Header Ads



இயற்கையின் சீற்றம், அவதாமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலையின்போது கடும் காற்றுத் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் உள்ளவர்கள் தமது வீடுகளுக்கு அருகிலுள்ள பாரிய மரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

கடுமையான சுழல் காற்றுக் காரணமாக குருநாகல் மாவட்டத்தின் வீரம்புககெதர பகுதியில் 80 வீடுகள் நேற்று சேதமடைந்தன. நேற்றுமுன்தினம் குருநாகலில் 15 வீடுகளும் 11 கட்டடங்களும் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட வீடுகளின் துப்புரவுப் பணிகளில் முப்படையினரும் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

களுத்துறை மாவட்டத்திலும் கடும் காற்றினால் சில வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் மீட்புப் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதுடன், தேசிய காப்புறுதி நிதியத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மத்திய மலையகப் பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையினால் லக்ஷபான, கனியன், நோட்டன்பிரிட்ஜ், மவுசாக்கலை மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் களனி கங்கையில் கித்துல்கல மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்திருப்பதுடன், நாவலப்பிட்டியவில் மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மத்திய மலைநாடு, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும், களுத்துறை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 100 மில்லி மீற்றர் மழைபெய்யும் என்றும், காலி, குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 70 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைபெய்யும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மலையகப் பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 60 மீற்றர் வேகத்தில் காற்றுவீசக்கூடும். எனவே தமது வீடுகளுக்கு அருகிலுள்ள பாரிய மரங்கள் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன், பொது இடங்களில் உள்ள மரங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் 117 என்ற விசேட தொலைபேசி இலக்கத்துக்குத் தெரிவிக்க முடியும் என பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டினார். அது மாத்திரமன்றி மலையக பகுதி மக்கள் மண்சரிவு அபாயம் தொடர்பில் விளிப்புடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

கரையோரப் பகுதிகளில் வீசக்கூடிய கடும் காற்றுத் தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

மகேஸ்வரன் பிரசாத்

No comments

Powered by Blogger.