July 16, 2018

இலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்

– அனஸ் அப்பாஸ் –

TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன்புப் புதல்வர் அயான், ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் (FIFA-2018) ரஷ்யாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நடைபெற்ற ஆரம்பப் போட்டி தொடர்பான செய்தியைத் தொகுத்து வழங்கும் அரிய வாய்ப்பை பெற்றிருந்தார். இலங்கைக்கு முதன்முறையாக இச்சந்தர்ப்பம் கிடைத்த நிலையில் ரஷ்யாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நடைபெற்ற ஆரம்பப் போட்டியில் உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் நடத்தப்படும் போட்டிகள் தொடர்பிலான சர்வதேச சிறுவர் ஊடக மத்திய நிலையத்திற்கான ஊடக அறிக்கை சமர்ப்பிப்பில் முதல் தரத்தை அயானின் எழுத்துக்கள் பெற்றமையால் அதனை கௌரவித்து சான்றிதழ், விருது என்பன அவருக்கு வழங்கப்பட்டது.

இலங்கையின் சார்பில் முதன்முறையாக இளம் ஊடகவியலாளராக அயான் சதாத் கலந்துகொண்டதுடன், இவருடன் இலங்கை கொடியசைக்கும் சந்தர்ப்பம் கிடைத்து டினுக பண்டார பயணம் மேற்கொண்டிருந்தார். கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட அயான், ரோயல் கல்லூரியில் தரம்-08 இல் கற்று வரும் ஒரு இளம் மாணவர்.

பீபா (FIFA) உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னோடியாக நடத்தப்பட்ட கெஸ்ப்ரோம் நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் பலனாக இந்த அரிய வாய்ப்பு அயான் சதாத்துக்கு கிடைத்தது. இதன் மூலம் தனது தாய்நாடான இலங்கைக்கும் தனது பாடசாலையான றோயல் கல்லூரிக்கும் பயிற்சிபெறும் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்துக்கும் புகழையும் பெருமையையும் அயான் சதாத் பெற்றுக் கொடுத்துள்ளார். இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 211 நாடுகளைச் சேர்ந்த 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் போட்டி தொடர்பான ஆய்வுக் கட்டுரையையும் போட்டி தொடர்பான செய்தி தொகுப்பையும் எழுதுவதற்கு அயான் சதாத் தெரிவானமை பெருமைக்குரிய விடயமாகும்.

மொஸ்கோ, ஸ்பார்ட்டக் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தில் நடைபெற்ற கெஸ்ப்ரோம் நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சியின் ஓர் அம்சமான நட்புறவு, சமத்துவம், நேர்மை, சுகாதாரம், சமாதானம், அர்ப்பணிப்பு, வெற்றி, பாரம்பரியம், மதித்தல் ஆகிய ஒன்பது பெறுமதிமிக்க பண்புகளை உள்ளடக்கிய பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்திலும் அயான் சதாத் உரையாற்றினார். இதன்போது பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பமும் அயானுக்குக் கிடைத்தது.

இளைஞர்கள் மத்தியில் உதைப்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்துவதும், ஆராக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும். 2013 முதல் வருடந்தோறும் நடத்தப்பட்டுவரும் இந்த நட்புறவு திட்டம் 2013 இல் 8 நாடுகளும், 2014 இல் 16 நாடுகளும், 2015 இல் 24 நாடுகளும், 2016 இல் 32 நாடுகளும், 2017 இல் 64 நாடுகளும், 2018 இம்முறை 211 நாடுகள் என சர்வதேச கால்பந்தாட்ட பங்கேற்பில் தொடர் அதிகரிப்பை எட்டிவருகின்றது.

இவ்வாறான ஒரு வாய்ப்பு கிடைத்ததையிட்டு பெருமை அடைவதாக அயான் சதாத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அயான் சதாத் உட்பட பலருக்கு விருதுகளும் டிப்ளோமா சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அத்துடன், கெஸ்ப்ரோம் நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சியில் இலங்கை சார்பாக மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தைச் சேர்ந்த அயான் சதாத்தின் சக வீரரான தினுக்க பண்டார (நுகேகொடை, புனித சூசையப்பர் கல்லுரி) கோல்காப்பாளராகத் தெரிவாகி லயன் அணிக்காக விளையாடினார். இவர் மூன்று போட்டிகளில் கோல்காப்பாளராக விளையாடி ஒரு கோலை மாத்திரமே விட்டுக்கொடுத்தார்.

இவர்கள் இருவரும் மற்றைய நாடுகளின் சிறுவர்களுடன் மொஸ்கோ லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆரம்பி விழா வைபவத்தில் கலந்துகொண்டதுடன் ஆரம்பப் போட்டியையும் கண்டு களித்தனர்.

போட்டிகளை நோக்கினால் 32 சர்வதேச நட்புறவு அணிகளைச் சேர்ந்த இந்த இளம் வீரர்கள் சர்வதேச நட்புறவுக்கான காஸ்ரொம் கால்பந்து சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றனர்.

உலக நாடுகளைச் சேர்ந்த சிறுவர்களை ஓரணியாகச் சேர்த்து கால்பந்தாட்டத்தின் ஒன்றுபடுத்தும் சக்தியைக் கொண்டுவருவதே இந்த சிநேகபூர்வ சுற்றுப் போட்டியின் குறிக்கோளாகும்.

சீராகக் கற்று ஒரு விமானியாக வர வேண்டும் என்கின்ற இலட்சிய வேட்கையுடன் பயணிக்கும் அயான், கால்பந்தாட்டத்தில் முன்னேறி இலங்கை தேசிய அணிக்கு விளையாடுவதை எதிர்பார்ப்பாகக் கொண்டு தொழிற்படுகின்றார்.

மேலும், F4F (Football For Friendship) சமாதானத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள அயான், இலங்கை நாட்டில் சமாதானத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்ப கால்பந்தாட்டத்தை நாடு பூராக கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்றிருப்பதில் உவகை கொள்கின்றார். இச் செயற்பாட்டில் உதவத் தயாராக இருக்கும் சகலருடனும் பங்களிப்புடன் செயலாற்ற தயார் என அழைப்பும் விடுக்கின்றார்.

இவ் அரிய சந்தர்ப்பத்தை அடைய ஒவ்வொரு நிலைகளிலும் காரணமாகிய பெற்றோர், மென்செஸ்டர் கால்பந்து அகடமியின் ஸ்தாபகத்தலைவர் ஜோர்ஜ் ஓகஸ்டின், சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளரும், ஆலோசகருமான முஹீத் ஜீரான், குடும்ப உறவினர்கள், பாடசாலை சமூகம் மற்றும் வாழ்த்திய உற்சாகம் தந்த, பிரார்த்தித்த அனைவருக்கும் அயான் நன்றி கூறுவதுடன் தனது வாழ்க்கையில் இப்படி ஒரு சர்வதேச நிகழ்வில் பங்கேற்பேன் என கனவிலும் நினைக்கவில்லை என்று பூரிப்புடன் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்று கூறி முடிக்கின்றார்.

1 கருத்துரைகள்:

Post a Comment