Header Ads



இலங்கை இராணுவத்தில், இணைக்கப்பட்டுள்ள கீரிகள்

வெடிபொருட்களைக் கண்டறிய மோப்ப நாய்களுக்குப் பதிலாக கீரிகளை இலங்கை ராணுவம் பயன்படுத்த அவற்றை ராணுவத்தோடு இணைத்துள்ளது.

மோப்ப நாய்களையும், அதிநவீன கருவிகளையும் பயன்படுத்த அதிகம் செலவாவதால் கீரிகளைப் பயன்படுத்த இலங்கை ராணுவம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் காணப்படும் சிகப்பு, சாம்பல் நிறத்திலான கீரிகள் இதற்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன. கீரிப்பிள்ளைக்கு முழுபயிற்சியளிக்க ஒரு வருடகாலம் தேவைப்படுவதாக இலங்கை ராணுவம் கூறுகிறது.

மறைத்து வைக்கப்படும் வெடிபொருட்களை பயிற்சி அளிக்கப்பட்ட கீரிகள் மோப்ப சக்தியால் கண்டுபிடிக்கின்றன. வெடிபொருட்களைத் தோண்டி எடுக்கும் சக்தியும் கீரிகளுக்கு உண்டு.

இது ஆபத்தானது என்பதால் இடத்தை அடையாளம் காட்ட மட்டுமே தற்போது கீரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வெடிபொருட்களைக் கண்டுபிடிப்பதில், மோப்ப நாய்களைவிடவும் கீரிகள் சிறப்பாக செயல்படுவதாக இலங்கை ராணுவம் கூறுகிறது.

காடுகளில் இருந்து பிடிக்கப்பட்ட கீரிகளுக்கு தற்போது பயிற்சியளிக்கப்படுகிறது. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படுவதைப் போல இந்த கீரிகளுக்கும் எண்கள் வழங்கப்பட்டு, பெயரிடப்பட்டுள்ளது.

சாம்பல் நிற கீரிக்கு மோப்ப சக்தி அதிகமானதால், வெடிபொருட்களைக் கண்டறிவதில் சிறப்பாக செயல்படுகிறது.

இந்த கீரிகளை இனப்பெருக்கம் செய்து, குட்டிகளையும் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் இந்தத் திட்டம் அதிக வெற்றி பெறும் என இலங்கை ராணுவம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பர். அந்த பாம்பின் பரம எதிரியாகக் கருதப்படும் கீரிப் பிள்ளை தற்போது இலங்கை இராணுவத்தில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.