Header Ads



ஹஐ் பயணம் (சிறுகதை)


அதிகாலை 4 மணி என்பதைக் காட்ட மேசை மணிக்கூட்டின் அலாரம் அந்த அமைதியான நேரத்தில் ஒலித்து உலுக்கியது. காமீல் காக்காவின் மனைவி அகீலா உடனே எழுந்து 'என்னங்க என்னங்க 4 மணியாயிடிச்சி சுருக்கா எழும்புங்கோ' என்றாள்.

விழுந்தடித்துக் கொண்ட காமீல் காக்கா தான் கீழே படுத்த பாயை சுருட்டி வைத்துவிட்டு கிணற்றடியை நோக்கினார். பின்னர் அவரின் ஜுப்பா ஆடையை அணிந்து அவசரமாக பள்ளிவாயிலை நோக்கி விரைந்தார்.

காமீல் காக்கா அவ்வூரின் பள்ளிவாயில் முஅத்தினார். கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கும் கூடுதலாக அப்பள்ளிவாயிலில் கடமை புரிந்து வருகின்றார். அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடித்தவுடன் சரியாக அதிகாலை சுபஹுத் தொழுகைக்கான நேரம் வந்ததும் ஒலிபெருக்கியில் பாங்கு சொல்லி முடிப்பார்.

இதன் பின்னர்தான் பள்ளிவாயில் கலகலப்பாகத தோற்றமளிக்கும். அக்கம் பக்கத்து ஆட்கள் எல்லாம் தொழுகைக்காக வந்து விடுவார்கள். தொழுகை முடிந்தவுடன் செய்ய வேண்டிய கருமங்களைச் செய்துவிட்டு பின்னர் வீடு செல்வார் காமீல் காக்கா.

நோன்புப் பெருநாள் முடிந்தும் மூன்று வாரங்களாகி விட்டன. ஹஜ்ஜுப் பயணம் சம்பந்தமான பயான்கள்தான் (பிரசங்கம்) ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையிலும் இடம்பெற்று வந்தன. ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜுப் பயணம் செல்லும் ஆண், பெண் ஹஜ்ஜாஜிகளுக்கு “ஹஜ்ஜி ஏற்பாடு” என்ற அறிவுறுத்தற் கூட்டம் இப்பள்ளிவாயிலிலேயே நடைபெறும்.

ஹஜ் பயணம் செல்லும் அடுத்தடுத்த கிராமங்களிலிருந்தும் இருபால் ஹஜ்ஜாஜிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். இதற்கான சகல ஒழுங்கு ஏற்பாடுகளையெல்லாம் இந்த காமீல் முஅத்தினார்தான் செய்வது வழக்கம்.

பிரதி வருடமும் இதனை நடாத்தும் உலமாக்கள் அறிவுறுத்தலோடு, பயான்களையும செய்வார்கள். வழமையாகக் கூறப்படுவது இப்பயணம் வசதி வாய்ப்புக்கள் இருந்தும் அனேகருக்கு அங்கு செல்லும் வாய்ப்பு கிட்டுவதில்லை.

எந்தவொரு முஸ்லிமும் இப்பயணம் செல்ல வேண்டுமென்று மனதில் அதிக ஆசைகளை வளர்த்துக் கொண்டு வருகின்றாரோ, அவரை அல்லாஹ் ஏதோ ஒரு வகையில் இப்புனித பயணத்திற்கு அனுப்பியே வைப்பான். எத்தனையோ முஸ்லிம்கள் கோடீஸ்வரர்களாக இருந்தும் புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றாமலேயே அல்லாஹ்வின் கடனாளியாக இவ்வுலகை விட்டும் மறைந்து விடுகின்றார்கள்.

மகா வல்லவன் சக்தியெல்லாம் கொண்டவனுமான அல்லாஹ்வும் கூறியிருக்கின்றான். மனிதர்களிடம் எவ்வளவுதான் பணம் செல்வங்கள் குவிந்திருக்கலாம் என்மீது பன்மடங்கு அன்பு வைத்தவர்களை மட்டும்தான் புனித இல்லமான கஃபாவை நாடச் செய்வேன். இவர்கள்தான் என்னுடைய நல்லடியார்கள் என்றும் கூறுகின்றான். என்றெல்லாம் பிரசங்கங்கள் நடந்து கொண்டிருக்கும்.

இப்பிரசங்கங்களெல்லாம் நிகழும் போது, காமீல் முஅத்தினார் பள்ளிவாயிலின் பின்பக்க மூலையில் இருந்து கொண்டு, கேட்டவண்ணம் உள்ளம் நொந்து கண்ணீர வடிப்பார். யாஅல்லாஹ் உன்னுடைய புனித இல்லமான கஃபாவை தரிசிக்க மிக மிக ஆசைப்படுறேன் யாஅல்லாஹ் ஆனால் என்னிடம் எந்த வசதி வாய்ப்பும் எதுவுமில்லை, நீ நாடியவர்களை மாத்திரம் தான் அங்கு செல்லும் பாக்கியத்தை அருள்வேன், என்றெல்லாம் உபதேசம் செய்கிறார்கள் யாஅல்லாஹ்.

உன்மீது மிகமிக அன்பு வைத்திருக்கிறேன், நீ நாடினால் என்னை அங்கு அனுப்பி வைத்திடு நாயனே என்று பிரார்த்திப்பார். காமீல் முஅத்தினாருக்கு மூன்று பெண் பிள்ளைகள், இளையவள் தரம் 5இல் படிக்கின்றாள். மற்ற இருவரும் 8, 7ஆம் தரங்களில் படித்துவிட்டு மேற்கொண்டு கல்வியைத் தொடர முடியாமல் இடைவிலகியவர்கள்.

இரு பெண் மக்களும் குர்ஆனை நன்கு ஓதக்கற்றுக் கொண்டவர்கள். அதனால் வீட்டில் 20 பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அன்று அஸர் தொழுகை முடிந்து வீடு சென்று காமீல் முஅத்தினாரின் இரு கரங்களையும் பற்றிக் கொள்கிறாள் இளைய மகள் ருஸ்தா.

வாப்பா, வாப்பா இந்த ஹஜ்ஜுப் பெருநாளைக்காவது எனக்கு நல்ல உடுப்பு ஒன்னு சரி வேங்கித் தாங்க வாப்பா, என்னோட படிக்கிற புள்ளைங்களெல்லாம் என்ட நோம்புப் பெருநாள் உடுப்பப் பாத்து கேலி பண்ணுறாங்க வாப்பா என்று மிக மிக நெகிழ்ந்து சொன்னாள்.

காமீல் வழமையாக நடைபாதை வியாபாரிகளிடம் பாவனை குறைந்த ஐம்பது வீத விலைக்கழிவுள்ள துணிகளை வாங்கியே தனது மூன்று மக்களுக்கும் புத்தாடைகளாக தைத்துக் கொடுப்பார். தன் மகள்மாரோ எதுவும் பேசாமல் அவ்வாடைகளை அணிந்து கொள்வார்கள்.

இந்த ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முன்னரே இளைய மகளின் இவ்வாறான வார்த்தைகளைக் கேட்டதும் தன்னை யாரோ தாக்கியது போன்றே இருந்தது காமீலுக்கு. பள்ளிவாயிலால் கிடைக்கும் வருமானம் குடும்பச் செலவுக்கே போதாமல் இருக்க எப்படிடா கண்ணு நல்ல ஆடை என்னால் வாங்கித் தரமுடியும். முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட மாதிரி பேசுறாயே மகளே என்று அவரது மனந்தான் சொன்னது அல்லாஹ் நாடினால் பார்க்கலாம் மகளே என்று தேற்றினார்.

ஹஜ்ஜுப் பெருநாளைக்கும் இன்னும் 16 நாட்களே இருந்தன. அன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்கு முன் ஆடம்பரமான பிக்கப் வாகனமொன்று வந்து அதிலிருநது நால்வர் இறங்கி அன்றைய ஜும்ஆவில் கலந்துகொண்டார்கள்.

அவர்களின் நடை உடை பாவனைகளிலும் செல்வச்செழிப்பு காணப்பட்டன. அன்றைய ஜும்ஆ முடிந்து அனைவரும் கலைந்து சென்ற பின்னர் பள்ளிவாயில் நிருவாகத்தினர் நால்வரிடம் அவர்கள் வந்த நோக்கத்தைக் கூறிவிட்டு, முஅத்தினாரின் குடும்ப விபரங்களையெல்லாம் கேட்டறிந்துவிட்டு அவரை வரவழைக்குச் செய்தார்கள்.

காமீல் முஅத்தினார் வந்ததும் வந்தவர்களிடம் அறிமுகப்படுத்தினார் பள்ளித் தலைவர். உடனே முஅத்தினாரிடம் நிருவாகத்தினர் என்ன முஅத்தின் ஷாப் ஒங்கள அதிஸ்டம் தேடிவந்திருக்கு, நீங்க நெனைச்சிம் பாத்திருக்க மாட்டிங்க ஒங்கள ஹஜ்ஜுப் பயணம் அனுப்ப அந்த அல்லாஹ் நாடிட்டான். அதனைச் சொல்ல வந்திருக்காங்க ஷாப் என்றார்கள் நிருவாகத்தினர்.

அப்போ இவங்கெல்லாம் யாரு!

இவங்கதான் ஒங்கள அனுப்பி வெய்க்கப்போற வங்க போன வருஷமும் மூணு முஅத்தின்மார்கள அனுப்பி வெச்சாங்களாம். இந்த வருஷமும் ஒங்களோட சேத்து இன்னும் ரெண்டு பேராம். இப்போது ஒங்கள ஹஜ்ஜுப் பயணம் அனுப்பவும் ஒங்க குடும்பத்தாருக்கு ஒதவி செய்யவும் தான் வந்திருக்காங்க.

இவங்க கொழும்பு மொறட்டுவ பகுதி ஆக்கள் மரத்தளபாட விற்பனை செய்றவங்க. வியாபார வருமானத்திலே இதையும் வருஷா வருஷம் செஞ்சி வாராங்களாம். இப்போ நீங்க என்ன ஷாப் சொல்றீங்க''.

அந்த அல்லாஹ் என்னை புனித பயணம் செல்ல நாடிட்டான் இவங்களக் கொண்டு எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்றார் காமீல் முஅத்தினார் சந்தோஷ மிகுதியில்,

வந்தவர்களில் ஒருவர் முஅத்தின் ஷாப் ஒங்க குடும்ப வெபரங்களையெல்லாம் தெரிஞ்சி கொண்டோம். இதோ இதில் ஒரு மில்லியன் (பத்து இலட்ச) ரூபா பணமிருக்கு ஒங்க ரெண்டு குமர் புள்ளைங்களை கரை சேக்கவும், பெருநாள் ஆடைகளுக்கும் ஹஜ் பயண உங்க கைச்செலவுக்கும் பயன்படுதுங்க என்றுவிட்டு முஅத்தினாரின் விபரங்களையெல்லாம் எடுத்துச் சென்றார்கள் பிக்கப்பில் வந்தவர்கள்.

காமீல் முஅத்தினார் ஹஜ்ஜுப் பயணம் செய்து இரண்டு வாரங்களாகி விட்டன. மக்காவில் என்று புனித அறபா தினம் உலகின் எட்டுத் திக்குகளிலும் இருந்து வந்த இலட்சோபலட்ச ஆண், பெண் ஹஜ்ஜாஜிகளும் அறபா மைதான வெளியில் கண்ணீர் விட்டழுது பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

இவர்களில் ஒருவராக காமீல் காக்கா ''முஅத்தினாரும் கண்ணீர் விட்டழுது, யாஅல்லாஹ் இப்புனித பூமியில் என்னை கால் பதிக்க வைத்தாய் எனது நீண்ட கால பிரார்த்தனையை உன் அடியார்களைக் கொண்டு நிறைவேற்றவும் செய்தாய். உன் கருணையை என்னவென்றுதான் சொல்வது.

நான் பாவங்கள் செய்திருப்பேன் யா அல்லாஹ் அவைகளையெல்லாம் மன்னித்து பாவக்கறைகள் கலைந்த அன்று பிறந்த பாலகனாக நாடு திரும்பிட அருள் பொழிந்துடு யாஅல்லாஹ் என்று அழுது சப்தமிட்டவாறு இரு கைகளையும் ஏந்திப் பிரார்த்தித்தார் காமீல் முஅத்தினார்.

இன்று உலகம் பூராவும் புனித ஹஜ்ஜிப் பெருநாள் தினம். காமீல் முஅத்தினாருக்கு இந்தப் பட்டம் அழிந்து காமீல் ஹாஜியார் என்றுதான் பழக்கத்திற்கு வந்துவிடும். ஆமாம் காமீல் ஹாஜியாரின் வீட்டில் என்றுமில்லாவாறு இனிய ஹஜ்ஜிப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஹாஜியாரின் மனைவி, பிள்ளைகள் மூவரும் தங்கள் வாழ்க்கையில் இதுவரை கண்டிராத விலையில் கூடிய ஆடைகள் அணிந்து ஜொலித்துக் கொண்டிருந்தார்கள். அது மட்டுமன்றி காமீல் ஹாஜியார் அவர் மனைவி அகீலா இருவரினதும் உறவுகளில் இருந்து இரு வாலிபர்கள் காமீல் ஹாஜியாரின் இரு குமர்ப் பிள்ளைகளையும் கைப்பிடிக்க அன்பு மாமனார் காமீல் ஹாஜியாரின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆமாம் இனி அவர்களின் வாழ்க்கையில் என்றுமே வசந்தம் தான்.

நன்றி - தினகரன் வாரமஞ்சரி

No comments

Powered by Blogger.