Header Ads



இன்று சம்பியன், ஆகப்போவது யார்...?

உலகிலுள்ள கோடிக்கணக்கான உதைபந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள உலகக் கோப்பை உதைபந்தாட்டப் போட்டி 2018 இன்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்- - குரோ ஷியா அணிகள் மோதுகின்றன.

ரஷ்ய நேரப்படி மாலை 6.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது. இலங்கை நேரப்படி இரவு 08.30 மணிக்கு நேரடி ஒளி/ஒலிபரப்புகள் ஆரம்பமாகின்றன.ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிலுள்ள Luzhniki உதைபந்தாட்ட அரங்கில் போட்டி நடைபெறவுள்ளது. மிகப் பெரிய அரங்கமாக கருதப்படும் இதில் 81,000 பேர் அமரக்கூடிய வசதியும் உள்ளது.

இலங்கையில் போட்டிகளைக் கண்டுகளிக்க அனைத்து சுற்றுலா ஹோட்டல்களிலும் விசேட அகலத்திரை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உதைபந்தாட்ட ரசிகர்கள் இன்று போட்டிகளைக் கண்டுகளிக்க மிகவும் ஆர்வத்துடன் ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளனர். உலக கிண்ண இறுதிப் போட்டிக்கு பலம் வாய்ந்ந நாடுகள் வரும் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இவ்விரு நாடுகளும் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன. இது சில ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

புதிய சாம்பியனா? அல்லது 1998 வரலாறு மீண்டும் திரும்புமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்று எழுந்துள்ளது.

அரையிறுதி ஆட்டங்களில் பிரான்ஸ் 1--0 என பெல்ஜியத்தையும், குரோஷியா 2--1 என இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றன.

பிரான்ஸ் கடந்த 1998 இல் சாம்பியன் பட்டம் வென்றது. 2006 இல் இறுதிச் சுற்றுவரை முன்னேறியது.

தற்போது மூன்றாவது முறையாக இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில் குரோஷியா கடந்த 1998 இல் மூன்றாம் இடம் பெற்றது. தற்போது இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அதே நேரத்தில் நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் பின்தங்கி இருந்து கூடுதல் நேரத்தில் குரோஷிய அணி அபாரமாக விளையாடி வெற்றிகளை ஈட்டி இறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த வீரர்களின் ஆட்டம் இறுதி ஆட்டத்தில் வெற்றியை நிர்ணயிக்கும்.

லூக்கா மொட்ரிக்-கோலோ கண்டே: குரோஷிய கேப்டன் மொட்ரிக் உலகின் சிறந்த மிட்பீல்டர்களில் ஒருவராக உள்ளார். கோல்கள் அடித்தல் மற்றும் வாய்ப்புகளை உருவாக்கி, தனது அணியின் வெற்றிப் பயணத்துக்கு வழிகோலியுள்ளார். அதே நேரத்தில் பிரான்ஸின் கோலோ கண்டே தற்காப்பு மிட்பீல்டராக அண்மைக்காலமாக சிறப்பாக விளையாடி வருகிறார்.

எந்த சோர்வும் இல்லாமல் மைதானத்தில் தொடர்ந்து ஓடி ஆட்டத்தை திசை திருப்புவதில் சிறந்து விளங்குகிறார். நடுக்களத்தில் இருவரது ஆட்டம் காண சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பரபரப்பாக நடைபெறவுள்ள இன்றைய இறுதி ஆட்டத்தில் கடந்த 1998 வரலாற்றை பிரான்ஸ் மீண்டும் அடையுமா? அல்லது குரோஷியா புதிய உலகக் கோப்பை சாம்பியனாக உருவாகுமா? என உலகம் முழுவதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா நடுவர்

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்-−குரோஷியா அணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மோதுகின்றன. இதற்கு பிரதான நடுவராக ஆர்ஜென்டீனாவின் நெஸ்டர் பிட்டானா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2014 பிரேஸில் உலகக் கோப்பையிலும் பிட்டானா 4 ஆட்டங்களில் நடுவராக பணிபுரிந்தார். பிட்டானாவுக்கு உதவியாக ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஹெர்னன் மைடானா, ஜுவான் பேப்லோ, உதவி நடுவர்களாக செயல்படுவர். 4ஆவது நடுவரான டச்சு நாட்டின் ஜார்ன் குய்பர்ஸ்க்கு எர்வின் ரிஸனிஸ்ட்ரா உதவி நடுவராக செயல்படுவர்.

1 comment:

  1. அறிந்து கொள்ளுங்கள்:

    “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்;    

    மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்;

    (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்;

    (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது;

    ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்;

    பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே;

    எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு;

    (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.

    (அல்குர்ஆன் : 57:20)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.