August 16, 2018

நுஸ்ரான் பின்னூரிக்கு 2 வைத்தியர்களின் தக்க பதிலடி

தடுப்பூசி

‘குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும்? ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப்பூசி ஏற்றப்பட்டால் அதன்பின் அது நோயாளிதான். எம்மை நாடி வந்த நூற்றுக்கணக்கான பிள்ளைகள் உள்ளார்கள் அவர்கள் ஒருவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படவில்லை. அல்லாஹ்வின் நாட்டத்தால் சுகதேகியாக உள்ளார்கள்.’

பிரசவம்

‘பிரசவம் வீட்டில் பார்க்க வேண்டும். அரசாங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதற்கான புரட்சி நாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டும். உலக மனிதர்களின் வரலாறு 8000 வருடங்கள் எனில் ஆங்கில மருத்துவத்தின் வரலாறு 200 வருடங்களும் இல்லை. அப்படியென்றால் 6000 வருடங்களாக மக்கள் வாழவில்லையா’?

“தவறான வாதங்கள் களையப்பட வேண்டும்”

– Dr. அஹமட் நிஹாஜ்
(எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்)

மலேசிய பத்வா குழுவானது தடுப்பூசிகள் நோயை தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படமுடியும் என அறிவித்துள்ளதோடு, அதை மறுப்பது தீங்கிழைக்கக்கூடியதாகும். ஆய்வுக்கும் பத்வாவுக்குமான ஐரோப்பிய குழு தமது அறிக்கையில், தடுப்பூசிகளில் பன்றியிலிருந்து வரும் பதார்தங்கள், புறக்கணிக்கப்படக்கூடிய அளவே உள்ளது என அறிவித்து, அவை கட்டாயம் பாவிக்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனமானது, தற்போதைய தடுப்பூசிகளில் முஸ்லிம்கள் தவிர்க்கக்கூடிய பதார்த்தங்கள் இல்லை என அறிவித்துள்ளது.

அண்மையில் மலேசிய ஹலால் உற்பத்தி அபிவிருத்தி நிறுவனம், சவுதி அரேபிய தனியார்துறையுடன் சேர்ந்து ஹலால் சான்றிதழ் பெறப்பட்ட தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை ஆரம்பித்துள்ளது.

சமூக வளைதளங்களில் பகிரப்படும் இந்த தடுப்பூசிகளுக்கெதிரான தவறான தகவல்கள், தடுப்பூசிகளுக்கு ஆதரவான, ஆதாரபூர்வமான தகவல்களை விட மிகவும் அதிகமாக மக்களை சென்றடைகின்றது. இதனை உலகளாவிய முஸ்லிம் சமூகம் மெது மெதுவாக தமது வழக்காறாக மாற்றி வருகின்றது. இப்பிழையான வழக்காறுக்கெதிராக செயற்பட வேண்டியது ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

‘தாய் மரணத்திற்கு யாராவது காரணமாக இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்’– Dr முகம்மட் ரிஷாட்
(பெண்ணியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர், டீசொய்சா மருத்துவமனை, கொழும்பு)

முன்னைய காலங்களில் வீடுகளில் பிரசவம் பார்த்திருப்பது உண்மை தான், ஆனால் தாய்மாரின் இறப்பு மற்றும் நோயுற்ற தன்மை (Mortality and Morbidity) அதிகளவில் காணப்பட்டுள்ளது. பிள்ளைப் பேரின் போது எத்தனையோ தாய்மார் மரணித்துள்ள சம்பவங்களை நாம் கேள்விப்பட்டுள்ளோம். அப்போது இது அல்லாஹ்வின் ஏற்பாடு என்பதாக கூறி விடயத்தை விட்டிருப்போம். ஆனால் நிகழ்கால நிலைமைகள் அப்படியில்லை. எமக்கான வசதிகள் பெருகும் போது அவற்றை மேம்படுத்தித்தான் ஆக வேண்டும்.

இங்கிலாந்தில் வீட்டுப் பிரசவம் பார்க்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் இங்கிலாந்தில் வீட்டுப் பிரசவம் இன்னும் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டு வரும் விடயமாகவே காணப்படுகின்றது. வீட்டுப் பிரசவத்தை விரும்புபவர்களுக்கு நிறைய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படுகின்றன. கூடுதலான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். ஆபத்து கூடியவர்களா? குறைவானவர்களா? வேறு நோய்கள் காணப்படுகின்றதா? போன்ற விடயங்கள் அவதானிக்கப்படும். ஒரு வைத்தியருக்கு கீழால் இவை அவதானிக்கப்படும். இவையெல்லாம் கவனத்திற்கொள்ளப்பட்டதன் பின்னர் தாதியொருவரின் கீழ் அப்பெண்கள் உட்படுத்தப்படுவார்கள். தாதிமார் இப்பெண்களின் உடல்நிலைமைகள் தொடர்பில் அடிக்கடி மருத்துமனைக்கு தகவல் வழங்கிக் கொண்டிருப்பார்கள். அம்பியூலன்ஸ் வண்டிகளும் தயார்படுத்தப்பட்டிருக்கும். நான் இங்கிலாந்தில் கற்ற காலப்பகுதியில் கூட அதிகளவான பெண்கள் வைத்தியசாலைக்கு அழைத்துவரப்படுவார்கள்.

அப்பெண்களுக்கு ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும். பிரசவம் என்பது மாறும் செயல்முறை கொண்டது. தாயும் சேயும் தனித்தனியாக அவதானிக்கப்பட வேண்டும். பிரசவத்தின் போது கருப்பை வால்வுப் பகுதி திறக்கப்பட வேண்டும். இதில் தாமதம் காணப்படுமாயின் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் மருத்துமனையில் மாத்திரமே காணப்படும். சில நேரம் குருதிப் பெருக்கு அதிகமாக காணப்படலாம், தாய்க்கு குறுதி அழுத்தம் அதிகரிக்கலாம், பிள்ளையின் தலை திரும்பியிருக்கும் விதம் வித்தியாசப்படலாம். இவற்றை கண்டுபிடிக்கவும் அவற்றுக்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தேவையான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும். இங்கிலாந்தில் இது சாத்தியம் என்றாலும் கூட இது நிறைய வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்ட விடயமாக காணப்படுகின்றது.

எமது நாட்டில் வீட்டுப் பிரசவத்திற்கான மேற்குறிப்பிட்ட வசதிகள் எதுவும் இல்லை. தொடர்பாடல் பிரச்சினை, இடமாற்றல் பிரச்சினை. இலங்கையில் வீட்டுப் பிரசவம் சரியான முறையில் பார்க்கப்பட வேண்டுமென்றால் மிகப்பெரும் மாற்றமொன்று நடைபெறவேண்டும். 2016இல் இறந்து போன 116 பெண்களில் சுமார் 17 வீதமானவர்கள் முஸ்லிம்கள். 20 வீதம் தமிழர்கள். இன விகிதாசாரப்படி பார்த்தால் முஸ்லிம்களே அதிகம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. நோய் வந்தால் மருத்துமனையை நாடும் வீதம் குறைவு, மருத்துவ காரணங்களுக்காக வேண்டி கருத்தரிப்பதை பிற்படுத்த வேண்டிய தேவையிருந்தும் இடைவெளி வழங்காமல் கர்ப்பம் தரிப்பது போன்ற காரணங்களை தாய் மரணங்களுக்கான காரணிகளாக குறிப்பிட முடியும்.

இதில் 15 பெண்கள் குறுதிப் பெருக்கினாலும், 11 பெண்கள் மாரடைப்பினாலும், 10 பெண்கள் கருப்பையைச் சூழவுள்ள நீர் உடம்பினுள் செல்வதாலும் இறந்துள்ளனர். வைத்தியசாலையில் இருந்தாலும் கூட இந்த நிலைமையால் 50 வீதத்திற்கு அதிக பெண்கள் இறக்கும் வாய்ப்புள்ளது. வீட்டுப் பிரசவத்தின் போது இந்த நிலைமை ஏற்பட்டால் பெண்களின் நிலைமை என்னவாகும்? 112 பெண்கள் மரணிப்பார்கள் என்றால் அதை விட 10 மடங்கிற்கும் அதிக பெண்கள் மரணத்தை நெருங்கி காப்பாற்றப்பட்டவர்களாவர். வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை நடவடிக்கைகளின் மூலமே இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ஒரு MBBS அல்லது தகுதிவாய்ந்த வைத்தியர் ஒருவர் அல்லது பயிற்றப்பட்ட தாதியின் மூலமே பிரசவம் பார்க்க முடியும் என இலங்கை சுகாதார கொள்கைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியிருக்கும் போது தாய் மரணத்திற்கு யாராவது காரணமாக இருந்தால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். சுகாதார அமைச்சும் குடும்ப சுகாதார பணியகமும் இணைந்து வீட்டுப் பிரசவம் தொடர்பில் தளர்வாக உள்ள சில விடயங்களை கடுமையாக்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன. எனவே வீட்டுப் பிரசவத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஏதும் வாக்குமூலங்கள் கிடைத்தால் அவை தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

2016ஆம் ஆண்டு தரவுகளின் படி 68 வீதமானவர்கள் பிரசவத்தின் பின்னரே இறந்துள்ளார்கள். காரணம், பிரசவத்தின் பின்பும் அவர்களுக்கான ஆபத்து குறைவதில்லை. எனவே மருத்துவமனைகளிலேயே இவர்கள் முறையாக கவனிக்கப்படுகின்றனர். கிருமித்தொற்று, இரத்தப்போக்கு, கருப்பைத் தண்ணி உடம்பினுள் புகுதல் போன்ற அம்சம்களும் இடம்பெறலாம். இப்படியான விடயங்களை கவனிக்கும் வசதிகள் வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற போது நாம் இன்னும் கற்காலத்திற்கு செல்வது மிகவும் மடத்தனமான விடயம்.
எற்கனவே இலங்கையில் அதிக நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம்களாவர். நோய்களுடன் கருத்தரித்தல், பதின்ம வயதில் கருத்தரித்தல் மற்றும் 40 வயதுக்கு அதிகமானவர்கள் கருத்தரிப்பதும் எமது சமூகத்தில் அதிகமாகக் காணப்படுகின்றது. பிள்ளைகளுக்கு தேவையான பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தை பெற்றுக்கொள்வதில் கஷ்ட நிலைகள் காணப்படுகின்றது. இது தவிர சட்ட ரீதியான பிரச்சினைகளையும் வீட்டுப் பிரசவத்தால் எதிர்கொள்ள நேரிடுகிறது.

‘தடுப்புமருந்தேற்றலை மறுத்தல் சமுதயாத்தை ஆபத்தான நோய்களுக்கு இட்டுச்செல்லும்’ 
தொற்று நோய் விஞ்ஞான பிரிவு,
சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு

தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்புமருந்தேற்றலானது ஆபத்தான தொற்றுநோய்களிலிருந்து தனிநபர்களையும், சமுதாயத்தையும் பாதுகாக்கிறது. இவ்வழி ஒரு ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உறுதிசெய்யும் என்பது வலியுறுத்தப்பட வேண்டும். வெவ்வேறு காரணங்களினால் தடுப்புமருந்தேற்றலை மறுத்தல் ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்ற நன்மைகளை பெறுவதிலிருந்து தனி நபர்களையும், சமூதாயத்தையும் இழக்கச் செய்கின்றது.

எனவே தடுப்புமருந்தேற்றலின் நன்மைகளையும், இடர்பாடுகளையும் பற்றி ஒழுங்காக பொதுமக்களை அறிவூட்டுவது மிகவும் முக்கியமானது.

தடுப்புமருந்துக்கு தீவிரமான பக்கவிளைவுகள் உருவாகுவதற்குரிய ஆபத்து உண்டு. ஆனால் இவை மிக அரிது. அத்துடன் தடுப்புமருந்தேற்றலின் நன்மைகள் இவ் அரிதான நிகழ்வுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம்;.

2 கருத்துரைகள்:

இறைவன் எந்த நோயையும் அதற்க்கு மருந்தை இறக்காமல் அனுப்புவதில்லை

இதில் ஆங்கில மருந்து என இலங்கையர்கள் அறியாமையால் அழைக்கும் மருந்தும் அல்லாஹ் எமக்கு அருளிய மருந்துகள் தான்

ஜரோப்பாவை துருக்கி வல்லரசு ஆட்ச்சி செய்த காலத்துக்கு முன்னரே பல்லாயிரம் இஸ்லாமிய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மருத்துவமே தற்போது இலங்கையர்கள் ஆங்கில மாருந்து என அறியாமல் அழைக்கும் சத்திர சிகிச்சை உட்பட மேற் கொள்ளப்பாடும் மருத்துகளும் மருத்துவமும் இஸ்லாமிய விஞ்ஞானிகள் ஆங்கிலேயேருக்கு அறிமுகம் செய்த மருத்துவமே அவை

அதை தூக்கி எறிந்து விட்டு இப்படி இஸ்லாத்தில் இல்லாத ஒரு போலி வைத்தியத்தை நம்பி ஏமாற வேண்டாம்

போலிகளை போதிப்பது ஷியா மதத்தவர்கள்தான்
இவர்களையும் அவர்களின் இப்படியான போலி வைத்திய முறைகளையும் யாரும் நம்பி ஏமாற வேண்டாம்

This comment has been removed by the author.

Post a Comment