Header Ads



பேஸ்புக்கை தடைசெய்வது, நாட்டுக்கு நல்லது - மட்டக்களப்புடி மேயர் கூறுகிறார்

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இளைஞர் சமுதாயத்தை நெறி பிறழ வைத்து சமூகக் குழப்பங்களுக்குத் தூபமிடும் பேஸ்புக்கை தடைசெய்வது நாட்டு நலனுக்கு நல்லது என தான் கருதுவதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவையால் அரச திணைக்களங்கள், உள்ளுராட்சி மன்றங்கள், பொலிஸ் மற்றும் சிவில் சமூகப் பிரதிகள் ஆகியோருக்கு யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையிலும் செயற்படுத்தப்பட்டு வரும் சமாதான சௌஜன்ய செயற்பாடுகளைப் பற்றி தெளிவுபடுத்தும் கருத்தரங்கில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் மட்டக்களப்பு சதுனா விடுதியில்  இடம்பெற்ற சகவாழ்வுக்கான வழிவகைகளைக் கண்டுபிடிக்கும் இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ பௌத்த சயமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகவாழ்வும் இன ஐக்கியத்திற்குமான சர்வமத ஆர்வலர்கள் மற்றும் சமாதான ஐக்கிய செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய மாநகர முதல்வர், எனது ஆய்வின் அடிப்படையிலான பார்வையில் முகநூல் என்பது வீணாக இனமுரண்பாட்டைத் தோற்றுவிக்கும் ஒரு ஊடகமாகவே பயன்படுத்தப்படுகிறது.

பேஸ்புக் பதிவுகளில் ஒரு பக்குவமும் முதிர்ச்சியும் காணப்படுவதில்லை, உண்மைத் தன்மையும் இருப்பதில்லை, உண்மையைத் தேடி ஆய்வு செய்வதுமில்லை, எல்லாவற்றையும் பதிவேற்றி விடுவதுதான் அநேகமான பயன்பாட்டாளர்களின் பொழுது போக்காக இருந்து கொண்டிருக்கின்றது.

இதனால் பாதிப்புக்கள் அதிகம். எங்களையும் மீறிய ஒரு சக்தி எப்பொழுதுமே இருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. பேஸ்புக் பயன்பாட்டினால் ஏற்படும் இன மத முரண்பாடுகளைக் களைய தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவையால் என்ன செய்ய முடியும் என்று நான் அறிய விரும்புகின்றேன்.

உரிமைக்காக போராடிய நாம் இன்று பிளவுபட்டு நிற்கின்றோம். பக்கத்து வீடு, அடுத்த தெரு, அருகிலுள்ள விளையாட்டு மைதானம், அடுத்துள்ள சமூகம், என்பனவற்றிலெல்லாம் நாம் பிரிவினையைத்தான் வேண்டி நிற்கின்றோம்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் உண்மையான முறைப்படியான மிள்குடியேற்றம் இடம்பெறவில்லை. மீள் குடியேற்றத்தில் உளவியல் ரீதியான செய்பாடுகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும்.

ஆனால் கிழக்கு மாகாணத்தில் இந்த படிமுறையான மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை. மீள்குடியேற்றத்தைப் பொறுப்பெடுத்த சர்வதேச மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் அரசும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றக் காரர்களை இடை நடுவில் கைவிட்டு விட்டு யுத்தம் முடிந்த கையோடு வடக்குக்கு ஓடி விட்டார்கள்.

இதனால் கிழக்கு மீள் குடியேற்றம் என்பது முற்று முழுவதுமாகப் பாதிக்கப்பட்டு விட்டது. இதுவும் இனரீதியான வக்கிரபுத்திகள் ஏற்பட ஒரு காரணமாய் அமைந்து விட்டது. விளையாட்டில் கூட சமர் என்று பெயர் வைத்து விiயாடுகின்றோம் ஏன் அதனை சினேகபூர்வ விளையாட்டு என்று அழைக்க முடியாது.
அர்த்தமற்ற சிறிய செயற்பாடுகளும் மீள முடியாத இழப்புக்களுக்கு இட்டுச்செல்லும் என்பதை நாம் நினைவில் கொண்டு நிரந்தர அமைதிக்காக நாமெல்லோரும் காரண காரியத்தோடு உழைக்க வேண்டும் என்றார்.  (சிவம்).

No comments

Powered by Blogger.