Header Ads



மாவனல்லையில் சட்டவிரோத, சாராயம் விற்பனை - பின்னணியில் மஹிந்த ஆதரவு முக்கிய எம்.பி.

மாவனல்லை நகரில் சட்டவிரோதமான முறையில் சாராயம் உற்பத்தி செய்த பொது ஜன பெரமுனவின் மாவனல்லை பிரதே சபை உறுப்பினர் பிரியந்த அல்லேகம உள்ளிட்ட குழுவினர்  பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பான தகவலை லங்கா ஈ நியூஸ் எனும் பிரபல சிங்கள இணையதளமொன்று நேற்று வியாழக்கிழமை வெளியிட்டிருந்தது. 

அமைதியான மாவனல்லை நகரை கெட்ட நடத்தையுள்ள பிரதேசமாக மாற்றுவதற்கு அங்குள்ள பொது ஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் சிலர் முயற்சிப்பதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொது ஜன பெரமுனவில் போட்டியிட்டு மாவனல்லை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட பிரியந்த அல்லேகம என்பவர் உள்ளிட்ட குழுவினர் சட்டவிரோதமான முறையில் சாராயம் உற்பத்தி செய்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய மாவனல்லை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் நேற்று முன்தினம் புதன்கிழமை  மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, சாராயம் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் ‘கோடா’ என்ற திரவம் அடங்கிய 125 கலண்களுடன் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது,  பொது ஜன பெரமுன எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் நடாத்தவுள்ள ‘மக்கள் சக்தி’ என்ற அரசுக்கு எதிரான பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்குவதற்காகவே மேற்படி சாராயம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், இந்த சம்பவத்துடன் பொது ஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரதியல் நியூஸ் (2018.08.31)

No comments

Powered by Blogger.