கூட  அரசியலில் அறிமுகப்படுத்துவதில் முன்னின்றவர். துரதிஷ்ட வசமாக அவர் அன்று செய்த அந்த பிழை பின்னர் அவரை பழிவாங்குகின்ற விடயமாக மாறியிருந்தாலும், மர்ஹூம் நூர்தீன் மஷூருக்கு ஒத்த,அவருக்கு நிகரான ஒரு தலைமையை இந்த வன்னிப்பெருநிலம் பெற முடியாது என்ற வகையில் பாரிய சேவையை செய்துவிட்டு மிகவும் இளவயதிலேயே எங்களைவிட்டு அகலமாய் மறைந்து போனார். அவரது சேவைகளை எல்லாம் வல்ல இறைவன் பொருத்திக்கொள்ள வேண்டும்.

எருக்கலம்பிட்டியின் பூர்வீகத்தை கொண்ட எல்லோரும் நாட்டின் நாலாபுரத்திலிருந்தும் இன்று இங்கு கூடியிருப்பது மிகுந்த சந்தோசத்தை தருகின்றது.எருக்கலம்பிட்டியுடைய கலை,கலாச்சாரபின்னணியானது தனித்துவமானது.இந்த மண்ணானது இவ்வாறான விளையாட்டு விழாக்களோடு மட்டும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட மண் கிடையாது. இந்த மண்ணுக்கென்று தனித்துவமான பூர்வீக வரலாறு இருக்கின்றது அந்த பூர்வீகத்தை புலிகளிகள் இந்த மண்ணை விட்டு பலவந்தமாக நம்மை வெளியேற்றியதன் பின்னால் நாம் படிப்படியாக இழந்து வந்திருக்கின்றோம். 

எருக்கலம்பிட்டியை சூழவும் ஏழு இறைநேசர்களின் அடக்கஸ்தலங்கள் இருக்கின்றன. கீழக்கரை,காயல்பட்டினம்  மற்றும் எமன் தேசத்தை சேர்ந்த இறைநேசர்களின் அடக்கஸ்தலங்களை சுமந்திருக்கின்ற ஆன்மீக பூமியிது.இங்குள்ள ஆன்மீக மற்றும் கலை கலாச்சார பாரம்பரியமும் நீண்ட வரலாற்றினை கொண்டது. இந்த மண்ணிலிருந்து உருவான நாட்டார் பாடல்களும் நாட்டுக்கூத்துக்களும்,வில்லுப்பாட்டு விற்பன்னர்களும் நாடுமுழுவதும் பிரசித்தமாகி இருப்பதனை யாராலும் மறுக்க முடியாது.

வடபுலம் என்பது முஸ்லிம்களுக்கு என்று தனியான இதிகாசங்களையும்,புராணங்களையும் தந்த பூமி. யாழ்ப்பாணத்திலே மொஹிதீன் புராணம் தொடங்கி இந்த மண்ணிலும் மூன்று புராணங்களையும் யாத்த புலவர்கள் வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. இவ்வாறான புகழ்பெற்ற வரலாற்றுக்குரிய இந்த மண்ணிலே இவ்வாறான விழாக்கள் நமது கலாச்சார பாரம்பரியங்களை மீட்டிக்கொள்கின்ற முயற்சியாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது.இதனை விடவும் அதிகமாக நாம் மறந்து போன,இழந்து போன புதுப்பிக்கப்படவேண்டிய எங்களது பழைய கலாச்சார அம்சங்களை நாங்கள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்.


கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை இந்த எருக்கலம்பிட்டி மண்ணுக்கு நாட்டின் பல பாகத்திலிருந்தும் பெருந்திரளான மக்கள் வந்து இணைந்தார்கள். அதற்க்கு காரணம் பேராசியர் ஹஸ்புல்லாஹ்வின் திடீர் மரணமாகும். இந்த சமூகத்திற்கென்று தனித்துவமான பாரிய பங்களிப்பை செயத கல்விமான், எங்களுக்கிடையில் வாழ்ந்து மறைந்த இந்த மண் ஈன்றெடுத்த பெரும் புத்திஜீவி  அவர்களை பற்றியும் இங்கு நினைவு கூறவிரும்புகிறேன். 

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் இந்த மண்ணுக்கு நடந்த அவலங்களை ஆவணப்படுத்துவதிலேயே அவரது பங்களிப்பானது வேறுயாருடனும் ஒப்பிட முடியாததாகும். இந்த மண்ணின் முதலாவது பேராசிரியர் மாத்திரமல்ல, இந்த மண்ணுக்கும்,மக்களுக்கும் நடந்த அநீதிகளை சர்வதேச மயப்படுத்திய எத்தனை பேர் இருந்தாலும் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வுடைய பங்களிப்பும்,தனிநபராக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் அடுத்தவர்களின் பங்களிப்புகளை ஒருதராசிலும் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் பங்களிப்பை ஒரு தராசிலும் வைத்தாலும் பேராசிரியரின் பங்களிப்புத்தான் கனதியானதாக இருக்கும்.புலம்பெயர்ந்த முஸ்லிம்களின் உரிமை போராட்டத்தை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்ற அவர் இந்த சமூகத்திற்கு செய்துவிட்டு சென்றுள்ளார்.

அதுமாத்திரமல்ல பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளராக கடமையேற்ற நாள்தொடக்கம் நாடுதழுவிய ரீதியில் பல கல்வியாளர்களையும்,புத்திஜீவிகளையும் உருவாக்கிய பெருமைக்குரியவர். அவரைப்பற்றி நீண்ட நேரம் பேச முடியும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பூரண ஆதரவுத்தலமான இந்த எருக்கலம்பிட்டி மண் இந்த வன்னி நிலப்பரப்பிற்கு நிலையான அரசியல் ரீதியான அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்த மண். மர்ஹூம் நூர்தீன் மஷூருக்கு பின்னர் முத்தலிப் பாவா பாரூக் சில காலங்கள் பாராளுமன்ற பிரதிநியாக செயற்பட்டார். அவ்வாறே சகோதரர் ரயீஸ் வடமாகாண சபையில் எமது பிரதிநியாக செயற்பட்ட ஒருவர். அண்மையில் அவர் தானாகவே முன்வந்து தனது மாகாண சபை உறுப்புரிமையை விட்டுக்கொடுத்துள்ளார். அது தற்போது சகோதரர் நியாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.சகோதரர் ரயீஸ் அவர்களின் அந்த தியாகப்பண்பை,விட்டுக்கொடுக்கும் உயர்ந்த எண்ணத்தை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்த மண்ணிலே நமக்குள் ஒற்றுமை வளர வேண்டும். நாம் நிறைய நெருக்குவாரங்களுக்கு உட்பட்டிருக்கிறோம்.நிறைய இழந்திருக்கிறோம் எனவே இந்த மண்ணை முன்னேற்றுகின்ற விடயங்களில் முன்னின்று செயற்பட வேண்டும்.அண்மைக்காலமாக கோடிக்கணக்கான ரூபாய்களை கொண்டு இந்த பிரதேசத்தில் அபிவிருத்தி செய்கின்ற ஒரு வாய்ப்பு எமக்கு கிடைத்திருக்கிறது. இன்னும் இதனைவிடவும் பலமடங்கு அபிவிருத்திகளை செய்யவேண்டும்.இந்த மண் எங்களது சொந்த பூர்வீக மண் என்கின்ற உரிமையோடு நடமாடுகின்ற வகையிலேஇந்தப்பிரதேசத்தை நவீன மயப்படுத்த வேண்டும்.

மன்னார் பிரதேச சபையை பொறுத்தமட்டில் எமக்கு இரண்டு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எமது அரசியல் பலத்தை உரசிப்பார்க்கின்ற நிலை வருகின்ற போது இந்த இரு அங்கத்தவர்களும் தலைமையின் கரத்தை பலப்படுத்துவார்கள் என்கின்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த இருவருமே ஆட்சியை தீர்மானிக்க சக்தியாக இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment