Header Ads



சம்பியன் ஆகியது பிரான்ஸ்


ரஷ்யாவில் நடைபெற்ற உலககோப்பை இறுதிப்போட்டியில் குரோசியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.

1998-ஆம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 2-வது முறையாக வாகை சூடும் முனைப்பில் களமிறங்கியது.

தோல்வியே சந்திக்காத அந்த அணி அரைஇறுதியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் விரட்டியது.

இந்த உலக கோப்பையில் குரோஷிய அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

லீக் சுற்றில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தும், அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை போட்டுத்தாக்கியதும் குரோஷியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இன்று தொடங்கிய இறுதிஆட்டத்தின் துவக்கம் முதலே பதற்றம் தொற்றிக் கொண்டது.

இதில் ஆட்டம் தொடங்கிய 18 வது நிமிடத்திலே குரோஷியா அணி வீரர் மரியோ மான்ட்ஜூகிச் அடித்த சுய கோலால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைபெற்றது.


இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் 1 கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.

அதன் பின் பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் 1 கோல் அடித்தார். இதன்மூலம் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனால் ஆட்டம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. இதன்மூலம் முதல்பாதி ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாவது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீரர்களும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

48-வது நிமிடத்தில் குரோசிய வீரர் அடித்த பந்தை பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் அபாரமாக தடுத்தார். ஒரு கோல் முன்னிலை பெற்றாலும் பிரான்ஸ் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடவில்லை.

தொடர்ந்து அட்டக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குரோசிய வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் பந்தை கடத்தும் நோக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.

59-வது நிமிடத்தில் போக்பா ஒரு கோல் அடித்தார். பிரான்ஸ் எல்லை அருகில் இருந்து அடித்த பந்தை குரோசியாவின் வலது கார்னர் பக்கம் சென்றது.

மப்பே புயல்வேகத்தில் சென்று பந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோல் எல்லைக்குள் வைத்து கிரிஸ்மானிடம் பாஸ் செய்தார். கிரிஸ்மான் அருகில் நின்ற போக்பாவிடம் கடத்தினார்.

அவர் புயல் வேகத்தில் அடித்தார். பந்து குரோசியா டிபென்டர் மீது பட்டு மீண்டும் போக்பாவிடம் வந்தது. இடது காலால் உதைத்து கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.

65-வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார். இதனார் பிரான்ஸ் 4-1 என முன்னிலைப் பெற்றது.

அதன் பின் குரோஷியா அணியின் வீரர் மான்ட்ஜூகிச் 1 கோல் அடித்து அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். ஆனால் இறுதிவரை குரோஷியா அணியினரால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை.

இதன்மூலம் குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

No comments

Powered by Blogger.