Header Ads



உபவேந்தர் நாஜீம் திறமையானவர், இனவாத தாக்குதலையும் மறுக்கிறார் விஜயதாஸ

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் மீது இனவாத ரீதியில் தாக்குதல் நடத்தப்பட்டு கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க இடையூறு மேற்கொள்ளப்படுவதாக எதிரணி முன்வைத்த குற்றச்சாட்டை உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று - 17- பாராளுமன்றத்தில் நிராகரித்தார்.

நீண்டகாலமாக பகிடிவதைகளில் ஈடுபட்டுவரும் குழுவின் தலைவருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கற்கும் சிங்கள மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பொறுப்புவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள  பேராசிரியர் உமா குமாரசாமி நிர்வாகத்தை சீரமைக்க முயற்சி செய்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். வாய்மூல விடைக்காக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளின் ஜெயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

சிங்கள மாணவர்கள் மீது இனவாத தாக்குதல் நடத்தப்படுவதாக விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியதோடு இது தொடர்பிலும் அமைச்சர் பதில் வழங்கினார்.

பல வருடங்களாக பகிடிவதை மேற்கொண்டு வந்த குழுவின் தலைவரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக சிங்கள மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஈடுபடவில்லை. இந்த குழுவுடன் பல்கலைக்கழக நிர்வாகம் பல தடவை பேச்சு நடத்தியது.

பல்கலைக்கழக உபவேந்தர் நாஜீம் திறமையானவர்.அவர் சிறப்பாக செயற்பட்டவேளை விரிவுரையாளர் குழுவொன்று அதற்கு இடையூறு செய்தது.

அவரின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் பொறுப்புவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

மாணவர்கள் குழுவொன்றுக்கு பல்கலைக்கழகத்தினுள் வர தடைவிதிக்கப்பட்டிருந்தது. விரிவுரைகள் ஆரம்பிக்கப்பட்டதால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. விடுதிக்கு இவர்கள் திரும்பினாலும் வகுப்புகளுக்கு செல்லாமல் தரித்திருந்ததாலே அங்கு பிரச்சினை ஏற்பட்டது என்றார்.

இதேவேளை இங்கு கற்கும் சிங்கள மாணவர்கள் இனவாத ரீதியில் நடத்தப்படுவதாகவும் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டார். இது தொடர்பில் தலையீடு செய்யுமாறு அவர் கோரினார்.

No comments

Powered by Blogger.