Header Ads



பலாத்காரமாக இப்தார் நிகழ்வில், பங்கேற்கும் அரசியல்வாதிகள் ஓணான்கள் - சஜித் சாடுகிறார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு முடிவதற்குள் 200 வீடமைப்புத் திட்டங்களை அமுல்படுத்தி விட்டே என வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸா தெரிவித்தார்.

ஏறாவூரில் 43 நவோதய வீடுகளும் நலனோம்புத் திட்டங்களும் கையளிக்கப்பட்ட நிகழ்வில் வியாழக்கிழமை கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் “ஸம் ஸம் கிராமம்” மற்றும் “ஸகாத் கிராமம்” ஆகிய இரு மாதிரி எழுச்சிக் கிராமங்களில் 43 புதிய வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளான நீர்மற்றும் மின்சார வசதி,  உள்ளகப் பாதை வசதி, பிரவேசப் பாதை வசதி ஆகியனவும் மக்களிடம் கையளிக்கப்பட்டன.

மேலும், 43 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உரிமைப் பத்திரம், பயனாளிகள் 170 பேருக்கும் மொத்தமாக 85 இலட்சம் ரூபா வீடமைப்புக் கடன் மற்றும் உதவி வழங்கல், பயனாளிகள் 70 பேருக்கு “விசிரி” திட்டத்தின் கீழ்  தலா ஒரு இலட்ச ரூபா இலகு கடன்களுக்கான காசோலை வழங்கல், பயனாளிகள் 25 பேருக்கு “சொந்துருபியச” எனும் திட்டத்தின் கீழ் தலா 2 இலட்ச ரூபா வீடமைப்புக் கடன் வழங்கல்,  “சில்பசவிய” எனும் திட்டத்தின் கீழ் கட்டடத் தொழிலாளி பயிலுநர்கள் 50 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபா உதவு தொகை வழங்குதல் மேலும் கண்பார்வைக் குறைபாடுள்ள 258 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கல். அத்துடன் பயனாளிகள் இருவருக்கு காணி உரிமைப்பத்திரம் என்பனவும் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 100 வீட்டுத்’ திட்டங்களைத்தான் அமைப்பது என்று ஏற்கெனவே எனக்குள் இருந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளேன். மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஆர்வத்தைப் பார்க்கின்ற பொழுது இந்த வீடமைப்பு இலக்கை இருமடங்கு அதிகரிக்கத் தீர்மானித்துள்ளேன்.

நான் செய்வதைத்தான் சொல்வேன் சொன்னதைச் செய்வேன். ஏனென்றால் என் தந்தையும் அவ்வாறே செயற்பட்டவர்.

எனது வேகத்திற்கு ஈடுகொடுத்து எவரும் சரி சமனாகவும் ஓட முடியாது என்னைப் பின் தொடர்ந்து  எட்டிப் பிடிக்கவும் முடியாது.

கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைரின் வேண்டுகோளுக்கிணங்க வடிச்சல் கிராமத்தில் 50, உறுகாமம் கிராமத்தில் 75 வீடுகளும் அடுத்த மாதம் 28ஆம் திகதி அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்படும், அதேபோல ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைத் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க  சவுக்கடி 50, களுவங்கேணி 25, ஐயன்கேணி 25 என தமிழ் பிரதேசத்திற்கும் 100 வீடுகள் எதிர்வரும் 25ஆம் திகதி இந்த வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்படும்.

வீடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் திகதியை மட்டுமே அதிகாரிகளிடம் கேட்டு தீர்மானித்துக் கொண்டுள்ளேன்.

இந்த நாட்டில் இன மத பேதங்களை ஏற்படுத்தி உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசி நிறம்மாறித் திரியும் ஓணான்களாகவே பல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களே பலாத்காரமாக இப்தார் நிகழ்விலும் கலந்து கொள்கின்றார்கள்.

இன, மத, மொழி பிரதேச வேறுபாடுகளை ஏற்படுத்தி இந்த நாட்டுக்குத் தீவைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் இருக்கின்றார்கள். மக்களால் விரட்டப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிக் கதிரையில் அமர ஆர்வம் கொண்டுள்ளார்கள்.

அப்படிப்பட்டவர்கள் இனியும் இந்த நாட்டுக்குத் தேவையில்லை. இந்த நாட்டுக்குத் தீ வைப்பவர்கள் இனி ஒரு போதும் தேவையே இல்லை.” என்றார்.

No comments

Powered by Blogger.