Header Ads



"நான் மாடியில் ஏறினேன், கடவுள் எனக்கு உதவினார்"


பாரீஸில் நான்காவது மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்ட மாலி அகதியான Mamoudou Gassamaவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வாக்களித்தபடி தீயணைப்பு வீரர் பணி வழங்கப்பட்ட நிலையில் நேற்று அவர் பணியில் இணைந்தார்.

பிரான்ஸ் மக்களால் ஸ்பைடர்மேன் என்று அழைக்கப்படும் Mamoudou Gassama, அந்த குழந்தையைக் காப்பாற்றியதால் இணையத்தில் பிரபலமானதோடு பிரான்ஸ் குடியுரிமையோடு தீயணைப்புத் துறையில் அவருக்கு வேலையும் வழங்கப்பட்டது.

அவர் நேற்று தனது பணியை துவங்கியதாக அவரது ஊடக செய்தி தொடர்பாளர் Djeneba Keita தெரிவித்தார்.

பாரீஸ் தீயணைப்புத் துறையில் புதிதாக பணியில் இணைந்த 24 தீயணைப்பு வீரர்களில் அவரும் ஒருவராவார்.

Mamoudou Gassamaவின் வீர தீரச் செயலுக்காக அவரை பாராட்டி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அவருக்கு ஒரு பாராட்டு சான்றிதழ் வழங்கியதோடு அவருக்கு தங்கப் பதக்கம் ஒன்றையும் வழங்கினார்.

ஜனாதிபதியிடம் பேசிய Mamoudou Gassama, எனக்கு ஒன்றும் நினைக்கத் தோன்றவில்லை, நான் மாடியில் ஏறினேன், கடவுள் எனக்கு உதவினார் அவ்வளவுதான், என்றார். என்னதான் தைரியமாக ஏறிவிட்டாலும், கடைசியில் தனக்கு பயம் வந்து விட்டதாகவும், தன் கை கால்கள் நடுங்கத் தொடங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் ஓரிடத்தில் நின்று தொலைக்காட்சியில் கால்பந்து போட்டி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அப்போது வெளியே ஏதோ குழப்பம் நிலவுவதைக் கண்டு அங்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

எனக்கு குழந்தைகள் என்றால் உயிர், என் கண் முன்னே ஒரு குழந்தைக்கு ஏதாவது அசம்பாவிதம் நடப்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது, நான் ஓடிச் சென்றேன், ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்த்தேன், கடவுளுக்கு நன்றி, பரபரவென பால்கனியின் ஏறினேன் என்றார் அவர்.

இதற்கிடையில் குழந்தையை பாதுகாக்காமல் அஜாக்கிரதையாக இருந்த அதன் தந்தைக்கு செப்டம்பர் மாதம் தண்டனை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.