Header Ads



சுதந்திரக் கட்சியின், உப தலைவராக பௌசி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்விதமான வேறுபாடுகளும் இன்றி, புதிய அதிகாரிகள் தெரிவு இடம்பெற்றது என்று தெரிவித்த கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் 45 நாட்களுக்குள் நிறைவடையும் எனவும் கட்சிக்குள் எவ்விதமான பிளவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் அகில இலங்கை செயற்குழு ஆகியன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், பத்தரமுல்லையில் உள்ள அபேகம வளாகத்தில் கூடியது. 

“கட்சியில் மறு​சீரமைப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தற்காலிக அதிகாரிகள் சபை நியமிக்கப்பட்டது. இந்த அதிகாரிகள் சபையின் தற்காலிக காலம் 45 நாட்களாகும். ஆகக் கூடினால், இன்னுமொரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்கள் எடுக்கும். அதற்குள் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நிறைவடையச் செய்வோம்” என்றார்.  

கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சகலரும் இணைந்து, ஏகமனதாகவே இதனை மேற்கொண்டோம். இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை, எவ்விதமான பேதங்களும் இன்றி முன்னெடுக்கப்பட்டது என்று தெரிவித்த அவர், எஸ்.பீ.திஸாநாயக்க உள்ளிட்டோர், இந்தச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கினர் என்றார்.  

கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப- தலைவர்களாக ஏ.எச்.எம்.பௌசி, சரத் அமுனுகம, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, ரெஜினோல்ட் குரே, பியசேன கமகே, விஜித் விஜயமுனித டி சொயிஸா, மஹிந்த சமரசிங்ஹ, திலான் பெரேரா, தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

புதிய உப செயலாளர்களாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தஸநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் பிரதியமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, சுமேதா ஜீ. ஜயசேன ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மத்திய செயற்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.  

No comments

Powered by Blogger.