Header Ads



அந்தச் சின்ன இதயம் கையிலிருந்து நழுவ, அதன் ரூஹும் மேல்நோக்கிச் சென்றது

-டாக்டர் முஸ்தபா றயீஸ்-

வழமைபோல் சிறுவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (Pediatric Cardiac ICU ) வழமையான எனது வோட் ரவுண்டை முடித்துவிட்டு, நானும் என்னோடு கடமைபுரியும் சக வைத்தியர்களும் முற்பகலில் வைத்தியசாலையின் Staff Restaurant க்கு வந்து தேனீர் அருந்தி அளவளாவிக் கொண்டிருந்தோம்.

திடீரென எங்களது Bleep க்கு அழைப்பு வந்தது. “Cardiac arrest” “Cardiac PICU” Bed 5. அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 5ம் கட்டிலில் இருக்கும் குழந்தையின் இதயம் நின்றுவிட்டது என்று அந்த வைத்தியசாலையின் டெலிபோன் ஒபரேட்டர் தொடராக மூன்று முறை அழைத்தார். முதல் அழைப்பிலேயே தேனீரை பாதிக் கோப்பையோடு விட்டுவிட்டு PICU யை நோக்கி விரைந்தோம். இவ்வாறான அவசர அழைப்புகள் பல வைத்தியர்களுக்கும் தாதிகளுக்கும் ஒரே நேரத்தில் செல்வதால் Cardiac arrest இதயம் நின்றுவிடும்போது இயங்க, மறுத்து விட்ட இதயத்தை மீண்டும் இயங்க வைக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு (Cardiopulmonary resuscitation) பலர் உடனடியாக வந்து விடுவார்கள்.

அது மூன்று மாதக் குழந்தை. அந்தப் பெற்றோர் திருமணம் செய்து 15 வருடங்கள் பிள்ளைப் பாக்கியம் அற்றவர்களாக இருந்தார்களாம். அந்தத் தாய் தலை தெறிக்கக் கதறி அழுது அதிதீவிர சிகிச்சைப் பிரிவை அதிர வைத்ததும் குழந்தையின் தந்தை தன்னிலை மறந்து அங்கிருந்த சுவர்களை உடைக்கும் முயற்சியில் இறங்கியதும் அதற்குச் சாட்சியமாக இருந்தது.
15 வருடங்களாகப் பிள்ளைப் பாக்கியம் இல்லாது பல வைத்தியர்களைச் சந்தித்து... பல வைத்தியசாலைகளில் ஏறி இறங்கி... தாய் என்ற அந்தஸ்து இல்லாமலேயே மரணித்து விடுவேனோ என்ற ஆதங்கத்தில் பரிசோதனைக் குழாய் கருக்கட்டல் முயற்சியிலும் இரு முறை இறங்கி... அதுவும் கைகூடாது வயதும் நாற்பதை எட்டுகின்ற நிலையில்... அல்லாஹ் எனக்கு குழந்தையொன்றைத் தருவான் என்ற நம்பிக்கையில் அந்த அரபுப் பெண் எடுத்த கடைசி முயற்சி பரிசோதனைக் குழாய் கருக்கட்டல் வெற்றிகரமாக முடிந்தது.

பரிசோதனைக் குழாய் கருக்கட்டல் நடந்து விட்டது. முளையத்திற்கு வயது 5 நாட்கள். கலங்கள் பிரிந்து வளர்கின்றன. கருக்கட்டல் பரிசோதனைக் குழாயில் நடந்த போதிலும், 56 நாட்களின் பின்னர் அந்த முளையம் வளர்வதற்கு தாயின் கருப்பையே தேவை. 6 நாட்களுக்குப் பின்னர் அந்த முளையத்தால் கருப்பை சூழலில்லாமல் வாழ முடியாது வளர முடியாது. எனவே, வைத்தியர்கள் ஆறாவது நாள் ‘Lab’ இல் பரிசோதனைக் குழாயில் இருந்து முளையத்தை எடுத்து தாயின் கருப்பையில் வளர்வதற்காக பதித்து விடுவார்கள். தொடர்ந்து அந்த முளையம் சிசுவின் தாயின் கருவறையில் கச்சிதமாய் வளரும்.

15 வருடங்கள் பாலைவனமாக இருந்த கைப்பிடியளவான கருவறை இப்போது உயிருள்ள சிசுக் கலங்களால் நிறைந்து வயிறு நிறைய வளர்கிறது. சிசு வளர வளர கருவறை அதற்கேற்றாற்போல் வளர்ந்து இடம் கொடுக்க... தாயின் வயிறும் விரிந்து இடம்கொடுக்க... அந்தச் சிசு தாயில் ஏற்படுத்தும் ஹோமோன்களின் தாக்கத்தால் தாயின் உடலும் உள்ளமும் மனோநிலையும் மாறி... உளப் பாங்கில் ஏற்பட்ட மாற்றங்களையெல்லாம் சந்தித்து... சுகம் அனுபவித்து... தாயின் பெருமையை உணர்ந்தவளாய்... சிசுவிற்கும் சேர்த்து சுவாசித்தவளாய்... சுமை தாங்குவதை சுவைத்தவளாய் 10 மாதங்கள் காத்திருக்கிறாள் அந்தப் பெண்.
கர்ப்ப காலம் முடிவடைந்து விட்டது. உள்ளேயிருந்த சிசுவின் கருவறை வாழ்க்கை முடிவுக்கு வருகின்றது. கருப்பையின் கதவுகள் பலமாகத் தட்டப்படுகின்றன. அதன் விளைவாக ஹோமோன்கள் உணர்ச்சி பெற்று ஊற்றெடுக்கின்றன. கருப்பையின் கதவுகள் மெதுமெதுவாக விரிய ஆரம்பிக்கின்றன. ஆமாம், சிசு வெளியே வர கருப்பையின் கதவுகள் 10 சென்றி மீற்றர் விரிந்து இடம் கொடுக்க வேண்டும். எமது வீட்டுக் கதவுகள் போன்று திடீரெனத் திறந்து கொடுக்க, 10 மாதங்கள் கட்டிக் காத்துப் பாதுகாத்த கருப்பை ஒரு சாதாரண தங்குமிடமல்ல. அதன் கதவுகள் 10 சென்றி மீற்றர் திறக்க 10 மணி நேரங்கள் எடுக்கும். மில்லி மீற்றர் மில்லி மீற்றராய் திறந்த கதவுகள் 10 மணிநேரத்தில் முழுமையாய் திறக்கப்பட்டு விட்டன. கருப்பை சிசுவைப் பலமாகத் தள்ள ஊற்றெடுத்த ஹோமோன்களின் வீச்சினால் கருப்பையில் இருந்து வெளி உலகிற்கு வரும் பாதை பதப்படுத்தப்பட, அல்லாஹ் அற்புதமாய்ப் படைத்த மூன்றரைக் கிலோ நிறையுள்ள, 50 சென்றி மீற்றர் நீளமான அந்தச் சிசு நெளிந்து சுளிந்து சுருங்கி ஒற்றையடிப் பாதையூடாக உலகிற்கு வந்து சேர்ந்து விட்டது.

ஸூரா அபஸவில் ‘‘பின்னர் பாதையை இலகுவாக்கிக் கொடுத்தோம்’’ என்று அல்லாஹ் அதனை வர்ணிப்பதன் பின்னணியில் ஊசித் துளையின் ஊடாக ஒட்டகத்தை அனுப்பும் முயற்சியாய் இருக்கும் இந்தப் பயணம் அற்புதமானதும் சிந்திக்கின்றவர்களுக்கு ஓர் அத்தாட்சி யாகவும் இருக்கிறது.

குழந்தையை மடியில் எடுத்த தாயும் தந்தையும் குதூகலித்து நின்றனர். அரபு நாடொன்றின் வைத்தியசா லையில் பிறந்த அந்தக் குழந்தையின் வரவை 15 வருடங் களாக எதிர்பார்த்திருந்த பெற்றNhர் வைத்தியசாலையில் பெரும் வரவேற்பு விழாவையே ஏற்பாடு செய்திருந்தாக சொன்னார் அந்தத் தாயின் சகோதரன்.

இனிப்புப் பண்டங்கள் பரிமாற... உறவினர்கள் வந்து போக... முதல் நாள் குதூகலிப்பில் கடந்து விட்டது. அடுத்த நாள் வீடு செல்ல ஆயத்தம். அற்கு முன்னர் சிறுவர் நோய் வைத்திய நிபுணர் குழந்தையைப் பரிசோதித்து வீட்டுக்கு அனுப்புவதுதான் வழக்கம்.
வழக்கம்போல் வைத்திய நிபுணர் பரிசோதனையை ஆரம்பிக்கின்றார். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பரிசோதித்த வைத்தியர், தனது Stethoscope ஐ குழந்தையின் நெஞ்சில் வைக்கிறார். பல முறை பரிசோதிக்கிறார் திருப்தியில்லை. மீண்டும் மீண்டும் நெஞ்சறையின் பல இடங்களிலும் வைத்து இதயத்தின் சப்தத்தைக் கேட்கிறார். இதயம் பலமாய் அடிக்கிறது. இதயம் இயங்கும் போது ‘லப் டப்’ என்ற சப்தம் Stethoscope இல் இனிமையாகக் கேட்கும். பரிசோதித்த வைத்தியரின் காதுக்குள் ‘லப் டப்’ இற்கு மேலாக இன்னும் சில சப்தங்கள்! ‘சூஸ்ஸ்ட் ஸ்ஸ்ஸ்’ என்றெல்லாம் வித்தியாசமான உயர் தொனியிலான சப்தங்கள் (Murmurs) கேட்கவே அவர் மௌனமாகி விட்டார்.

வைத்தியரையும் குழந்தையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோரும் உறவினரும் மட்டுமே இருந்த அந்த அறையில் மயான அமைதி.

வைத்தியர் தொடர்ந்தும் மௌனமாய் இருக்கிறார். அவரின் காதுகளுக்குள் பூகம்பங்கள் வெடிக்கின்றன. அவரின் Stethoscope குழந்தையின் நெஞ்சறைச் சுவருக்கு மேல் தொடர்ந்தும் இருக்கிறது. காதுகளுக்குள் வெடிக்கும் இதயப் பூகம்பத்தினை அடையாளப்படுத்திக் கொண்ட வைத்தியர் பெற்றோரோடு பேசுவதற்கு வார்த்தைகள் வந்து சேராது சில நிமிடங்கள் சிரமப்படுகிறார். பின்னர், வார்த்தைகள் வாய்க்கு வந்து சேர்ந்து விட்டன. Breaking Bad News காதுகளை அடைக்கும், உள்ளத்தை உடைக்கும் அந்தச் செய்தியை சொல்லித்தான் ஆக வேண்டும்.

‘‘குழந்தையின் இதயத்தில் இரண்டு ஓட்டைகள் மற்றோர் இடத்தில் இதய நாடியின் அடிப்பாகம் இரத்தம் போதுமான அளவு செல்ல முடியாது சுருங்கி இருக்கிறது. அத்துடன் இதயவறையில் ஒன்று வீங்கிப் பெருத்து விட்டது. நான்கு பிரச்சினைகள். இதனை Tetra logy of Fallouts என்று சொல்வார்கள். இதனை சத்திர சிகிச்சை மூலம் சுகப்படுத்த முடியும். எனவே, குழந்தைக்கு 23 மாதங்கள் கழிந்ததும் சத்திர சிகிச்சைக்கு ஆயத்தமாகுங்கள்’’ என்று சொன்னார் குழந்தை நோய் வைத்திய நிபுணர்.
கலகலப்பாய், குதூகலமாய் இருந்த அந்த அறை இடி விழுந்து நொறுங்கிவிட்ட உணர்வு. அனைவரின் கண்களும் குளமாகி உள்ளம் உடைந்து விட்ட நிலையில் அந்தத் தாய் கேட்கின்றாள். ‘‘ஏன் டொக்டர் இப்படி இதயத்தில் ஓட்டைகளோடு இந்தக் குழந்தை பிறந்தது?’’ அவளின் கேள்வி நியாயமானது. ஆனால், இதற்கான பதில் அந்த வைத்தியருக்கு மட்டும் தெரிந்துவிட்டால் போதும், உலகின் பணக்காரர்களின் பட்டியலில் முதலாம் இடத்தை அவரால் பிடித்துவிட முடியும். ஆனால், அல்லாஹ்வின் படைப்பிற்கு முன்னால், அதன் அதிசயத்துக்கு முன்னால் அதிர்ந்து நிற்கும் அப்பாவிகள்தான் இந்த விஷேட வைத்திய நிபுணர்கள் என்பதுதான் யதார்த்தம்.

‘‘மூன்று மாதங்களில் சத்திர சிகிச்சை செய்து ஓட்டை விழுந்த அந்தச் சின்ன இதயத்தை சரி செய்து விடுங்கள்’’ என்று அறிவுறுத்தப்பட்டது. இலவு காத்த கிளிபோல் பதினைந்து பாலைவன வருடங்கள் காத்திருந்து பெற்ற அந்தக் குழந்தையின் ஒபரேஷனுக்காக உலகில் இன்றுள்ள மிகச் சிறந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அந்த அரபு நாட்டிலிருந்து லண்டனுக்கு வந்தனர் குழந்தையின் தாயும் தந்தையும் குடும்பத்தினரும்.
லண்டனில் அந்தப் பிரபலமான வைத்தியசாலையின் ஒபரேஷன் தியேட்டரில் மூன்று மாதக் குழந்தையின் நெஞ்சறை திறக்கப்பட்டு விரிக்கப்படுகின்றது. ஓட்டை விழுந்த இதயம் தனக்கு இயலுமான வேகத்தில் நெஞ்சறைக்குள் Pericardium என்ற உறையினுள் துயரத்தில் துடிக்கின்றது. உறையும் திறக்கப்படுகிறது. இதோ அல்லாஹ்வின் அற்புதப் படைப்பான இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது, சுப்ஹானல்லாஹ்!

யா அல்லாஹ்! நீயே சிறந்த படைப்பாளி. இவ்வளவு அற்புதமாய் இந்த இதயத்தைப் படைக்கின்ற சக்தி பெற்றவனே, உனக்கே புகழனைத்தும்! ஏழு வானங்களைப் படைத்து... அதன் அடிவானத்தை நட்சத்திரங்களால் அலங்கரித்து... பூமிப் பந்தையும் படைத்த நீயே இந்த இதயத்தையும் படைத்தாய் என்பதை சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது ஒபரேஷன் தியேட்டரில் சுஜூதில் விழுந்துவிடச் சொல்லுகின்றது உள்ளம்.

ஸூரா ஆல இம்ரானின் இறுதி வசனங்கள் சொல்வது போல் உன்னை நான் ஒபரேஷன் தியேட்டரில் நின்று கொண்டு (திக்ர்) ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். பள்ளி வாசலின் சுவர்களுக்குள் ஊற்றெடுக்கும் இறையச்சம் ஒபரேஷன் தியேட்டரின் சுவர்களுக்குள் ஊறிப் பெருகுவதை உணர்கின்றேன். மருத்துவ விஞ்ஞான அறிவு அறிவுக் கடலின் ஒரு துளி மாத்திரமே என்பதை உணர்கிறேன். உனக்கே புகழனைத்தும். ‘‘ரப்பனா மா கலக்த ஹாதா பாத்திலா சுப்ஹானக ஃபகினா அதாபன்னார்- இறைவா! நீ எதனையும் வீணுக்காகப் படைக்கவில்லை. நீயே தூய்மையானவன் எம்மை நரகத்திலிருந்து பாதுகாப்பாயாக’’ என்ற இறை வசனம் அந்தத் தியேட்டரின் சுவர்களில் முட்டிமோதி எதிரொலிப்பது போன்று இருந்தது.

ஒபரேஷன் முடிந்து விட்டது. இதயத்தின் துவாரங்கள் அடைக்கப்பட்டு விட்டன. சுவர் கழற்றப்பட்ட காயப்பட்ட இதயம் கப்பீரமாய் துடிக்க ஆரம்பித்தது. நெஞ்சறைச் சுவர் மீண்டும் சேர்த்துத் தைக்கப்பட்டது. குழந்தை அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) கொண்டு வரப்பட்டது.
ICU இல் 3 நாட்கள் கழிந்து விட்டன. நான்காவது நாள் குழந்தையின் காயப்பட்ட இதயம் வலுவிழக்கின்றது. இரத்த அமுக்கம் (Blood Pressure) குறைகின்றது. இதயத்தில் நடுக்கம் ஏற்படுகின்றது (Arrhythmias). அந்தச் சின்ன இதயம் காயங்களோடு என்னால் ஓட முடியாது என்று ஓய்வு எடுத்துக் கொள்ள முனைகின்றது. இதயத் துடிப்பின் வேகம் குறைகின்றது. இந்த நிலையில்தான் அன்று அந்த அவசர அழைப்பு. தேனீர் கோப்பையை பாதியில் விட்டு விட்டு நாங்கள் ஓடியதும் அந்த அழைப்புக்காகத்தான்.

இதயத்தை இயங்க வைக்க (Cardiopulmonary resuscitation) மருத்துவ விஞ்ஞானம் படித்துத் தந்த அனைத்து முயற்சிகளையும் செய்கின்றோம். நெஞ்சறையில் மசாஜ், நுரையீரலுக்குள் ஒட்சிசன், இதயத்தை இயக்கவைக்கும் மருந்துகள்... இந்த முயற்சிகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆகிவிட்டன அவை அந்த இதயத்தைத் தொட்டு விடவும் சக்தி பெறவில்லை.

குழந்தையின் பிரஷர் குறைகின்றது. வைத்தியர்கள் எங்களின் பிரஷர் ஏறுகின்றது. இதயம் இயங்க மறுக்கின்றது. கடைசி முயற்சியாக, பிளந்து பொருத்திய நெஞ்சறையின் 15 தையல்களும் மீண்டும் பிரிக்கப்பட்டன. நெஞ்சறை மீண்டும் திறக்கப்படுகிறது. நெஞ்சறைக்குள் கையைவிட்டு இதயத்தை உள்ளங்கைக்குள் எடுத்து அதனைக் கையால் சுருக்கி விரிய வைத்து இதயம் தானாக செய்யும் வேலையை உள்ளங்கைக்கு கொடுத்து சுருங்கி விரிய வைத்தோம். அந்த உடைந்து போன இதயம் உள்ளங்கை விரியும்போது செயற்கையாக விரிகின்றது. சுருக்கும்போது சுருங்குகின்றது. ஆம், அதன் தன்னியக்கத் தன்மையை அது இழந்து விட்டது.

ஒரு மணி நேரமாக உள்ளங்கையில் இதயத்தை வைத்து சுருக்கி விரித்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஒரு மணி நேரத்துக்குள் மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து விட்டது. தானாக இதயம் சுருங்கும் போது போதியளவு இரத்தம், ஒட்சிசன் மூளைக்குள் செல்லும். ஆனால், எங்கள் கைகளால் அதனை சுருக்கி விரிய வைக்கும்போது போதியளவு இரத்தத்தைப் பாய்ச்சும் அழுத்தத்தை இதயத்தினால் கொடுக்க முடியாமல் இருந்தது.

ஒரு மணி நேர முயற்சி எந்தப் பலனும் அற்றுப்போக அந்தச் சின்ன இதயம் உள்ளங்கையிலிருந்து கை நழுவிச் செல்ல அதன் ரூஹும் மேல்நோக்கிச் சென்று விட்டது.

சிந்தித்துப் பார்க்கிறேன். அற்புதமாய் வடிவமைத்துப் படைப்பவன் அந்த அற்புதப் படைப்பில் மிகச் சிறிய ஒரு குறையை வைக்கின்றபோதுதான் அந்தப் படைப்பின் அற்புதம் புரிகிறது.

துரதிஷ்டம், அந்தக் குழந்தையின் இதயம் எங்கள் உள்ளங்கையில் எங்களுக்கோ எதுவும் செய்ய முடியாத நிலை!

‘‘யா அல்லாஹ்! எனது குழந்தையின் இதயத்தை வைத்தியர்களின் கையில் கொடுக்காமல் நீயே இயக்கிக் கொண்டிருக்கிறாயே உனக்கே புகழனைத்தும். ஸூரா சஜதாவின் 9 வது வசனத்தில் சொல்வது போல நீ மனிதனைப் படைத்து சீரமைக்கின்றாய். ஆனால் மனிதன் நன்றியற்றவனாக இருக்கின்றான். ஸூரா அல்கலமின் 25ஆம் வசனத்தில் சொல்வதுபோல் நீ எமக்கு கேள்விப் புலன், பார்வைப் புலன் எல்லாம் தந்திருக்கிறாய். இருந்தபோதும் நாங்கள் நன்றிகெட்ட மனிதர்களாய் இருக்கிறோம். யா அல்லாஹ்! எங்களை உனக்கு நன்றி செலுத்தும் மனிதர்களாக, நின்ற நிலையிலும் இருந்த நிலையிலும் சாய்ந்த நிலையிலும் உன்னை நினைவு கூரும் மனிதர்கள் கூட்டத்தில் சேர்த்து விடுவாயாக’’ என்று மனம் துஆக் கேட்கும் நிலையில் இறந்துபோன அந்த உடலின் நெஞ்சு மீண்டும் தைக்கப்பட்டு மண்ண றையில் வைப்பதற்காக அந்த அரபு நாட்டுக்கே மீண்டும் அனுப்பப்பட்டு விட்டது.

யா அல்லாஹ்! எங்களை சுகமாக வாழவைக்கும் பொறுப்பை நீயே வைத்துக்கொள்! எங்களை சுகவீனமாக்கி நோய்களை சுகமாக்கும் பொறுப்பை வைத்தியர்களின் கையில் கொடுத்துவிடோதே! நீயே புகழுக்குரியவன், தூய்மையானவன்!

No comments

Powered by Blogger.