Header Ads



மாணவன் பைசூல் கொலை - CID விசாரணை ஆரம்பம், பிணையில் விடுதலையானவர்களும் மீண்டும் கைது (வீடியோ)

சிலாபம் – சவறான பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான 16 வயது மாணவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாணவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

சவறான பகுதியைச் சேர்ந்த மொஹமட் பைசூல் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஏனைய சில மாணவர்களுக்கும் மொஹமட் பைசூலுக்கும் இடையில் வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அன்றிரவு மொஹமட் பைசூல் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மொஹமட் பைசூல், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சைகளின் பின்னர் கடந்த 20 ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளார்.

எனினும், வீடு திரும்பிய பின்னர் 21 ஆம் திகதி மீண்டும் சுகயீனம் அடைந்ததை அடுத்து, சிலாபம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தேசிய வைத்தியசாலையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்ட மொஹமட் பைசூல், இன்று அதிகாலை உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் 26 ஆம் திகதி வரை சிறைச்சாலைகளின் பொறுப்பில் சிறுவர் நன்நடத்தை இல்லத்தில் சேர்க்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பிணை வழங்கப்பட்ட ஏனைய இரண்டு மாணவர்களும் இன்று -23- மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.