Header Ads



முஸ்லிம்களிடம், கோத்தபாய மன்னிப்பு கேட்க வேண்டும் - முஜிபூர் ரஹுமான்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தனது ஆட்சியில் முஸ்லிம்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறுகின்றார். அவர் முஸ்லிம்களை பாதுகாக்கும் முன்னர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹுமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்த) சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் யுத்த குற்றம் இடம்பெற்றதாக அரசாங்கம் எந்த இடத்திலும் ஏற்றுகொள்ளவில்லை. இராணுவ தண்டிப்பு அவசியம் என்று எந்தவொரு இடத்திலும் கூறவுல்லை. எமது அரசாங்கம் எமது இராணுவத்தை பாதுகாக்கும் கொள்கையில் இருந்தே செயற்பட்டு வருகின்றது. 

சர்வதேசம் இன்று நாம் கூறுவதை கேட்கின்றது. எம்முடன் இணைந்து நாட்டினை முன்னெடுக்க விரும்புகின்றது. எம்மை சர்வதேச நாடுகள் நம்புகின்றது. எனினும் ஒரு சிலருக்கு இன்று மீண்டும் விடுதலைப்புலிகள் வேண்டும் என்ற அவசியம் உள்ளது. மீண்டும் புலிகள் உருவாக வேண்டும் நாட்டில் குழப்பம் ஏற்படவேண்டும் என்ற கனவு கண்டுகொண்டுள்ளனர்.  

வடக்கில் விக்னேஸ்வரன் நாட்டினை துண்டாட நினைப்பதை போலவே தெற்கில் உள்ள சிங்கள தலைவர்களும் நாட்டை துண்டாட நினைக்கின்றனர். இரண்டு தரப்பும் ஒரே கொள்கையில் இருந்தே செயற்பட்டு வருகின்றது. 

கோத்தாபய ராஜபக்ஷ இன்று முஸ்லிம் மக்களுடன் இணைந்து இப்தார் நிகவுகளில் கலந்துகொண்டு முஸ்லிம் மக்களுடன் நட்புறவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார். அது ஆரோக்கியமான விடயம், ஆனால் அவர் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலத்தில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை மறக்கக்கூடாது.

அளுத்கம சம்பவத்தின் பின்னணியில் கோத்தாபய ராஜபக்ஷ இருந்து செயற்பட்டமை, தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை, ஏனைய பல இடங்களில் இடம்பெற்ற முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் என்பன மறக்க முடியாது. இன்று தூக்கத்திலிருந்து எழும்பிய அவர், முஸ்லிம்களை பாதுகாப்பதாக கூறுகின்றார்.  அவர் முஸ்லிம் மக்களை பாதுகாக்க முன்னர் முஸ்லிம் மக்கள் முன்னிலையில் மன்னிப்புகேட்க வேண்டும் என்றார். 

1 comment:

  1. ஒருவர் தான் செய்தது குற்றம் என்று உணர்ந்தால்தான் அதட்காக மன்னிப்பு கேட்க வேண்டும். கோத்தபாயவை பொறுத்தமட்டில் அவர் அப்போது செய்ததும் சரியே, எதிர்காலத்திலும் அதையே செய்வார். ஆனால் முஜிபுர் ரஹ்மானிடம் நாங்கள் கேட்பது அவர் மன்னிப்பு கேட்டால் முஸ்லிம்கள் அவருக்கு வாக்களிக்கலாமா???

    ReplyDelete

Powered by Blogger.