Header Ads



தாய்லாந்து குகையும், அதுகுறித்த கதையும்

தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணி   நிறைவடைந்துள்ளது.

அந்த குகை மற்றும் அந்த சிறுவர்கள் குறித்த தகவல்களை 5 கேள்வி, பதில்கள் வடிவில் வழங்குகிறோம்.

ஏன் அந்த பதினொரு சிறுவர்கள் குகைக்குள் சென்றார்கள்?

இந்த தருணம் வரை சரியான பதில் தெரியாத கேள்வி இது. ஏன் அவர்கள் ஜூன் 23, சனிக்கிழமை அந்த குகைக்குள் சென்றார்கள் என்பதை யாராலும் சரியாக விளக்க முடியவில்லை.

பிபிசி தாய்லாந்து செய்தியாளர்கள் தரும் தகவலின்படி, இந்த சிறுவர்கள் குழு காலை 10 மணிக்கு கால்பந்தாட்ட பயிற்சிக்காக கூடி இருக்கிறது. அவர்களது துணை பயிற்சியாளர் எகாபொல், 10.42 மணிக்கு அவர்கள் கால்பந்தாட்ட பயிற்சி செய்வதை ஃபேஸ்புக்கில் நேரலை செய்திருக்கிறார்.

உள்ளூர் நேரப்படி மதியம் 3 மணிக்கு தாம் லாங் - குன்னம் நங்னான் தேசிய பூங்காவின் ஊழியர் 11 மிதிவண்டிகள் குகையின் நுழைவாயிலில் நிற்பதை கண்டிருக்கிறார். இதனால் சந்தேகித்து விசாரித்து இருக்கிறார். பின்னர், குகையில் சிக்கி உள்ள ஒரு சிறுவனின் பெற்றோர், தங்கள் மகனை தொடர்பு கொள்ள முடியவில்லை என பூங்கா நிர்வாகத்திடம் தெரிவித்து இருக்கிறார்கள்.

அந்த சிறுவர்களை தேடும் பணி உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு தொடங்கியது.

கேம் அந்த கால்பந்தாட்ட அணியை சேர்ந்தவர். ஆனால், அன்று அவர் அந்த சிறுவர்களுடன் குகைக்குள் செல்லவில்லை. அவர் உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த நேர்காணலில், அந்த குகைக்கு முன்பே மூன்று முறை சென்று இருக்கிறோம். ஆனால், எப்போதும் தாங்கள் மழை காலத்தில் சென்றதில்லை என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர், "எப்போதும் அந்த குகைக்குள் செல்லும்போது முன்னெச்சரிக்கை ஏற்பாட்டுடன்தான் செல்வோம். அனைவராலும் அந்த குகைக்குள் செல்ல முடியுமா என்று சோதிப்போம். குகைக்குள் செல்வதற்கு முன்பு உணவு உண்டுவிடுவோம்" என்று முந்தைய அனுபவங்களை விளக்கி உள்ளார்.
தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்தான் அவர்களுடன் அன்று குகைக்குள் செல்லவில்லை என்கிறார் கேம். அவர், "எங்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் அந்த குகைக்குள் செல்வோம். எங்கள் அணியில் ஒருவருக்கு பிறந்தநாள் வருகிறது. அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பதற்காக அவர்கள் குகைக்குள் சென்று இருக்கலாம்" என்கிறார்.

அந்த அணியின் துணை பயிற்சியாளர் எகாபொல் அந்த குகையிலிருந்து கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் தனது பாட்டியை கவலை கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தார். அனைவரின் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், சிறுவர்களின் பெற்றோரிடம் மன்னிப்பும் கேட்டு இருந்தார்.

எப்படி அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டார்கள்?

அந்த குகைக்குள் சிறுவர்கள் சென்ற சில நிமிடங்களில் மழை பெய்ய தொடங்குகிறது. அந்த பகுதியில் உள்ள காட்டினில் தேங்கிய நீர், குகையின் நுழைவு பகுதியை அடைக்கிறது.

நுழைவாயிலில் அடைத்த தண்ணீர் உள்ளே வர, அந்த சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் பாதுகாப்பான மற்றும் உயரமான பகுதியை தேடி உள்ளே சென்றார்கள். தாய்லாந்தின் நான்காவது பெரிய குகையான இந்த குகையின் மொத்த நீளம் 10,316 மீட்டர்.

பிபிசியிடம் பேசிய இந்த அணியின் பயிற்சியாளர் நோப்பராட் கண்டாவோங், "இந்த அணியினர் அனைவருக்கும் தாய்லாந்து தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்தது" என்கிறார்.

இந்த குகை குறித்த நாட்டுப்புற கதை என்ன?
இந்த குகை குறித்து பல நாட்டுப்புற கதைகள் உள்ளன. இந்த குகை பெரும்பாலானவர்களால், 'தாம் லுவாங் குன் நும் நங் நன்' என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள், 'ஆறு ஒன்றுக்கு தாயிடமாக இருக்கும் தூங்கும் பெண்ணின் பெரும் குகை'. இதன் பின்னால் ஒரு கதையும் உள்ளது.
சீனாவின் தெற்குபகுதியில் உள்ள சியாங் ரூங் என்னும் நகரத்தின் இளவரசியாக இருந்தவர், குதிரைகாரர் ஒருவருடன் காதல் கொண்டு கர்ப்பமானார்.

தனது தந்தைக்கு அஞ்சி அங்கிருந்து தெற்கு நோக்கி பயணித்த இருவரும் ஒரு மலை பகுதியை அடைந்தனர்.இளவரசியை காக்க சொல்லிவிட்டு உணவு தேட சென்ற அவரது காதலனை, இளவரசியின் தந்தை கொன்றுவிடுகிறார்.

அவருக்காக காத்திருந்த இளவரசி, ஒரு கட்டத்தில் தன் காதலர் இனி வரபோவதில்லை என்பதை உணர்ந்து ஊசியினால் தன்னைதானே குத்தி மாய்த்துக் கொள்கிறார்.
அவரது உடல் ஒரு மலையாகவும், அவரிடமிருந்து வழிந்தோடிய குருதி ஆறாகவும் மாறியது என்கிறது அந்த பழங்கதை.

இதற்கு முன்னதாக யாராவது அங்கு சென்று சிக்கிக் கொண்டுள்ளார்களா?
ஆம் என்கின்றன உள்ளூர் ஊடகங்கள்.
முன்னாள் உள்ளூர் சமூக தலைவர் இன்சோர்ன் கேவ்சொம்பாங் சொன்ன ஒரு தகவலை அவை குறிப்பிடுகின்றன.

"வெளிநாட்டு பயணி ஒருவர் 1986 ஆம் ஆண்டு அந்த குகைக்குள் சென்று சிக்கிக் கொண்டார். ஏழு நாள் வரை அந்த குகைக்குள்ளேயே இருந்ததார். பின்னர் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்" என்கிறது அந்த தகவல்.ஆனால், அந்த சமயத்தில் இப்போது பெய்வதை போல மழையெல்லாம் பெய்யவில்லை.
அதன்பின், 2016 ஆகஸ்ட் மாதம் சீனர் ஒருவர் அந்த குகைக்குள் சென்று சிக்கிக் கொண்டுள்ளார்.

1 comment:

  1. “அவர்கள் (அக் குகையில்) தரிப்பட்டிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் - அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.

    (குகை வாசிகள் 18:26)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.