Header Ads



நீர்மூழ்கி கப்பல்களினால், இலங்கைக்கு அச்சுறுத்தல் - ஒப்புக்கொள்கிறார் பிரதமர் ரணில்

எதிர்வரும் காலங்களில், நீர்முழ்கி கப்பல்களின் அச்சுறுத்தல்களை சிறிலங்கா எதிர்கொள்ளும் நிலை உருவாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க அனைத்துலக இராஜதந்திர கற்கை நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே, அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

“இந்தோ – பசுபிக் பிராந்தியம் என அமெரிக்கா அறிமுகப்படுத்தியதை சீனா தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் தமது அதிகாரத்தை கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சியாகவே சீனா இதனை கருதுகின்றது. அவ்வாறு எதுவும் இல்லை.

எவ்வாறாயினும் சீனா இங்கு பல்வேறு உத்திகளை பயன்படுத்துகின்றது. அந்த உபாயத் திட்டங்களுக்குள் சிறிலங்காவும் உள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான, சீனாவுடனான உடன்பாட்டில்,  இந்த விடயம் மிக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை சீன அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேவேளை, நீர்மூழ்கி கப்பல்களினால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் குறித்து சிறிலங்கா கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கு அமைவாக சிறிலங்கா  கடற்படை சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் தேவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கைகளை கண்காணிக்க, ரோந்துப் படகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. காலியில் உள்ள சிறிலங்கா கடற்படைத் தளமும், அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படவுள்ளது.

எனவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை தமது பாதுகாப்பு தளமாக பயன்படுத்த சீனாவிற்கு சந்தர்ப்பம் கிடையாது.

இன்னொரு புறத்தில், மத்தல விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை இந்தியாவுடன் இணைந்து முன்னெடுக்க உத்தேசித்துள்ளளோம்.

எனவே சீனாவுக்கு  தான் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது என இனி யாராலும் குற்றம்சாட்ட முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.