August 11, 2018

"அலைந்து திரியாமல், பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க ஒன்றுபடுங்கள்" - ரிஷாட்

-ஊடகப்பிரிவு-

பெரும்பான்மைச் சமூகம் அதிகமாக வசிக்கும் இடங்களில் சிதறி வாழுகின்ற நமது சமூகத்தினர் கட்சி, நிறம் மற்றும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமைப்படுவதன் மூலமே தமது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க முடியுமெனவும், கடந்த பொதுத்தேர்தலில் அனுராதபுர மாவட்டத்தில் நமக்குக் கிடைத்த வெற்றி இதனை நன்கு உணர்த்தியது என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அனுராதபுரம், நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் மைதானத்தில், புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர், பாடசாலையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார். 

பாடசாலை அதிபர் எச்.எம்.ஷஹீத் தலைமையில் இன்று (11) இடம்பெற்ற இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் உபதலைவர் ஏ.ஆர்.எம்.தாரிக் ஆகியோரும் உரையாற்றினர். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஷாஹுல் ஹமீத், பிரதேச சபை உறுப்பினர் பஸ்மி ஆகியோர் உட்பட பல அதிதிகள் கலந்துகொண்ட இந்த விழாவில், அமைச்சர் மேலும் கூறியதாவது,

சுமார் 70 வருடங்களாக கட்சிகளுக்கும், நிறங்களுக்கும் பின்னால் அனுராதபுர மாவட்ட மக்கள் அலைந்து திரிந்ததனால்தான் நமக்குரிய பிரதிநிதித்துவத்தை அடைய முடியாது போய்விட்டது. இதனால் சமூகத்தின் தேவைகளையும், குறைகளையும் தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

கடந்த பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு சிறிது காலத்துக்கு முன்னர், நாங்கள் இந்தப்  பிரதேசத்துக்கு வந்தபோது, இங்குள்ள மக்கள் பட்ட கஷ்டங்களை கண்ணாரக் கண்டோம். சில கிராமங்களில் குடிப்பதற்கு குடிநீர் வசதி இருக்கவில்லை. பல பள்ளிவாசல்களில் வுழூச் செய்வதற்குக் கூட நீர் இருக்கவில்லை. பாதைகள் கரடுமுரடானதாகவும், மழை காலங்களில் சேறும் சகதியும் நிறைந்ததாகவும் இருந்ததினால், மக்கள் தமது அன்றாட வாழ்வில் பட்ட துன்பங்களைக் கண்டோம். எனவேதான், இந்த மாவட்டத்தில் வாழும் சிறுபான்மைச் சமூகத்தை ஒன்றுதிரட்டி,  அவர்களுக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு முடிவு செய்தோம். பெரும்பான்மைக் கட்சிகளின் பின்னாலும், அந்தக் கட்சிகளின் அமைப்பாளர்களின் பின்னாலும் இலக்கு இல்லாமல், அங்கும் இங்கும் மக்கள் ஓடித்திரிவதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினோம். 

இந்த மாவட்டத்தில் வாழும் நமது சமூகத்தின் வாக்குகளை உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபைகளின் மூலம் பெற்றுக்கொண்டவர்கள் கூட, மக்களின் தேவைகளை நிறைவேற்றாது இருந்தனர். உங்களை ஒரு மாயையிலேயே அவர்கள் வைத்திருப்பதாகவே எமக்குத் தோன்றியது.

எனவேதான், சமூகத்தைப்பற்றி சிந்திக்கக் கூடிய, பாராளுமன்றம் சென்றால் நமது மக்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒருவரை அடையாளங்கண்டோம். சமூகத்தின் மீது பிரக்ஞை உணர்வுள்ளவராகவும், தொழில் அதிபராகவும் இருந்த இஷாக் ரஹ்மானை இறைவனின் உதவியால் எமது கட்சியின் சார்பில், ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் போட்டியிடச் செய்தோம். பிரதமர் ரணிலுடன் செய்துகொண்ட உடன்படிக்கை இதைச் சாத்தியமாக்கியது.

பொதுத்தேர்தலில் எவருமே நினைத்துப் பார்த்திராத வகையில், மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் இஷாக் ரஹ்மான் வெற்றிபெற்று சரித்திரம் படைத்தார். பல்வேறுபட்ட சூழ்ச்சிகளைத் தாண்டி, பொதுத்தேர்தலில் நமது சமூகத்தைச் சார்ந்தவர்கள் கட்சி, சின்னம், நிற பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து வாக்களித்ததினாலேயே இந்த மாவட்டத்தில் அவர் வெற்றிபெற்றார். இந்த செயற்பாட்டை நாங்கள் வேறுசில மாவட்டங்களில் செயற்படுத்திய போதும், இறைவன் அங்கு நாடவில்லை.

அனுராதபுர மாவட்டத்துக்கு நமது வாக்குப் பலத்தினால் கிடைத்த இந்த அரசியல் அதிகாரத்தின் குரல்தான், இன்று பாராளுமன்றத்திலே நமது மக்களுக்காக ஒலித்துக்கொண்டிருக்கிறது. நமது பிரச்சினைகள் பாராளுமன்றத்திலும், அமைச்சர்களிடமும், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் எடுத்துக்கூறப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் கிடைக்கப்பெறுவதற்கு இந்த அரசியல் பலம்தான் உதவுகின்றது.

இனிவரும் காலங்களிலும் இஷாக் ரஹ்மான் எம்.பி தனது பணிகளை சிறந்த முறையில் தொடர்வார் எனவும், நமது சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பார் என்ற நம்பிக்கையும் எமக்கு இருக்கின்றது. எனவே, இறைவன் நமக்குத் தந்த இந்த அரசியல் பிரதிநிதித்துவத்தையும், சமூகத்துக்கான இருப்பையும் தொடர்ந்தும் பாதுகாப்பதே நமது கடமையாகும்.
எதிர்வருகின்ற தேர்தல்களில் நீங்கள் பெரும்பான்மைக் கட்சிகளுக்குப் பின்னால் அலைந்து திரியாமல், பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்காக ஒன்றுபடுங்கள். அதேபோன்று, எதிர்வரும் வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் இந்த மண்ணின் மைந்தனும், சமூக சேவையாளருமான தாரிக் அவர்களை எமது கட்சியின் சார்பில் வேட்பாளாராக நிறுத்த முடிவு செய்துள்ளோம்.

எனவே, இந்த மண்ணின் மாகாண சபை பிரதிநிதித்துவத்தை, நீங்கள் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைந்து பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். 

1 கருத்துரைகள்:

Does Ishaq rahman MP ACMC? Never see him any ACMC meeting.

Post a Comment