Header Ads



இலங்கையில் தூக்கு தண்டனை, பிலிப்பைன்ஸ் மகிழ்ச்சி

போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு பிலிப்பைன்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியின் பேச்சாளரை மேற்கோள்காட்டி The Philippine News Agency வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனையை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிராக பிலிப்பைன்ஸூம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், தமது நாட்டை பின்பற்றி இலங்கை அரசாங்கமும் தீர்மானம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான தமது அணுகுமுறையை பிற நாடுகளும் பின்பற்றி வருகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது.

எவ்வாறாயினும், மரணதண்டனை விதிக்கும் நிலையை நாங்கள் இன்னமும் அடையவில்லை. எங்கள் சட்ட அமுலாக்கல் பிரிவை பயன்படுத்தியே போதைப்பொருளிற்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுக்கின்றோம் என பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியின் பேச்சாளர் ஹரி ரோக் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அந்நாட்டு அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் வியாபாரிகளை கண்டவுடன் சுட்டுத் தள்ள அந்நாட்டு ஜனாதிபதி பொலிஸ் மற்றும் இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கியுள்ளார்.

இந்நிலையிலேயே, இலங்கையின் நிலைப்பாட்டிற்கு பிலிப்பைன்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து, போதைப்பொருள் வியாபாரத்துடன், தொடர்புடைய சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையெழுத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.