August 19, 2018

ஏழை வீட்டு பெருநாளைக்கு, தன் பிள்ளைகளுக்கு வாங்கிய ஆடைகளை கொடுத்த தமிழ்பெண் - காத்தான்குடியில் நெகிழ்ச்சி


-Mohamed Fairooz-

அல்ஹம்துலில்லாஹ்,  புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு எமது நண்பர்கள் குழுவால் முன்னெடுக்கப்பட்ட "ஏழைகளின் வீட்டிலும் பெருநாள்" வேலைத்திட்டத்திற்கமைய நன்கொடையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஆடைகள் நேற்று (18.08.2018) சனிக்கிழமை பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.

இதன் மூலம் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேரின் ஆடைத் தேவையை பூர்த்தி செய்ய முடிந்துள்ளது.

விநியோகிக்கப்பட்டவற்றில் 60 வீதமானவை புதிய ஆடைகளாகும். மிகுதி ஆடைகள் பயன்படுத்தப்பட்ட, ஆனால் சிறந்த தரத்தில் உள்ளவையாகும்.

இவற்றை விநியோகிப்பதில் பயனாளிகளின் திருப்திக்கே நாம் அதிக முன்னுரிமை வழங்க தீர்மானித்தோம். இதற்கமைய ஆடைகளை Hangers மூலம் காட்சிப்படுத்தி, விரும்பிய ஆடைகளை சுயமாக தேர்ந்தெடுக்குமாறு கூறினோம். அளவான ஆடைகளை அணிந்து பார்ப்பதற்கான Fit on room வசதிகளையும் செய்திருந்தோம். சகலரும் தமக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவையான , பொருத்தமான ஆடைகளைத் தெரிவு செய்து எடுத்துச் சென்றனர்.

சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரப்பட்ட இந்த வேண்டுகோளை பார்த்துவிட்டு, நாட்டின் பல பகுதிகளிலிருத்தும் ஆடைகளை தந்துதவ பலர் முன்வந்தனர்.

கம்பளையிலிருந்து ஒரு சகோதரர் காத்தான்குடிக்கே தனது காரில் ஆடைகளை கொண்டு வந்து தந்துவிட்டுச் சென்றார். பலர் Transport மூலம் அனுப்பி வைத்திருந்தனர்.

மட்டக்களப்பிலுள்ள ஆடை விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் பல ஆயிரக் கணக்கான ரூபா பெறுமதியான புதிய ஆடைகளை தந்து இப் பணியை முதலில் ஊக்குவித்தார்.

காத்தான்குடியிலுள்ள ஒரு அபாயா விற்பனை நிலையத்தினர் நிறைய புதிய அபாயாக்கள், ஸ்காப்களை தந்துதவினர்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் பணிபுரியும் ஒரு தமிழ் பெண் வைத்தியரும் தனது பிள்ளைகளுக்கென கொழும்பிலிருந்து வாங்கி வந்திருந்த கணிசமான புதிய ஆடைகளை இதற்காக தந்துதவினார்.

அட்டாளைச்சேனையிலிருந்து ஒரு பொலிஸ் அதிகாரி ஒரு தொகை சேர்ட்களுடன் 5000 ரூபா பணத்தையும் அனுப்பியிருந்தார்.

காத்தான்குடியிலுள்ள ஒரு சகோதரி தன்னிடமிருந்த விலை கூடிய 10 புதிய ஷல்வார்களை அனுப்பியிருந்தார்.

ஒரு தொகை சாரன்களை மாத்திரமே நாம் பணம் கொடுத்து வாங்கினோம்.

ஊரிலுள்ள பல சகோதர சகோதரிகள் தாம் பயன்படுத்திய, நல்ல நிலையிலிருந்த ஆடைகளை கழுவி, அயன் செய்து தந்தனர்.

இந்த விநியோகத்தை சிறப்பாக மேற்கொள்ள விசாலமானதொரு இடம் தேவைப்பட்டபோது, பிரமுகர் ஒருவர் கடற்கரையிலுள்ள தனது இடத்தை இரு தினங்களுக்கு இலவசமாக வழங்கியுதவினார்.

மிகக் குறுகிய கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வேலைத்திட்டத்தை சிறப்பாக பூர்த்தி செய்ததற்குப் பின்னால் பல சகோதர சகோதரிகளின் ஈகை குணமும் கடுமையான உழைப்பும் உள்ளன. நன்மையை மாத்திரமே எதிர்பார்த்து ஆடைகளை தந்துதவியவர்களுக்கும் ஆடைகளை சேகரித்தல், தரம் பிரித்தல் , பயனாளிகளை தெரிவு செய்தல், காட்சிப்படுத்தல், விநியோகித்தல் என சகல பணிகளிலும் பங்கெடுத்த அனைவருக்கும் எமது நன்றிகள்.

இன்றைய தினம் ஆடைகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் செய்த துஆவும், அவர்கள் உதிர்த்த புன்னகையுமே எமக்கு மன நிறைவைத் தரப் போதுமானது.

இதேபோன்று கடந்த நோன்புப் பெருநாள் தினத்தில் பகலுணவு வழங்கும் திட்டத்தையும் முன்னெடுத்திருந்தோம். இன்ஷா அல்லாஹ் இவ்வாறான தொண்டுப் பணிகளை உங்கள் அனைவரது ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் மேலும் வினைத்திறனாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

அல்லாஹ் நமது தூய பணிகளை அங்கீகரிப்பானாக!

3 கருத்துரைகள்:

insha alla ippa engalal mudiya vitttalum ungaalukkua duha sayvom

ஹஜ் பெருநாள் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறுவதற்காக கொண்டப்படுகின்றமை நாம் அறிந்ததே .

நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் பண்புகளில் ஒன்று தான் தான் சாப்பிட தயாராகும் போது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் விருந்தாளியை தேடுவதாகும்.

இறுதி நபி முஹம்மது (ஸல் ) அவர்களின் பண்புகளில் விசேட அம்சமானது இரு பெருநாட்களிலும் அனாதைகள், ஏழைகள், வசதியற்றர்களுக்கு பெருநாள் ஆடைகளை அன்பளிப்புச் செய்வது .

நபிமார்களின் அடிச்சுவடியான இந்த சகோதரர்களின் செயற்பாடுகளை அல்லாஹ் அங்கீகரித்து கொள்வானாக ஆமின்

இவர்களது இச்செயற்பாடுகளுக்கு கூலியாக அல்லாஹ் உயர்த்த ஜன்னத்துல் பிர்தவுஸ் சுவனத்தை கொடுப்பானாக ஆமின்

(தயவான வேண்டுகோள் தர்மமாக கொடுக்கின்ற ஆடைகளை புகைப்படம் எடுத்து கட்சி படுத்த வேண்டாம் . காரணம் கட்சி படுத்துவதனால் இந்த அன்பளிப்பை பெற்றவர்களின் மனநிலை பாதிக்கப்படும்)

Masha Allah. allah unkalai porunthikkolvaanaha aameen.

Post a Comment