Header Ads



நுறைச்சோலை வீடு, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவதன் மர்மம் என்ன..?

சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்காக சவூதி நிதியுதவியுடன் நுறைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளையும், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இன விகிதாசாரத்திற்கமையவே கையளிக்க வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்துள்ளார்.

நேற்று 10.07.2018 செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போதே (DCC) அவர் இவ்வாறு தெரிவித்தார். சமீபத்தில் அம்பாரையில் இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் இது சம்பந்தமாக கடும் வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தமை தெரிந்ததே.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இது தொடர்பில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருப்பதால், அதற்கமையவே செயற்பட வேண்டியுள்ளது. மாறாகச் செயற்பட்டால் அது நீதீமன்ற அவமதிப்பு என்றாகி விடும்.

எவ்வாறாயினும், இன விகிதாசாரத்திற்கு அமையவே இவ் வீடுகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றே அத் தீர்ப்பு சொல்கிறது. ஆனால், எந்த இன விகிதாசாரம் என்று அத் தீர்ப்பில் வரையறுக்கப்படவில்லை. எனவேதான் அக்கரைப்பற்று பிரதேச இன விகிதாசாரத்தைக் கடைப்பிடிக்கும் வகையில், சட்ட நுணுக்கங்களைக் கையாள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் லஹுகல பிரதேசத்தில் மிகக் குறைவானோரே (03 பேரளவில்) சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்தும், 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதேபோன்றுதான் சுனாமியால் பாதிக்கப்படாத அம்பாறை பகுதியில் 10 க்கு மேற்பட்ட சுனாமி வீடுகள் அதிகாரிகளின் செல்வாக்கினால் நிர்மாணிக்கப்பட்டன.

இதேபோன்றுதான் கல்முனை, நிந்தவூர், ஆலையடிவேம்பு போன்ற பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு அதே பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டன.

ஆனால், அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு, அதே பிரதேச செயலகத்திற்குட்பட்ட நுறைச்சோலையில் வீடு வழங்கப்படுவதை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவதன் மர்மம் என்ன எனவும் அவர் அங்கு கேள்வி எழுப்பினார்.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் வகையிலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

1 comment:

  1. Our people must ask the donator Saudi Arabian government to push our President to use His Excellency Power to fulfill the agreement.

    ReplyDelete

Powered by Blogger.