Header Ads



யூனானி மருத்துவர்கள், ஆங்கில மருந்துகளை பரிந்துரைக்கலாமா...?

-Dr. Mohamed Husni-

இலங்கையில், இன்று நாடு முழுவதும் பல நூற்றுக்கணக்கான யூனானி வைத்தியர்கள் சேவையாற்றிக்கொண்டிருக்கிரார்கள். இதில் பெரும்பாலானோர் அரசாங்க ஆயுர்வேத வைத்திய நிலையங்களில் முழுநேர வைத்தியர்களாகவும், சிலர் ஒப்பந்த அடிப்படை வைத்தியர்களாகவும் கடமை புரிகின்றனர். யூனானி வைத்தியர்கள் இலங்கையில் கொழும்பு பல்கலைக்கழக சுதேச மருத்துவ கற்கை நிறுவனத்தில் கல்வி கற்று தமது 05 வருட கல்வியின் பின்னர் பட்டமளிக்கப்பட்டு வெளியேற்றப்படுவர்.

பல காலமாக யூனானி வைத்தியர்களில் குறுப்பிட்ட எண்ணிக்கையானவர்களால் ஆங்கில மருத்துவ முறையானது சட்டரீதியற்ற முறையில் தனியார் மருத்துவ நிலையங்களில் பின்பற்றப்படுவது காலத்தின் தேவை கருதி சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது. ஏனெனில் இது சட்டத்துக்கு புறம்பானதும் மக்களை ஆபத்தில் தள்ளிவிடும் விடயமாகும். யூனானி வைத்திய பாட நெறியில் இவர்களுக்கு ஆங்கில மருந்துகளோ அல்லது முழுமையான ஆங்கில மருத்துவ முறைமையோ கற்பிக்கப்படுவதில்லை. குறுப்பிட்ட ஒருசில நோய்களின் அறிமுகம் மாத்திரமே இவர்களுக்கு கற்பிக்கப்படும். ஆங்கில மருந்துகளை எவ்வாறு கையாள்வது,எந்த நோய்களுக்கு வழங்கப்படுவது போன்ற விடயங்கள் இவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை. ஆனால் தாம் படிக்கின்ற துறைக்கு வெளியில் சென்று தமது வாழ்வாதாரத்துக்காக ஆங்கில மருந்துகளை அப்பாவி நோயாளிகளுக்கு இவர்கள் தமது தனியார் நிலையங்களில் வழங்குவது பல ஆண்டு காலமாக சட்டரீதியற்ற முறையில் இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெறுகிறது. பெரும்பாலும் கொழும்பின் இராஜகிரிய, கொலொன்னாவ, வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, பாணந்துறை, ஆகிய இடங்களிலும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இவர்கள் களவாக ஆங்கில மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குகிறார்கள்.

நான் ஒரு வைத்திய துறையை சார்ந்தவன் என்ற அடிப்படையில் இவர்களால் தவறுதலாக மருந்துகள் வழங்கப்பட்ட பல நோயாளிகளை கண்டுள்ளேன். உதாரணமாக உயர் குருதி அழுத்த நோயாளிக்கு பல பிழையான மருந்துகள் வழங்கப்பட்டு அந்த நோயாளி உயிர் ஆபத்தான நிலைக்கு இட்டு செல்லப்பட்டார். டெங்கு காய்ச்சலுக்கு பிழையான மருந்து வழங்கப்பட்டு அந்த நோயாளிகள் ஆபத்தான கட்டத்துக்கு தள்ளப்பட்டனர். மருத்துவ ஆய்வுஅறிக்கைகளை சரியாக விளங்கக்கூடிய அறிவின்மையால் பல நோயாளிகள் பிழையான மருத்துவ முறைமைக்கு உட்படுகின்றனர். மேலும் இவர்களுக்கு நோயியல் சம்பந்தமான முழு அறிவும் இன்மையால் பிழையான நோய்களை அடையாளப்படுத்தி தவறான மருந்துகளை, அறிவுரைகளை மக்களுக்கு வழங்கும் மிகவும் துர்ப்பாக்கிய நிலையில் இவர்கள் உள்ளனர்.

இவ்வாறான பிழையான நடவடிக்கை மூலம் தனியார் மருத்துவ நிறுவனங்களில் இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையானது நோயாளிகளை பிழையான நடைமுறைகளுக்கு இட்டுச்செல்லுகின்றது. இவர்கள் நோயாளிகளிடம் தாங்கள் தமது பாடநெறியில் ஆங்கில,யூனானி மருத்துவ முறைகளை கற்பதாக பொய் கூறியே ஆங்கில மருந்துகளை வழங்குகின்றனர். ஆனால் இவர்களின் விரிவுரையாளர்களிடம் தொடர்புகொண்டு வினவியபோது தமது பாடத்திட்டத்தில் அவ்வாறு இல்லை எனவும், தாங்கள் யூனானி சார்ந்த விடயங்களை மாத்திரமே கற்பிப்பதாகவும் தெரிவித்தனர்.

தமது அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட வழியில் ஆங்கில மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவதானது இலங்கை மருத்துவ சபையின் சட்டதிட்டங்களுக்கு புறம்பானது ஆகும். இலங்கை அரச சட்டத்தின் அடிப்படையில் இவ்வாறானவர்கள் போலி வைத்தியர்கள் என்றே நோக்கபடுகின்றனர். பொதுமக்கள் இவர்களை தமது பகுதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகள், போலீஸ் நிலையம், பொது சுகாதார அதிகாரி ஆகியோரிடம் முறையிடலாம். பொது மக்கள் இந்த விடயத்தில் அசிரத்தையாக இருக்குமிடத்து, இந்த போலி மருத்துவர்களால் வழங்கப்படும் பிழையான மருந்துகள், பிழையான மருந்தின் அளவுகள் உங்களுக்கும் உங்களின் குழந்தைகளுக்கும் எமனாக அமையவும் கூடும்.

தற்போதுள்ள காலப்பகுதியில் எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள பிழையான மருத்துவ நம்பிக்கைகளுக்கு மத்தியில், இவ்வாறான யூனானி வைத்தியர்களின் பிழையான நடைமுறையும் எமது சமூகத்தின் சுகாதாரம் சம்பந்தமான கட்டுக்கோப்புக்கு பிழையான முன்னுதாரணமாக அமையும். அத்துடன் பொது மக்களின் நன்மை கருதி மக்களை பிழையாக வழி நடத்தும் யூனானி மருத்துவர்களின் தரவுகள் சேகரிக்கத்தொடங்கப்பட்டுள்ளது.

தமது மருத்துவ தேவையை நிறைவேற்றும் உரிமை பொதுமக்களாகிய எமக்கு உள்ளது. இந்த அடிப்படையில் எமக்கு மருந்துகளை வழங்கும் நபர் தகைமை வாய்ந்தவரா என்பதை ஆராய வேண்டும்.

1 comment:

  1. அவர்கள் வெளிவாரியாக pharmacology(English medicine) படிக்கிறார்கள், Doctors ஒரு நாளும் நான் அது படிச்சன் அது படிச்சன் நு நோஆளிய convince பண்றல்ல அது தேவையும் இல்ல it sounds hilarious :D :D

    ReplyDelete

Powered by Blogger.