Header Ads



இலங்கையர்கள் இன்று நீண்டநேர, சந்திர கிரகணத்தை பார்க்கலாம்

21 ஆம் நூற்றாண்டின் மிகவும் நீண்ட நேரம் நீடிக்கக் கூடிய சந்திர கிரகணத்தை காணும் அபூர்வ வாய்ப்பு இன்று இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ளது.

இந்த சந்திர கிரகணம் ஆறு மணித்தியாலங்கள் தாண்டி நீடிக்கும் என கொழும்பு பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞான அலகின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை நேரப்படி இரவு 10.44 இற்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகும். இது சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் பூர்த்தியாகும். கிரகணம் உச்ச நிலையிலுள்ள சந்தர்ப்பத்தில் சந்திரன் பூமியின் கரு நிழலில் முற்றாக மறைந்து செஞ்சிவப்பாக தென்படும். இந்த நிலைமை ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக நீடிக்கும்.

இலங்கை மக்கள் மற்றொரு முழுச் சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கு 2025 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 100 வருடங்களில் மிக நீண்ட சந்திர கிரகணம் இதுவாகும். பூரண சந்திர கிரகணம் சில சமயங்களில் இரத்த நிலவு அல்லது ' பிளட் மூன்' என அழைக்கப்படும். அதற்கு காரணம் உள்ளது. சூரியனின் கதிர்கள் எமது வளிமண்டலம் ஊடாக பயணிக்கும் போது சில நிற கதிர்கள் வளிமண்டலத்தில் பட்டு தெறிப்படையும். இதில் செங்கதிர்கள் குறைந்த பாதிப்பையே எதிர்நோக்கும். பூரண சந்திர கிரகணம் எற்படும் போது, இந்த செந்நிற ஒளி அலைகள் சந்திரனின் மேற்பரப்பில் படும்போது சந்திரன் செந்நிறமாக காட்சியளிக்கும். இதுவே இரத்த நிலவு அல்லது பிளட் மூன் என கூறப்படுகிறது. இன்று காட்சியளிக்கும் பூரண சந்திர கிரகணமும் இரத்த நிலவு எனப்படும் வகையைச் சேர்ந்ததேயாகும்.

இந்த கிரகண நிகழ்வு பகுதி பகுதியாக உலகின் பல நாடுகளுக்கும் காட்சியளிக்கும். எனினும் குறிப்பாக முழு கிரகரணமும் கிழக்கு ஆபிரிக்க நாடுகள், மத்திய ஆசிய நாடுகள், மத்தியக கிழக்கு நாடுகளுக்கு மிகத் தெளிவாக தெரியும். இதனை வெற்றுக் கண்ணால் பார்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

இந்த சந்திரக் கிரகணம் நீண்ட சந்திர கிரகணமாக இருப்பதற்குக் காரணம், சந்திரன் புவியை சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றும் நீள் வட்டப் பாதையில் நீண்ட தூரத்தில் இருப்பதாகும் என்றார்.

1 comment:

  1. அபூ பக்ரா (ரலி) அறிவித்தார்.
     
    நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது.

    உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.

    பிறகு 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள்'

    என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    (ஸஹீஹ் புகாரி ஹதீஸ் 1040)
    www.tamililquran.com/hadhees

    ReplyDelete

Powered by Blogger.