Header Ads



திருமலைக்கு சென்ற இளஞ்செழியனின், முதல் தீர்ப்பே மரணதண்டனை

திருகோணமலையில் தனது தாயின் இரண்டாவது கணவரை கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஏ.எச்.சமீர லக்மால் என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி தனது தாயாரின் இரண்டாவது கணவரான ரத்னாயக்க முதியன்சலாகே புத்திக ரத்னாயக்க என்பவரை ஏ.எச்.சமீர லக்மால் கத்தியால் குத்தி கொலை செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று -03- விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொலை குற்றம் புரிந்ததாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கி நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு இடம்மாற்றம் பெற்றுச் சென்ற நீதிபதி இளஞ்செழியனின் முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.