Header Ads



கால்பந்து திருவிழாவில், புரளும் பணம்

விளையாட்டு வீரர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், போட்டிகளை நடத்தும் நாட்டுக்கும் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்துக் கொடுக்கும் கால்பந்து திருவிழா தற்போது ரஷ்யாவில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.

2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்திய தென் ஆப்பிரிக்கா ஈட்டிய வருவாய் எவ்வளவு தெரியுமா? சுமார் 500 கோடி அமெரிக்க டாலர்கள்!

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடர்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளோ உச்சத்தில் இருக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து உலகக்கோப்பை 32 கால்பந்து அணிகள் ரஷ்யாவில் முகாமிட்டுள்ளன. விளையாட்டிலும், மைதானத்திலும் ஒவ்வொரு நிமிடமும் அடிக்கப்படும் ஒவ்வொரு கோலும் ஆட்டத்தையும், மதிப்புகளையும் மாற்றியமைக்கலாம்.

ஆனால் இந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளுடன் பின்னிப் பிணைந்திருப்பது கோல்களும், அதை விளையாடும் வீரர்களும் மட்டுமல்ல, அவற்றை இணைக்கும் கண்ணியாக செயல்படுவது பணமும், பொருளாதாரமும் தான்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளால் யாருக்கு என்ன நன்மை?


போட்டியை நடத்துவதற்கு பல்வேறு நாடுகளிடையே கடுமையான போட்டி இருப்பது அனைவருக்கும் தெரியும். கால்பந்து போட்டிகளை நடத்துவதற்காக இத்தனை போட்டி எதற்காக? பில்லியன் கணக்கான பணத்தை ஒரு நாடு செலவு செய்ய தயாராக இருப்பது வெறும் விளையாட்டு ஆர்வத்திற்காகவா?

இந்த கேள்விக்கான நிதர்சமான பதில் பணம், பொருளாதாரம். நம்பமுடியவில்லையா? நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு ஏற்பாடு செய்வது ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி ஃபுட்பால் அசோசியேஷன், சுருக்கமாக சொன்னால் ஃபிஃபா.

உண்மையில் நாட்டில் முதலீட்டை அதிகரிப்பதும், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியும், முதலீடும் போட்டி ஏற்பாடுகள் மூலம் கிடைக்கும்.

தற்போது ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை போட்டிகளுக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏறக்குறைய ஆறு லட்சம் பேர் ரஷ்யாவிற்கு வருவார்கள் என்பது விளையாட்டு ஏற்பாட்டாளரான ஃபிஃபாவின் கணிப்பு.

போட்டிகள் நடைபெறும் ரஷ்யாவில் சுற்றுலா மேம்படும். போட்டிகள் நடைபெறும் 11 நகரங்களிலும், ஹோட்டல் மற்றும் உணவகத் தொழில் சக்கைபோடு போடும். அத்தோடு அதை சார்ந்த வேறு பல தொழில்களும் உத்வேகம் பெற்றுள்ளன.

உள் கட்டமைப்பு மேம்பாடும்
வேலைவாய்ப்புகள் பெருகும்
பயிற்சி மைதானங்கள் மேம்படும்
விளம்பர வாய்ப்புகள் அதிகரிக்கும்
சுற்றுலா, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு நெட்வொர்க் மேம்படும்.

ரஷ்யாவிற்கு முன், இந்தப் போட்டிகளை நடத்திய நாடுகளுக்கு கிடைத்த நன்மைகளைப் பார்த்தால் இதை இன்னும் சற்று தெளிவாகப் புரிந்துக் கொள்ளலாம்.

2002 கால்பந்து உலகக்கோப்பை போட்டியை நடத்திய ஜப்பானுக்கும், தென் கொரியாவுக்கும் கிடைத்த வருமானம் கிட்டத்தட்ட 900 கோடி அமெரிக்க டாலர்கள்.

2006 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்திய ஜெர்மனி 1200 கோடி டாலர்களையும், 2010ஆம் ஆண்டு போட்டியை நடத்திய தென்னாப்பிரிக்கா 500 கோடி டாலர்களையும் ஈட்டின.

பொதுவாக போட்டி நடைபெறும்போது விளையாட்டு வீரர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் தொழில்கள் மட்டும் மேம்படுவதில்லை, அதனுடன்கூடவே, சில விலங்குகளும் சிறப்பு கவனம் பெறுகின்றன. பால் என்ற ஆக்டோபஸ் நினைவுக்கு வருகிறதா? 2010 உலகக்கோப்பை போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணித்து சொன்னதற்காக பிரபலமானது அந்த அக்டோபஸ்.

தற்போதைய கால்பந்து உலகக்கோப்பை போட்டி ஏற்பாடுகளுக்காக ரஷ்யா சுமார் 1,100 கோடி டாலர்களை செலவு செய்திருக்கிறது. அது எதிர்பார்க்கும் லாபம் 3,000 கோடி. போட்ட முதலீட்டுக்கு சுமார் இரண்டரை மடங்கு லாபம் கிடைக்கும் என்றால், அந்த பொன் முட்டையிடும் போட்டிகளை நடத்த எந்த நாடுதான் போட்டி போடாது?

மெக்கென்சி கன்சல்டன்சியின் ஒரு அறிக்கையின்படி, உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் ரஷ்யாவின் ஜி.டி.பி வழக்கத்தைவிட (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 1,500 கோடி டாலர் அதிகரிக்கும். ஆனால் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட ரஷ்யா போன்ற நாட்டில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், பரவசமூட்டும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யும் ஃபிஃபா போட்டி நடத்தும் நாட்டைவிட அதிக வருவாய் ஈட்டுகிறது. ஃபிஃபாவுக்கு மொத்தம் 53 பில்லியன் 40 கோடி டாலர்கள் அளவுக்கு வருமானம் கிடைக்குமாம்! ஆனால் இந்த வருமானத்தில் பெரும்பகுதியை, பரிசாகவும், ஊக்கத் தொகையாகவும் ஃபிஃபா கொடுத்துவிடுகிறது.

No comments

Powered by Blogger.