July 30, 2018

பல்வேறு தடைகள் சவால்களுக்கிடையே, மன்னாரை அழகுபடுத்தி நவீனமயமாக்க தீர்மானித்துள்ளோம்

மன்னார் நகரத்தை அழகுபடுத்த நவீனமயமாக்கும் எமது முயற்சிகளில் பல்வேறு தடைகளும், சவால்களும் இருந்தபோதும் அதனையும் தாண்டி, அந்த நகரத்தை நவீனமயப்படுத்துவதற்கான அடிக்கல்லை அண்மையில் நாட்டியிருப்பதாகவும்,  விரைவில் இந்தப் பணிகளை பூரணப்படுத்தி மக்களுக்கு கையளிக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொவித்தார்.

மன்னார் அல் - அஸ்ஹர் பாடசாலையில் அதிபர் மாஹிர் தலைமையில் இன்று காலை (30.07.2018) இடம்பெற்ற நிகழ்வுகளின் பின்னரான கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

புதிய ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வகுப்பறையை திறந்து வைத்தல், புதிய கேட்போர் கூடத்திற்கான அடிக்கல் நாட்டல், மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.  இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, 

யுத்த முடிவின் பின்னர் வன்னி மாவட்டத்தில் நாங்கள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். அந்தவகையில் மன்னார் நகரத்தை அழகுபடுத்த நாம் முயற்சிகள் முன்னெடுத்த போதும், உள்ளுர் நிர்வாகம் அதற்கு இடையூராக இருந்தது. சுமார் ஏழு, எட்டு வருடங்களாக இந்த இழுபறி தொடர்ந்த போதும்,  வரவுசெலவு திட்டத்தில் மன்னார் , நகர நிர்மான வேலைகளுக்கென எமது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியுடனும் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியின் உதவியுடனும் நிர்மானப்பணிகளை மேற்கொள்வதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளோம். அண்மையில் அமைச்சர்களான சம்பிக்க மற்றும் நிதியமைச்சர் ஆகியோரை அழைத்துவந்தே இந்த அடிக்கல்லை நாட்டிவைத்தோம், அதுமட்டுன்றி, மன்னார் நகரத்தை சார்ந்த பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். 

கடந்த காலங்களில்  மன்னார் உப்புக்குளம், பனங்கட்டிக்கொட்டு, எழில் நகர் போன்றவை  மழை காலத்தில் வெள்ளத்துள் அமிழ்ந்து இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டதை அறிவீர்கள். ஐரோப்பிய யூனியனின் நிதி ஒதுக்கீட்டில் இந்த பிரதேசத்தில் வடிகான்கள் அமைக்கப்பட்டு, வெள்ள அனர்த்திலிருந்து மக்களை பாதுகாக்க நாம் மேற்கொண்ட முயற்சியை நீங்கள் அறிவீர்கள். 

பாடசாலை என்பது வெறுமனே புத்தக கல்வியை வழங்கும் நிறுவனமாக மாத்திரம் இருக்கக்கூடாது. மாணவர்களின் புறக்கீர்த்திய செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் ஒரு ஊடகமாக அது இருக்கவேண்டும். அந்தவகையில் மாணவர்களின் ஆற்றல்களையும், திறமைகளையும் இனங்கண்டு அவர்களை முன்நிலைக்கு கொண்டுவருவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானது அதுமாத்திரமன்றி, இந்த விடயங்கள் சரிவர நிகழ்வதற்கு அதிபர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்கள் தத்தமது மாவட்டங்களில் சாதனை படைத்தால் போதுமென்ற மனோபாவத்தை பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மாற்றியமைத்து தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதயிலும் மிளிர்வதற்கு அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்வதே சிறப்பானது. பிள்ளைகளின் வளர்ப்பிலே பெற்றோர்களின் பங்களிப்பு முக்கியமானது. தனது பிள்ளையை ஒழுக்கமுடையவராகவும், பண்புடையவராகவும்; வளர்த்தெடுப்பதன் மூலமே அவனை சமூகத்திற்கு பயனுள்ளதாக வார்த்தெடுக்கமுடியும் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் உணரவேண்டும். 

சில மாணவர்கள் க.பொ.த சாதாரன தரத்தில் 9ஏ சித்திகளை பெற்றவுடன் தாங்கள் கல்வியிலே உயர்ந்துவிட்டோம் என்று நினைத்து தொடர்ந்தும் உயர் கல்வியில் தமது கரிசனையை குறைத்துவருகின்றனர். க.பொ.த உயர்தரத்தில் சிறப்பு பெறுபேறுகளை பெற்று,  பல்கலைக்கழகத்திற்கு சென்று கல்வியிலே உயர் நிலை அடையவேண்டுமென்ற சிந்தனையிலிருந்து விடுபடுவதால், அவர்களின் அடைவு மட்டம் குறைவாகின்றது. பெற்றோர்களும் இந்த விடயத்தில் தவறிழைக்கின்றனர்

அதுமாத்திரமன்றி,  டாக்டர்களாகவும், எஞ்சினியர்களாகவும், கல்விமான்களாகவும், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய போதும்  ஒழுக்க விழுமியங்கள் குறைவாக இருந்தால் அவர்களின் வாழ்க்கை சிறப்பானதாக அமையாது.

மன்னார் அல் - அஸ்ஹர் பாடசாலையிலே 9ஏ சித்தி பெற்ற சில மாணவர்களை இன்று பார்க்கும் போது அவர்களின் பெற்றோர்கள் அகதி முகாமிலே அவர்கள் என்னுடன் இருந்த ஞாபகம் வருகின்றது. அகதி முகாம்களின் பட்ட கஷ்டங்களுக்கு மத்தியிலே உங்களை எவ்வாறு வளர்த்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். எனவே, அவர்களின் எதிர்பார்ப்புகளை வீணடிக்காதீர்கள் என்று உங்களை அன்பாய் வேண்டுகின்றோம். 

1 கருத்துரைகள்:

அமைச்சரின் மன்னார் பிரதேச அபிவிருத்திக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம் அதே போல மன்னார் மற்றும் அதனை சார்ந்த பிரதேசங்களின் பிரதேச அபிவிருத்திக்கு வாகன பாதையும் இன்றியமையாததோன்று அது தான் மன்னார் -புத்தளம் வில்பத்து காட்டு வழி பாதை தற்போழுது அந்த பாதை மிகவும் மோசமாக பதிப்பாகி இருக்கின்றன அந்த பாதையை கூடிய சீக்கிரம் மீண்டும் போக்குவரத்துக்கு ஏற்றமாதிரி புனரமைக்க வேண்டும் என்பது எங்களின் எல்லோரினதும் வேண்டுகோளும் எதிர்பார்ப்பும் ஆகுமாகும்.

Post a Comment