Header Ads



தேர்தல் தாமதமடைவதற்கு அரசாங்கம், பொறுப்புக் கூற வேண்டும் - மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் தாமதமடைவது தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மாகாணசபைத் தேர்தல் முறைக்கான பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளனர். அந்த முறைமைக்கு எந்தத் தொகுதி என்பதை முதலில் அடையாளங்காண வேண்டும். எந்தெந்த தொகுதி என தற்போது அறிக்கையும் தயார் செய்துள்ளனர். தொகுதி பிரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் காணப்படும் திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தைத் தாண்டி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்லக்கூடிய அதிகாரத்தை வழங்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் முக்கியமானதொரு வழக்கு தீர்ப்பும் காணப்படுகின்றது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தாமதமடைவது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சரும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும் குறிப்பிடப்பட்டிருந்தனர். நாங்கள் அந்த வழக்கு விசாரணையின்போது ஆஜராகியிருந்தோம்.

அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டு திருத்த சட்டமூலம் கொண்டுவரப்படும் வரை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தலை நடத்தமுடியாது என உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பொன்று உள்ளது. தேர்தல் தாமதமடைவது தொடர்பில் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். பொருட்கோடலின் கீழ் புதியசட்டம் அமுல்படுத்தப்படாது என தற்போது கூறுகின்றனர். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடையும்பட்சத்தில், 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பினை எங்களால் அத்தாட்சிப்படுத்த முடியும். அப்படியென்றால் இந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் கலைக்கப்பட்டுள்ள 3 மாகாணசபைகள் மற்றும் கலைக்கப்படவுள்ள 3 மாகாணசபைகளையும் சேர்த்து ஒரே தடவையில் தேர்தலை நடத்த முடியும். தேவை ஏற்படும்பட்சத்தில் மார்ச் மாதம் பதவிக்காலம் நிறைவடையவுள்ள ஏனைய 2 மாகாணசபைகளும் இணைத்துக்கொண்டு தேர்தலை நடத்த முடியும் என சிரச தொலைக்காட்சியில் இன்று (20) காலை ஔிபரப்பாகிய ‘பெதிகட’ நிகழ்வில் கலந்துகொண்ட, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.