July 03, 2018

மாகாண தொகுதி எல்லைநிர்ணயக் குழுவின் பரிந்துரைகளில் அநீதி - பாராளுமன்றம் அதை நிராகரிக்க வேண்டும்

மாகாண சபைத் தேர்தலை, புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா நடத்துவது என்பதில் அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

எனினும், புதிய தேர்தல் முறையை பாராளுமன்றம் அங்கீகரித்ததன் பின்னர், 50% ஆசனங்கள் தேர்தல் தொகுதிகள் மூலமும், மிகுதி 50% ஆசனங்கள் பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படல் வேண்டும்.

இதனடிப்படையில் மாகாண தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்கவென ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் அறிக்கை எதிர்வரும் 06.07.2018 இல் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

எல்லை நிர்ணயக் குழுவின் இந்தப் பரிந்துரைகளில், சிதறி வாழும் சிறுபான்மை சமூகத்தினருக்கு - குறிப்பாக முஸ்லிம்களுக்கு - பாதகமான அம்சங்கள் பல உள்ளன.

முஸ்லிம் பிரதிநிதித்துவம் தற்போது உள்ளதை விடவும், கணிசமாகக் குறைந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது அரைவாசியாகக் குறைந்து விடும் என்ற அச்சமும் பரவலாக வெளியிடப்படுகிறது.

எல்லை நிர்ணயம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு ஆலோசனைகள் இக் குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பல் அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்கும் பரிந்துரைகள் குழுவினால் சாதகமாகப் பரிசீலிக்கப்படவில்லை என்பது கவலைக்குரியது.

கடந்த கால  அனுபவங்களின் விளைவாக, நாட்டின் தேர்தல் முறை சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற பொதுக் கருத்தொன்று மேலெழுந்து, அது தொடர்பான பொது உடன்பாடொன்றும் ஏற்பட்டது.

அந்த உடன்பாட்டில், சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் உரிய முறையில் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்ற அம்சமும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்புலத்தில், தேர்தல் முறை சீர்திருத்தம் தொடர்பான பல கூட்டங்களில் கலந்து கொண்டு ந .தே.மு பல தரப்பட்ட ஆலோசனைகளை முன்வைத்தது. சிவில் சமூக பிரதிநிதிகளும் பல்வேறு முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தனர்.

ஆதலால், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள மாகாண தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான மேற்படி குழுவின் முன்மொழிவை நிராகரிக்க வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாராளுமன்றத்தில் இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பிரதமர் தலைமையில் இதனை மீளாய்வு செய்யும் ஏற்பாடுகள் உள்ளன. ஆதலால், பரந்துபட்ட அபிலாசைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த முன்மொழிவை நிராகரிப்பதே மிகச் சிறந்த தெரிவாகும்.

பாரபட்சமான இந்த ஏற்பாடு அனாவசியமான குழப்பங்களையும் முரண்பாடுகளையும் தூண்டி விடும் எனவும், அநீதியானது எனவும் ந.தே.மு. சுட்டிக் காட்டியுள்ளது.

இன முரண்பாட்டின் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்ட இலங்கை, இவ்வாறான பாரிய தவறுகளை இழைக்கக் கூடாது. அவ்வாறெனில், வரலாற்றிலிருந்து பாடங்களையோ படிப்பினைகளையோ பெறாதவர்களாகவே நாம் இருப்போம்.

சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கூடுதல் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டும் எனவும் ந.தே.மு. கோரியுள்ளது.

அத்தோடு, புதிய முறையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலின்போது பெருமளவு பணப் பரிமாற்றமும் மோசடிகளும் பரவலாக இடம்பெற்றதையும் அவதானிக்க முடிந்தது. அந்த அபாயங்கள் இதிலும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்தப் பின்னணியில், கடந்த 30.06.201​8​ அன்று நடைபெற்ற ந.தே.மு. வின் பேராளர் அவை ஒன்றுகூடல், மாகாண சபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் எனவும், தேர்தலை இழுத்தடிக்காது கூடிய விரைவில் நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கது.

பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் பழைய தேர்தல் முறையையே வலியுறுத்துவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எல்லோருடைய அபிலாசைகளையும் உரிய வகையில் கருத்திற் கொள்ளாத புதிய முறையை விட, பழைய விகிதாசார முறையே சிறந்தது எனவும் ந.தே.மு. வலியுறுத்திக் கூறியுள்ளது.

1 கருத்துரைகள்:

Dear NFGG, எழுவாய்-பயனிலை ஒன்றும் இல்லாமல் statement விடாதீர்கள். 50-50 தேர்தல் முறை, தொகுதி பிரிப்பு எல்லாம் சரி தான்.

ஆனால், விகிதாசார தேர்தல் முற்றாக ஒழித்தலே நியாயமான-சரியான ஜனநாயகம்.

Post a Comment