Header Ads



பகிடிவதையை கொல்வோம், பகிடி பயங்கரத்தினால் 1989 பேர் பல்கலைக்கழகத்திலிருந்து ஓட்டம்


பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பான குறைபாடுகளுக்கு அமைய தேவையான நடவடிக்கைகளை பொலிஸ் நிலையங்கள் மூலம் மேற்கொள்வதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகுடிவதைக்கு எதிராக 1998 ஆம் ஆண்டு இலக்கம் 20 இன் கீழான பகிடிவதை தடை சட்டத்தின் கடுமையான தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதற்கமைவாக பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பான ஆலோசனையை வழங்கியுள்ளார். 

பகிடிவதை சட்டத்தின் சரத்திற்கு அமைவாக குற்றச் செயல் சட்டத்தின் கீழ் பகிடிவதையை மேற்கொள்வோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று உயர் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 

அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார். பகிடிவதை சட்டத்திற்கு அமைவாக குற்றம் இழைத்தவராக காணப்படும் ஒருவருக்கு நீதி மன்றத்தின் மூலம் கடும் வேலையுடன் கூடிய 10 வருட காலம் வரையிலான சிறை தண்டனையை விதிக்க முடியும். 

கடந்த இரண்டு வருட கல்வி ஆண்டு காலப்பகுதியில் பல்கலைக்கழக அனுமதிக்காக பதிவு செய்யப்பட்டிருந்த மாணவர்களுள் 1989 பேர் பகிடிவதையின் காரணமாக பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியுள்ளனர். 

இதுவரையில் 14 மாணவர்கள் பகிடிவதையின் காரணமாக உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

தீவிரவாத அரசியல் கட்சிக்கு உட்பட்ட குழுவொன்று நாட்டின் உயர் கல்வி துறையை சீர்குலைப்பதற்காக செயல்படுவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார். 

இந்த குழுவினரால் நாட்டில் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சுமைகளை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் கூறினார். 

பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா இங்கு கருத்து தெரிவிக்கையில், பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதைக்கான விசேட முறைப்பாட்டு பிரிவொன்று மானிய குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இது வரையில் 417 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக அவர் கூறினார். இம்முறை பல்கலைக்கழகங்களில் உள்வாங்கும் மாணவர்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களுடன் பகுடிவதை குறித்து பெற்றோருக்கு தெளிவுபடுத்தும் கடிதம் ஒன்று அனுப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.