Header Ads



வட்ஸ்அப் துஆக்கள் பழையதா, புதியதா...??

– அபூ ஷாமில் –

ரமழான் கடைசிப்பத்தில் கியாமுல் லைல் தொழுகையின் கடைசியில் கண்ணீர் மல்க ஓதப்படும் துஆக்கள் பெருந்தாக்கம் செலுத்தக் கூடியவை. இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் தற்பொழுது கியாமுல்லைல் தொழுகை தமது வாழ்வியலில் ஒன்றாக மாறிவருவதனால் இந்த துஆக்கள் பற்றியும் பேச வேண்டியேற்படுகிறது.

நம்மில் பலர் தமக்குப் பழக்கப்பட்ட துஆக்களுக்கு மட்டுமே ஆமீன் சொல்லப்பழகி இருக்கின்றார்கள். இரண்டாவது குத்பாவில் முன்னாடி எந்த துஆவைக் கேட்டாலும் அல்லாஹும்மஜிர்னா மினன்னார் என்று தொடங்கினவுடன் தான் மக்கள் ஆமீன் சொல்லத் துவங்குவார்கள். இப்படித் தான் கியாமுல் லைல் தொழுகையிலும். புதியதாக பல துஆக்களை இமாம்கள் பாடமாக்கிக் கொண்டு வந்தாலும் மக்கள் தங்களுக்குப் பரிச்சயமான விடயங்களுக்குத் தான் பலமாக ஆமீன் சொல்லுவார்கள். அல்லாஹும்மன்ஸிர் முஜாஹிதீன பீ பலஸ்தீன், வ பீ ஈராக், வ பீ சீசான்…. மக்களும் சத்தமாக ஆமீன் முழங்குவார்கள்.

சீசான் எனப்படும் செச்னியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து பல தசாப்தங்களாகின்றன. அப்பொழுது பாடமாக்கப்பட்ட துஆதான் இன்று வரை சுழலுகின்றது. வட்ஸப்பிலும் இப்படித் தான் துஆக் கேட்பார்கள். மனைவியின் சுகப்பிரசவத்துக்கு துஆச் செய்யுங்கள் என்று ஸ்டேடஸ் வரும். விசாரித்துப் பார்த்தால் பிள்ளை நேர்சரிக்குப் போயிருப்பதாக தகவல் வரும். பிரசவ காலத்தில் கேட்ட துஆ, இன்றும் திகதியறியாமல் இப்படித்தான் வட்ஸப்பிலே சுழலும். சீசானுக்காக துஆக் கேட்க வேண்டாமென்று சொல்ல வரவில்லை. அதற்குப் பின்னர் காஷ்மீர், மியன்மார், சிரியா என புதுப் புதுப் பிரச்சினைகள் முஸ்லிம் உலகுக்குள்ளால் நடந்தேறி வருகின்றன. இவை தொடர்பில் மௌலவிமார் அப்டேட் ஆக வேண்டும். உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டிலும் நடக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் இவர்கள் இற்றைப்படுத்தப்பட்டால் தான் பிரச்சினைகளுக்குரிய நிவாரணம் தேடி துஆச் செய்ய முடியும். பத்திரிகை வாசிப்பதையே ஹராமாக்கிக் கொண்ட ஒரு சமூகத்திடம் இதனை எதிர்பார்ப்பது கஷ்டமானது தான்.

இந்த நிலையில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாதச் செயற்பாடுகள், அரசியல் ரீதியான ஒடுக்குமுறைகள் இவைகள் பற்றியெல்லாம் துஆக் கேட்கின்ற மௌலவிமாருக்கு அப்டேட் செய்ய வேண்டியிருக்கிறது. சமூகம் தொடர்பில் அல்லாஹ்விடம் கேட்டுப் பெற விடயங்கள் பற்றி இவர்களுக்கு அறிவூட்ட வேண்டியிருக்கிறது. பத்திரிகை, தொலைக்காட்சிகளை புறமொதுக்கியுள்ள பெரும்பாலான மௌலவிமாருக்கு வட்ஸ்அப்தான் தகவல் வழங்கும் ஊடகமாக இருக்கின்றது. இது சிலவேளைகளில் இல்லாததையும் பொல்லாததையும் துஆக்களில் சேர்ப்பதற்கும் குத்பாக்களில் முழங்குவதற்கும் காரணமாக அமைகிறது.

இந்த வகையில் எதனை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் மௌலவிமார் தெளிவு பெற வேண்டும். அதேபோல துஆவிலே என்ன கேட்கிறார்கள், நாங்கள் எதற்கெல்லாம் ஆமீன் சொல்லுகிறோம் என்பது தொடர்பில் மக்களுக்குத் தெளிவு இருக்க வேண்டும். இப்படி இரு தரப்பினரும் இணைந்து பரஸ்பரம் ஒத்துழைக்கும் பொழுது தான் சமூகத்தில் விழிப்புணர்வினைக் கொண்டு வர முடியும். ஐங்காலத் தொழுகைகளுக்குப் பின்னர் இமாம்களால் கேட்கப்படும் துஆக்கள் மக்களைப் பயிற்றுவிப்பதற்காகவே எனச் சொல்லப்பட்டன. தொழுகை அடவுகளில் ஒவ்வொரு நேரத் தொழுகைகளுக்குப் பின்னருமான துஆக்கள் மனனமிடச் செய்யப்பட்டன. ஆனாலும் இத்தனை ஆண்டுகள் போன பின்னரும் மக்கள் சொந்தமாக துஆக் கேட்பதற்குப் பயிற்றுவிக்கப்படவில்லை என்றால் புதிய புதிய பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் மக்கள் எப்படி அல்லாஹ்விடம் முறையிடுவது ?

மௌலவிமார்கள் அப்டேட் இல்லையென்றால் அப்டேட் உள்ள சமூகம் முன்வந்து துஆச் செய்வதற்கு அவர்களாகவாவது பயிற்சி எடுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் வட்ஸ்அப் துஆக்களுக்கெல்லாம் தொடர்ந்தும் ஆமீன் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

1 comment:

  1. அபூ ஷாமில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்!மௌலவிமார்கள் துஆக்களை அப்டேட் பன்னிக் கொண்டுதானே இருக்கிறார்கள்!அவர்கள் எல்லா இடங்களிலும் அல்லாஹும்மன்சுரில் முஜாஹிதீன பீ பலஸ்தீன் என்றா ஓதுகிறார்கள்? அவர்கள் கத்த வீட்டில் அல்லாஹும்மஜ்அல் கப்ரஹு ரவ்லதன் மின் ரியாலில் ஜன்னா என்று ஓதுவதை நீங்கள் கேட்டில்லை போலும்? கல்யான வீட்டில் அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா கமா அல்லப்த பைன ஆதம வ ஹவ்வா என்று ஓதுவதக் கேட்டில்லை போலும்? இதைவிட வேரென்ன அப்டேட் எதிர்பார்க்கிரீங்க

    ReplyDelete

Powered by Blogger.