Header Ads



கடுமையாக போராடவுள்ள பிரான்ஸ் - பெல்ஜியம், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, 1998-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரான்ஸ், கோப்பையை வெல்லாத பெல்ஜியம், குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

முதல் அரை இறுதி ஆட்டம் நாளை (10-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 1998, 2006 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது.

பெல்ஜியம் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது. 1986-ம் ஆண்டு உலக கோப்பையில் 4-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாக இருக்கிறது. அந்த உலக கோப்பையில் அரை இறுதியில் அர்ஜென்டினாவிடம் 0-2 என்ற கணக்கில் தோற்று இருந்தது.

உலக தர வரிசையில் 7-வது இடத்தில் பிரான்ஸ் அணி முன்களம், நடுகளம், பின்களம் ஆகியவற்றில் சமபலத்துடன் இருக்கிறது. எம்பாப்வே, கிரீஸ்மேன், போக்பா, ஆலிவர் கிரவுட் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளனர்.

அர்ஜென்டினாவுக்கு எதிரான 2-வது சுற்று ஆட்டத்தில் 19 வயதான எம்பாப்வே சிறப்பாக ஆடி 2 கோல்களை பதிவு செய்தார். பெல்ஜியத்தின் பின்கள பலவீனத்தை பயன்படுத்தி அவர் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதே போல கிரீஸ்மேன் கால் இறுதியில் ஒரு கோல் அடித்து அணிக்கு உதவியாக இருந்தார். இருவரும் இந்த தொடரில் 3 கோல்களை அடித்துள்ளனர்.

போக்பா, நிக்கோலா காண்டே ஆகியோர் நடுகளத்தில் சிறப்பாக விளையாட கூடியவர்கள். தோல்வி எதையும் சந்திக்காத அந்த அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் டிரா செய்தது.

பெல்ஜியம் தான் ஆடிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. அந்த அணி முன் களத்தில் மிகவும் வலுவாக இருக்கிறது. பதிலடியான தாக்குதல் ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

கேப்டன் ஈடன் ஹசாட், லுகாகு, டிபுருயன் ஆகியோரது கூட்டணி முன்களத்தில் பலம் பெற்று திகழ்கிறது. இதில் லுகாகு 4 கோல்கள் அடித்து உள்ளார். பிரேசிலுக்கு எதிராக அவர் கோல் அடிக்க உதவியாக இருந்தார். புருயன் பிரேசிலுக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹசாட் அனைவரையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்வதில் திறமை பெற்றவராக இருக்கிறார்.

இது தவிர பெலானி, விஸ்டல், கோம்பேனி, நாசெர் சாதிலி போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். அந்த அணியின் சிறந்த பின்கள வீரரான தாமஸ் மினுயர் கிரானி 2 முறை மஞ்சள் அட்டை பெற்றதால் நாளைய முக்கியமான ஆட்டத்தில் விளையாட இயலாது. பெல்ஜியம் அணியின் பலவீனமே பின்களம்தான். அதை சரி செய்வது அவசியம். ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது.

இரு அணிகளும் நாளை மோத இருப்பது 74-வது போட்டியாகும். இதுவரை நடந்த 73 ஆட்டத்தில் பிரான்ஸ் 24-ல், பெல்ஜியம் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 19 போட்டி ‘டிரா’ ஆனது.

உலக கோப்பையில் இரு அணிகளும் 32 ஆண்டுகளுக்கு பிறகு மோத இருக்கின்றன. ஏற்கனவே 2 முறை மோதி உள்ளன. இந்த இரண்டிலும் பிரான்சே வெற்றி பெற்றது. 1938-ம் ஆண்டு லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கிலும், 1986-ல் 3-வது இடத்துக்கான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வென்று இருந்தது.

இரு அணிகளும் கடைசியாக 2015-ம் ஆண்டு காட்சி போட்டியில் மோதின. இதில் பெல்ஜியம் 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் இறுதிப் போட்டியில் நுழைய கடுமையாக போராடுவார்கள் என்பதால் அரை இறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

1 comment:

Powered by Blogger.