August 06, 2018

நான், இர்பான் ஹாபீஸ் - பகுதி 2

அவர் அந்த திட்­டத்தில் எனது தந்­தையின் சார்பில் எமது குடும்­பத்தை பதிவு செய்தார். சில வாரங்­களின் பின்னர் எனது தந்­தைக்கு DMD வியாதி தொடர்பில் பய­னுள்ள தக­வல்­களைக் கொண்ட பொதி­யொன்று பெற்றோர் திட்ட தலை­வ­ரி­ட­மி­ருந்து கிடைக்­கப்­பெற்­றது. அதன் பின்னர் டச்சு பெற்றோர் திட்ட தலைவி எலி­சபத் ரூம் இடமிருந்து ஹோலந்து நாட்டில் இடம்­பெ­ற­வுள்ள பெற்றோர் மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­கான அழைப்புக் கடிதம் கிடைத்­தது.

அவ­ருக்கும் ஒரு DMD வியா­தி­யுள்ள ஒரு மகன் இருக்­கிறார். இந்த அனைத்து நிகழ்­வு­க­ளு­டனும் சடு­தி­யாக எனது தந்­தையின் வாழ்வு மற்றும் வெளித்­தோற்றம் என்­ப­ன­வற்றில் மாற்­றங்கள் தென்­படத் தொடங்­கின.

எனது தந்தை பெற்றோர் திட்­டத்தின் அங்­கத்­த­வ­ரா­னதன் பின்னர் எனது தந்­தை­யி­ட­மி­ருந்து அதிக நம்­பிக்கை மற்றும் தைரியம் என்­ப­வற்றை என்னால் பெற முடிந்­தது. அமெ­ரிக்­கா­விலும் ஐரோப்­பா­விலும் இடம்­பெறும் பெற்றோர் மாநா­டு­களில் பங்­கு­கொள்­வதன் மூலம் என்னைப் போல் நூற்­றுக்­க­ணக்­கான பெற்­றோ­ரிடம் இருந்து DMD வியாதி பற்றி அதிக அறிவைப் பெற­மு­டி­யு­மென்று அவர் கூறினார்.  

செயற்கை சுவாசக் கரு­வி­யினை வாங்­கு­வ­தற்­கான போராட்டம்...

மிக விரைவில் எனக்கு ஒரு செயற்கை சுவாசக் கருவி தேவைப்­ப­டு­மென எனது தந்தை புரிந்­து­கொண்டார். எனினும் புதிய செயற்கை சுவாசக் கரு­வியின் விலை 3000 அமெ­ரிக்க டொல­ரிலும் அதி­க­மா­கையால் அவ­ரிடம் அந்த அளவு பணம் இருக்­க­வில்லை. எனது தந்­தையின் வரு­மானம் எமது குடும்­பத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்­வ­தற்கே போது­மா­ன­தாக இருந்­தது. எனினும், எனக்கு மிக விரைவில் அந்தக் கரு­வியின் அவ­சியம் ஏற்­படும் என்­பதை அறிந்­தி­ருந்­ததால் எவ்­வா­றா­வது செயற்கை சுவாசக் கரு­வி­யொன்றைப் பெறு­வ­தற்கு மிகுந்த பிர­யத்­தனம் மேற்­கொண்டார். எனவே அவர் அதி­க­மான செயற்கை சுவாசக் கருவி உற்­பத்­தி­யா­ளர்­களைத் தொடர்பு கொண்­ட­துடன் உல­கெங்­கு­முள்ள தனது நண்­பர்­களை உத­வி­களைப் பெறும் நோக்கில் தொடர்­பு­கொண்டார். நீண்ட போராட்­டத்தின் பின்னர், டச்சு பெற்றோர் திட்­டத்தின் தலை­வியும் எனது தந்­தையின் நண்­பி­யு­மான எலி­சபத் எமக்கு உதவ முன்­வந்தார். அவர் எமக்கு ஒரு புதிய செயற்கை சுவாசக் கரு­வியைப் பரி­ச­ளித்தார். நாம் மிகவும் ஆச்­ச­ரியம் அடைந்­த­துடன் நீண்ட போராட்­டத்தினடியாக ஒரு செயற்கை சுவாசக் கருவி கிடைத்­த­தை­யிட்டு எனது தந்­தையால் நிம்­மதிப் பெரு­மூச்­சு­விட முடிந்­தது. எனது செயற்கை சுவா­சக்­க­ருவி ஒரு புதிய வாழ்வை எனக்கு வழங்­கி­யது. அது விட­யங்­களை இல­கு­வாக்­கி­ய­துடன் சுவாசப் பிரச்­சினை தொடர்­பான பயத்தை அகற்­றி­யது. இது தொடர்பில் எனது தந்­தைக்கும் கரு­வியைப் பரி­ச­ளித்த எலி­ச­பத்­துக்கும் நான் நன்றி உடை­ய­வ­னாவேன்.

வாழ்வு அதிக சிரமமிக்­க­தாக மாறு­கின்­றது...

இத­னி­டையே, நான் படுத்த படுக்­கை­யாக இருக்கும் வேளை படுக்கைப் புண்கள் ஏற்­பட ஆரம்­பித்­தன. அவை எனது நெஞ்சின் மையப் பகு­தி­யி­லி­ருந்து விலாப்­ப­குதி வரை ஏற்­பட்­டது. படுக்கைப் புண்கள் தொந்­த­ரவு மற்றும் வலி­மிக்­க­தாகக் காணப்­பட்­டன. எனது தாயார் மற்றும் மூத்த சகோ­தரி ஆகியோர் புண்­களைக் கழு­விய பின் அவற்­றுக்கு மருந்­தி­டு­வார்கள். பின்னர் எனது முதல் இளைய சகோ­தரி இந்தப் பணியை எனது தாயா­ரி­ட­மி­ருந்து பெற்றுக் கொண்டாள். மிகவும் கடி­ன­மான இந்த வலியை என்னால் முடிந்­த­வரை பொறுத்துக் கொண்டேன், முடி­யாத போதெல்லாம் கண்­ணீர்­விட்டு அழுவேன். இந்த அனைத்து சிர­மங்­க­ளு­டனும் வாழ்வு மிகவும் ஏமாற்றம் மிக்­க­தாக இருந்த போதும் நான் பொறு­மையை மற்றும் தைரி­யத்தை இழக்­க­வில்லை. எனது உறு­தி­யான மத நம்­பிக்கை இந்த அனைத்து சவால்­க­ளுக்கும் முகம்­கொ­டுக்க உத­வி­யது.

செயற்கை சுவாசக் கரு­வி­யுடன் என்னால் இர­வு­களில் நன்­றாக உறங்க முடிந்­தது. அந்தக் கரு­வியின் உத­வி­யின்றி இரவில் தூங்க முடி­யாத அள­வுக்கு அந்தக் கரு­விக்கு அடி­மை­யா­ன­வ­னா­கவே நான் இருந்தேன். எனது செயற்கை சுவாசக் கருவி நாளொன்­றுக்கு 8 மணித்­தி­யா­லங்கள் வரை வேலை செய்­தது. பல வரு­டங்கள் இவ்­வாறு நீண்ட நேரம் இயங்­கி­யதன் கார­ண­மாக அந்தக் கருவி அதிக சத்தம் ஏற்­ப­டுத்தக் கூடி­ய­தா­கவும் அடிக்­கடி பழு­த­டையக் கூடி­ய­தா­கவும் மாறி­யது. ஒருநாள் அது இயங்­க­வில்லை, பின்னர் அதன் இயந்­திரத் தொகுதி பழு­த­டைந்­தி­ருந்­தது. எனினும் எனது மூத்த சகோ­தரர் இரண்டு நாட்­க­ளுக்குள் தனது தொழில்­நுட்­ப­வியல் நண்பர் ஒரு­வரின் மூல­மாக திருத்திக் கொடுத்தார். சுவாசக் கருவி இன்றி தூக்­க­மற்ற இர­வு­களைக் கழிக்க வேண்டி ஏற்­படும் என்ற பயத்­துடன் இருந்த எனக்கு இது நிம்­ம­தியை வழங்­கி­யது. அந்தக் கருவி திருத்­தப்­பட்­ட­போதும் எந்த நேரத்­திலும் அது இயங்­கு­வதை நிறுத்­தலாம் என எனது சகோ­த­ரரின் நண்பர் எச்­ச­ரித்­தி­ருந்தார்.

வாழ்வு காக்­கப்­பட்­டது...

DMD வியாதி கார­ண­மாக ஏற்­படும் அதி­க­ரிக்கும் தசை நார் வலு­வி­ழப்பு குறிப்­பாக, இதயம் மற்றும் நுரை­யீரல் தொடர்­பான பாரிய மருத்­துவப் பிரச்­சி­னை­க­ளுக்கு இட்டுச் செல்லும். எனது நுரை­யீ­ரல்கள் நலி­வுற்­றதன் கார­ண­மாக எனக்கு காய்ச்சல் மற்றும் சளி என்­பன ஏற்­ப­டும்­போது அனைத்து விட­யங்­களும் சிரமம் மிக்­க­தாக மாறும். எனது நுரை­யீ­ரல்கள் நலி­வுற்­றி­ருப்­பதன் கார­ண­மாக இரு­மு­வது மிகவும் கடி­ன­மா­ன­தாக இருக்கும். இந்த சுவாசக் கரு­வியின் உத­வி­யினால் எனது உயிர் காக்­கப்­பட்­டது. ஒரு முறை சளி மற்றும் காய்ச்சல் ஏற்­பட்­ட­போது மிகவும் கடி­ன­மாக இருந்­தது. இந்த நேரங்­களில் சளி கார­ண­மாக சுவா­சிப்­ப­தற்கு மிகவும் சிர­மப்­ப­டு­வதால் ஒரு நிமி­டம்­கூட சுவாசக் கரு­வியின் உத­வி­யின்றி என்னால் வாழ முடி­யாது. எனவே, இரண்டு வாரங்­க­ளுக்கு சுவா­சக்­க­ருவி ஓய்­வின்றி இயங்­கி­யது. எனது குடும்­பத்­தி­லுள்ள ஒவ்­வொ­ரு­வரும் அந்த இர­வு­களில் எனக்கு அருகில் இருந்­தனர். நீண்ட நாட்கள் சிர­மத்தின் பின்னர் நான் குண­ம­டைந்தேன்.

பாரிய அதிர்ச்சி...

எனது மூத்த சகோ­த­ரரை நான் இழந்­த­போது எனது வாழ்வில் பாரிய அதிர்ச்­சி­யையும் சோகத்­தையும் சந்­தித்தேன். அவர் என்­னுடன் மிகவும் நெருக்­க­மாக இருந்­த­துடன் நான் மகிழ்­வாக இருக்க அனைத்­தையும் செய்தார். ஒரு உண்­மை­யான சகோ­த­ர­ராக எனது அனைத்து துன்­பங்­க­ளிலும் பங்­கெ­டுத்து எனது நல­னுக்­காக தனது வாழ்வைத் தியாகம் செய்தார். அவ­ரது அன்பும் கவ­னிப்பும் எனது வாழ்வை ஆறு­தல்­ப­டுத்­தி­யது. அவர் புதி­தாக எதை அறிந்­தாலும் அதை எனக்கும் கற்றுக் கொடுத்தார். எனது ஏனைய குடும்ப உறுப்­பி­னர்கள் சுற்­று­லாக்கள் மற்றும் வெளியில் செல்லும் போதெல்லாம் என்­னுடன் இருப்­ப­தற்­காக அவற்றை எல்லாம் தியாகம் செய்தார்.

குருதிப் புற்­றுநோய் அடை­யாளம் காணப்­படும் வரை அவர் உறு­தி­யா­ன­வ­ரா­கவும் சக்திமிக்­க­வ­ரா­கவும் இருந்தார். அந்த செய்தி எங்­க­ளுக்கு பாரிய அதிர்ச்­சி­யா­கவும் சோகம்­மிக்க காலப்­ப­கு­தி­யா­கவும் அமைந்­தது. அவர் சிகிச்­சைக்­காக இந்­தி­யா­வுக்கு அழைத்துச் செல்­லப்­பட்டார். அங்கு இரண்டு முறை கதி­ரி­யக்க சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்ட பின்னர் அவ­ரது உடல் நிலையில் முன்­னேற்றம் ஏற்­பட்­ட­துடன் அவர் வீட்­டுக்குக் கூட வந்தார். எனினும் மூன்­றா­வது கதி­ரி­யக்க சிகிச்­சைக்­காக இந்­தி­யா­வுக்கு கொண்டு செல்­லப்­பட்ட பின்னர்  அவ­ரது நிலை மோச­ம­டைந்­தது. எனது சகோ­தரர் இந்த அனைத்து வேத­னை­க­ளையும் வலி­க­ளையும் சகித்­துக்­கொண்டு இந்த துன்­பங்­க­ளுக்கு மத்­தி­யிலும் நேர்­மை­யா­ன­வ­ராக இருந்தார்.

எனது தந்­தையும் இளைய சகோ­த­ரரும் அவ­ருடன் இந்­தி­யாவில் இருந்­தனர். அவர்கள் உள­வியல் ரீதி­யாக பாரிய தாக்­கத்­து­ட­னான காலப்­ப­கு­தியை அங்கு கழித்­தனர். உள­வியல் ரீதி­யாகப் பல பாரிய சவால்­களைச் சந்­தித்த எனது தந்தை எனது மூத்த சகோ­த­ரரின் துன்­பங்­களைக் கண்டு உள­வியல் ரீதி­யாக நொறுங்கிப் போனார். எனினும் இறுதித் தரு­ணம்­வரை நம்­பிக்­கையை இழக்­க­வில்லை. எவ்­வா­றா­யினும் 2006 ஏப்ரல் 14 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை காலை எனது சகோ­த­ரரின் இதயத் துடிப்பு அமை­தி­யாக நின்­ற­துடன் அனைத்தும் முடி­வுக்கு வந்­தது. எங்­க­ளது சகோ­தரர் எங்­க­ளையும் இந்த உல­கத்­தையும் விட்டு சென்­று­விட்டார் என்­பதை செவி­யுற்­ற­துடன் எங்­களின் இத­யங்­களில் ஏற்­பட்ட வேத­னையைத் தாங்கிக் கொள்ள முடி­ய­வில்லை. அழு­வதைத் தவிர எங்­களால் வேறு எத­னையும் செய்ய முடி­ய­வில்லை. எனினும் என் வாழ்­நாளில் அது­வரை நான் அந்­த­ள­வுக்கு அழு­த­தில்லை. நான் அவரின் அன்­பையும் கவ­னிப்­பையும் இழந்­து­விட்டேன். ஒரு சிறந்த சகோ­த­ரரை நான் இழந்து விட்டேன். எனது அன்­புக்­கு­ரிய சகோ­த­ர­ருக்கு சுவர்க்­கத்தை வழங்­கும்­படி எல்லாம் வல்ல இறை­வனை வேண்டி என்னை நானே தேற்­றிக்­கொண்டேன்.

அவ­ரது இழப்பின் சோகத்­தி­லி­ருந்து மீள எமக்கு நீண்ட காலம் எடுத்­தது. தனது அன்பு மகனின் இழப்பால் மிகவும் உடைந்து போயி­ருந்த என் தந்தை, தனது மகனின் நினைவு தோன்றும் போதெல்லாம் அழுவார். எனினும் எங்­க­ளது உறு­தி­யான மத நம்­பிக்கை அனைத்து துன்­பங்கள் மற்றும் இழப்­பு­களைத் தாங்கிக் கொள்­ளக்­கூ­டிய போதுமான தைரி­யத்தை வழங்­கி­யது. நான் அவரை அதிகம் இழந்­தி­ருக்­கிறேன்.

மிகவும் சிறப்­பான தீர்வு...

வரு­டங்கள் நகர நகரப் பகல் வேளை­க­ளில்­கூட சுவா­சிப்­பதில் சிர­மங்­களை எதிர்­நோக்க ஆரம்­பித்தேன். இது எனக்கு அசா­தா­ர­ண­மான விடயம். இந்த சுவாசச் சிக்கல் எனது படுக்கை நிலை­யி­லி­ருந்து சிறிய மாற்றம் செய்­தாலும் உடன் ஏற்­படத் தொடங்­கி­ய­துடன் நிலைமை மேலும் மோச­ம­டையத் தொடங்­கி­யது. எனவே இந்த சுவாசச் சிக்கல் ஏற்­படும் போதெல்லாம் எனக்கு மிகவும் சிர­ம­மாக இருக்கும். எனது தந்தை இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்­வொன்றைக் காண மிகவும் முயற்­சித்தார். அதிர்ஷ்­ட­வ­ச­மாக அது அமெ­ரிக்­காவில் பெற்றோர் மாநாட்டில் பங்­கு­பெற அண்­மித்த சம­ய­மாக இருந்­தது. அங்கு அவர் ஒரு வைத்­தி­ய­ரிடம் எனது பிரச்­சி­னையைக் கூறவும் அந்த வைத்­தியர் லிசி­னோப்ரில் என்ற மாத்­தி­ரையை பரிந்­து­ரைத்தார். நான் அந்த மாத்­தி­ரையை உட்­கொள்ள ஆரம்­பித்­த­துடன் நான் மிகவும் ஆறு­த­லாக உணர ஆரம்­பித்­த­துடன் எனது சுவாசச் சிக்கல் மெது­வாக ஆனால் உறு­தி­யாக, இல­கு­வாக மாறி­யது. மிகவும் நிம்­ம­தி­ய­டைந்த நான் அந்த மாத்­தி­ரையின் வினைத்­திறன் கண்டு மிகவும் ஆச்­ச­ரி­ய­ம­டைந்தேன். நாளொன்­றுக்கு இரண்டு மாத்­தி­ரைகள் உட்­கொள்­கிறேன். மீண்டும் எனது வாழ்வு சாதா­ரண நிலைக்குத் திரும்­பி­யது.

எனது வாழ்வின் மிகச் சிறந்த பரிசு...

காலம் செல்லச் செல்ல எனது செயற்கை சுவாசக் கருவி மிகுந்த சத்­தத்தை ஏற்­ப­டுத்­தி­ய­துடன் ஏற்­க­னவே அந்த தொழில்நுட்­ப­வி­ய­லாளர் எச்­ச­ரித்­ததைப் போல் எந்த நேரத்­திலும் இயங்­கு­வதை நிறுத்­தலாம் என்ற நிலையில்  புதிய சுவாசக் கரு­வியின் தேவை அதீ­த­மாக உண­ரப்­பட்­டது. எனது வாழ்வு அந்த சுவாசக் கரு­வியில் தொங்கிக் கொண்­டி­ருக்கும் நிலையில் பழு­த­டைந்து வரும் இந்த சுவாசக் கரு­வியில் தங்­கி­யி­ருப்­பது அபா­யம்­மிக்க ஒன்­றாகக் காணப்­பட்­டது. எனவே எனது தந்தை அந்த கரு­விக்கு மாற்­றீடு ஒன்றைத் தேட ஆரம்­பித்தார். புதிய சுவாசக் கருவி ஒன்றை கொள்­வ­னவு செய்­வ­தற்கு நிதி வள­மற்ற  நிலையில் பாவித்த கருவி ஒன்றை ஐரோப்பா மற்றும் அமெ­ரிக்­காவில் உள்ள தனது நண்­பர்­களின் ஊடாகப் பெற முயற்­சித்தார். எனது தந்­தையின் நண்­பர்கள் தங்­களால் முடி­யு­மான அளவு முயற்­சித்­த­போதும் அவர்­களால் பொருத்­த­மான செயற்கை சுவாசக் கரு­வி­யொன்றைப் பெற முடி­ய­வில்லை.

இத­னி­டையே எனது இளைய சகோ­தரன் எனக்கு மாற்று செயற்கை சுவாசக் கருவி ஒன்றைப் பெறு­வது தொடர்பில் கவ­லை­மிக்­க­வ­ராகக் காணப்­பட்டார். கொழும்பில் கல்­லூரியில் கட்­டடக் கணி­ய­வியல் கற்­கையை மேற்­கொள்ளும் அவ­ருக்கு அங்கு இணையப் பாவனை வசதி காணப்­பட்­டது. அந்த நேரத்தில் எங்­க­ளது வீட்டில் இணைய வசதி இருக்­க­வில்லை. எனவே இணை­யத்தில் உலா­வும்­போது எனது சுவாசக் கருவி தயா­ரிப்பு நிறு­வ­னத்தின் இணை­யத்­த­ளத்தை அவரால் கண்­ட­றிய முடிந்­தது. அதனைத் தொடர்ந்து அந்தக் கருவி தயா­ரிப்பு நிறு­வ­ன­மான BREAS அமைப்­புக்கு கடிதம் ஒன்றை எழு­தும்­படி என்னை தொடர்ந்து கேட்டுக் கொண்­டி­ருந்தார். ஒரு காகி­தத்தில் நான் அனு­ப­விக்கும் துயரம் பற்றி விளக்­க­மாக எழுதிக் கொடுத்தேன். அடுத்த நாள் எனது இளைய சகோ­தரர் அந்தக் கடி­தத்தை தட்­டச்சு செய்து கல்­லூரிக் கணினி ஊடாக மின்­னஞ்சல் செய்தார். அவர்­க­ளிடம் எந்தப் பதிலும் கிடைக்­க­வில்லை. எனினும் தவ­று­த­லான முக­வ­ரிக்கு அனுப்­பப்­பட்ட மின்­னஞ்சல் தொடர்பில் அங்கு சந்­தைப்­ப­டுத்தல் அதி­கா­ரி­யாகப் பணி­யாற்றும் மேரி என்ற பெண் தொலை­பேசி அழைப்­பொன்றை எமக்கு மேற்­கொண்டார். அதன்­பி­றகு அவர் தனது தவறு தொடர்பில் எம்­மிடம் மன்­னிப்புக் கோரி மின்­னஞ்சல் ஒன்றை அனுப்­பினார். அதற்கு நாம் அது பர­வா­யில்லை எனப் பதி­ல­ளித்­த­துடன் எமது மின்­னஞ்சல் தொடர்­பிலும் நினை­வூட்­டினோம். மாதங்கள் கடந்­தன அவர்­க­ளி­ட­மி­ருந்து எந்தப் பதிலும் கிடைக்­க­வில்லை. நானும் எனது இளைய சகோ­த­ரனும் நம்­பிக்­கை­யி­ழக்க ஆரம்­பித்­தி­ருந்தோம்.

ஒருநாள் தொலை­பேசி அழைப்பு ஒன்று வந்­தது, தந்தை வெளியில் சென்­றி­ருந்­ததால் அதற்கு நான் பதி­ல­ளித்தேன். மறு­மு­னையில் ஒரு நபர் சொல்­வதை கேட்ட எனது காதுகள் அந்த விட­யத்தை நம்ப மறுத்­தன. அந்த தொலை­பேசி அழைப்பு சுவீடன் நாட்டின் BREAS நிறு­வ­னத்தின் உள்ளூர் முகவர் அமைப்பில் இருந்து வந்­தி­ருந்­தது. அந்த நபர் எனக்கு ஒரு புத்தம் புதிய செயற்கை சுவாசக் கரு­வியை BREAS கம்­ப­னி­யிடம் இருந்து கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் அதனை நேரில் வந்து பெற்றுக் கொள்­ளு­மாறும் கூறினார். அப்­போ­துதான் சில மாதங்­க­ளுக்கு முன்னர் அனுப்­பிய மின்­னஞ்சல் பற்­றிய நினைவு எனக்கு ஏற்­பட்­டது. இந்த உன்­ன­த­மான செய்­தியால் தூக்­கி­வாரிப் போடப்­பட்ட நான் நொடியும் தாம­திக்­காது எனது தந்­தையை தொலை­பே­சியில் அழைத்து எனது வாழ்வில் கிட்­டிய மிகப்­பெ­ரிய பரிசு பற்றிக் கூறினேன். அனைத்து வழி­க­ளிலும் முயற்­சித்தும் பாவித்த  செயற்கை சுவாசக் கருவி ஒன்றைப் பெறு­வது தொடர்பில் கிட்­டத்­தட்ட முழுதாக நம்­பிக்­கை­யி­ழந்த நிலையில் இருந்த என் தந்தை இந்த விட­யத்தை செவி­யுற்­றதும் மிகவும் நிம்­ம­தி­ய­டைந்தார். அந்த நேரத்தில் கொழும்­பி­லி­ருந்த எனது இளைய சகோ­த­ர­னிடம் தந்தை இந்த மகிழ்­வான விட­யத்தை தொலை­பேசி மூலம் அறி­வித்து வரும் வழியில் செயற்கை சுவாசக் கரு­வியை எடுத்துக் கொண்டு வரு­மாறு கூறினார். எனது இளைய சகோ­தரன் இது தொடர்பில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். இந்த வழியில் செயற்கை சுவாசக் கருவியை பெறுவதில் நம்பிக்கையற்றிருந்த என்னை அவன்தான் வற்புறுத்தி அந்த மின்னஞ்சலை எழுத வைத்தான்.

இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் பின்புலத்தில் இருந்து செயற்பட்ட செல்வி மேரி நிக்ரேன் அவர்களுக்கு நான் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு எனது மிகுந்த நன்றியை அறிவித்த போது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இந்த நிகழ்வுகள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தின. எனது வாழ்வில் அந்த நாளில் ஏற்பட்ட சம்பவங்களை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. எனது வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய பரிசை வழங்கிய அந்த நபர்களின் தாராள மனம் தொடர்பில் நான் ஆச்சரியமடைந்தேன். புதிய சுவாசக் கருவியை பயன்படுத்த தொடங்கிய எனக்கு மிகுந்த நிம்மதி கிடைத்தது. புதிய உபகரணம் தனது எஜமானனுக்கு பணிபுரியத் தொடங்கி ஒரு வருடமாகின்றது. தற்பொழுது எந்த பிரச்சினையுமில்லை; கவலையுமில்லை.

இன்னொரு கிளர்ச்சி...

எனது புதிய சுவாசக் கருவியைப் பெற்றுக் கொண்டவுடன் எமது வீட்டுக்கு இணைய வசதி கிடைத்தது மற்றொமொரு சந்தோசமாக இருந்தது. நீண்ட நாட்களாக இணையப் பாவனையை மேற்கொள்ள வேண்டுமென்ற எனது ஆவலை தந்தையால் பூர்த்தி செய்ய இயலவில்லை. நான் கணினியை முழு நேரமும் பயன்படுத்த ஆரம்பித்தேன். தற்பொழுது இணைய உலாவலில் நீண்ட நேரம் செலவிடுவதோடு எனது நேரம் இணையத்துடன் பறந்து செல்கின்றது. இணைய உரையாடல் மூலம் சிறந்த நண்பர்கள் சிலரைப் பெற்றுக் கொண்டேன். உலகின் பிந்திய செய்திகளை என்னால் அறிய முடிவதுடன் நிறைய விடயங்களை மேற்கொள்ள முடிகின்றது. நான் எவற்றை தேட நினைக்கிறேனோ அவற்றை எல்லாம் என்னால் பெற முடிகின்றது. எனவே இதன் மூலம் கிளர்வுற்றுள்ள நான் இணையம் எனது வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியும் என உணர்வதுடன் அது எனது இயலாமை மற்றும் சோகங்களை ஓரளவுக்கு மறக்க உதவுகின்றது.

'டுசென்னே' வியாதி எனக்கு எவற்றை வழங்கியுள்ளது...-?

எமது வாழ்வில் உறுதியான மனம் மற்றும் தைரியம் என்பவற்றைக் கட்டியெழுப்ப முடியுமானால் வாழ்வில் நாம் முகம்கொடுக்கும் எவ்வகை கஷ்டங்களையும் சோகங்களையும் எம்மால் வெற்றிகொள்ள முடியும் என்பதை நான் எனது வாழ்விலிருந்து கற்றுக் கொண்டேன். அதே நேரத்தில் உங்களிடம் உறுதியான மத நம்பிக்கை காணப்பட வேண்டும். அத்துடன் உங்களது வாழ்வின் மிகவும் இக்கட்டான நிலைகளில் நீங்கள் நம்பிக்கையிழக்கக் கூடாது.

'டுசென்னே' எனக்குப் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுத்தது என நான் உண்மையாக நினைக்கிறேன். டுசென்னே உலகளாவிய ரீதியில் பெற்றோரை இணைத்துள்ளது. டுசென்னே எமக்கு உலகின் சிறந்த மனிதர்களை அடையாளம் காண உதவியுள்ளது. டுசென்னே இந்த உலகில் இன்னும் உன்னதமான தாராள மனம் கொண்ட ஆண்களும் பெண்களும் உள்ளனர் என நாம் அறிய வழி சமைத்துள்ளது. டுசென்னே விசேடமாக எனது உண்மையான நண்பர்களை எனக்கு அடையாளம் காண உதவியுள்ளது.


நன்றி!
-VIdivelli

1 கருத்துரைகள்:

இவ் உலகம் தான் தனது வாழக்கை என நினைப்பவர்களும், நான் எனும் மமதை கொண்டவர்களும், இனவாத பித்துப் பிடித்தவர்களும் இது போன்ற வாழ்க்கைப் போராட்டப் பாடங்களைப் படிப்பார்களா?

Post a Comment