Header Ads



தாமதம் இல்லை, தவ்பா கேட்போம்...


-ARM INAS-

தூதர் நபி மூஸாவும் அவருடன் ஈமான் கொண்டோரும்,  ஒருவராக அல்லாஹ்வின் முஹ்ஜிஸாதால்
அல்லாஹ்வால் பிரிக்கப்பட்ட செங்கடலை அவசரமாக கடந்து முடித்தனர்.

பிர்அவ்னின் கொடூரப் படை ஈமான்கொண்டவர்களை அழித்தொழிப்பதற்காக வேகமாக இவர்களை பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர்.

நபி மூஸாவும் ஈமான்கொண்டோரும் கடலை கடந்து முடித்தவுடன்,  பிரிந்திருந்த கடல் ஒன்று சேர ஆரம்பித்துவிட்டது.

பிர்அவ்னும் அவனது படையும் கடல் நடுவில் சிக்கித் தவித்தனர். கர்வம் கொண்ட பிர்அவ்ன் நீரில் தத்தழித்த வண்ணம் இருந்தான். அவன் மூழ்கும் தருவாய் வந்துவிட்டது. தான் அழியப் போகிறேன் என்பதனை உணர்ந்தான் பிர்அவ்ன்.

பிர்அவ்ன் திடீரென்று, நான் மூஸாவின் றப்பை ஈமான் கொண்டுவிட்டேன் என்று கத்தத் துவங்கினான்.

பிர்அவ்ன் இரண்டாம் முறையாக அந்த வசனத்தை மொழியும் போது, வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) பிர்அவ்னின் வாயில்,  மண்ணை போட்டுவிட்டார். மண்ணால் வாயடைத்து நீரில் மூழ்கி மாண்டு போனான் பிர்அவ்ன்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள், பிர்அவ்னின் வாயில் ஏன் மண்ணை போட்டார் என்பதற்கு காரணம் சொல்லும் போது பிர்அவ்ன் இன்னுமொரு முறை,  நான் மூஸாவின் றப்பை ஈமான் கொண்டேன் என்று இறைஞ்சினால்,  அல்லாஹ் தன்  அளவற்ற அதீத கருணையின் காரணமாக பிர்அவ்னை மன்னித்தாலும் மன்னித்துவிடுவான். ஆகையால் தான்,  பிர்அவ்னின் வாயில் மண்ணை போட்டேன் என்பதாக ஹதீஸில் வருகிறது.

தபரானி மற்றும் முஸ்னத் அஹ்மதிலள் பதியப்பட்டுள்ள இந்த ஹதீஸை மாபெரும் முஹந்தீஸ்களில் ஒருவரான அல்பானி (றஹ்) இந்த ஹதீஸ் ஸஹீஹான ஆதாரபூர்வமான ஹதீஸ் என உறுதிப்படுத்துகிறார்.

உலக மனிதகுல வரலாற்றிலேயே மிக கெட்ட மனிதன் பிர்அவ்ன். அதனால் தான் அல்லாஹ்,  அவனை மறுமைவரை கெட்ட மனிதர்களுக்கு உதாரணமாக குர்ஆனிலே குறிப்பிட்டிருக்கிறான்.

மலக்குமார்களில் முதன்மையானவரான ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவர், பூமிக்கு அல்லாஹ்வின் தூதை சுமந்து வந்தவர்.  எல்லோரையும் விட ஜீப்ரீல் (அலை) அவர்கள்,  அல்லாஹ்வை பற்றி மிக அறிந்தவர்.

உலக வரலாற்றிலேயே கொடியவனான பிர்அவ்னை கூட மன்னிக்க கூடியளவுக்கு அல்லாஹ்வின் அருள், மஃபிரத் அல்லாஹ் மனிதர்கள் மீது வைத்திருக்கும் அன்பு பரந்தது, என்பதனை இந்த ஹதீஸினூடாக எங்களால் புரிந்துகொள்ளலாம்.

ரமழான் மஃபிறத்துடைய மாதம்.  இத்தனை விசாலமான பரந்த அல்லாஹ்வின் அன்பை அருளை மஃபிறத்தை, ஒருவன் ரமழான் மாத்திலாவது பெறாவிட்டால், அவனை போல ஒரு துர்பாக்கியசாலி நிச்சயம் உலகில் இருக்கமாட்டான்.

ஆகையால் தான் ரமழான் மாதத்தை அடைந்தும்,  எவன் ஒருவன் பாவமன்னிப்பை பெறவில்லையோ, அவன் நாசமடையட்டும் என்று வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) துஆ கேட்க, நபிமார்களின் தலைவர் முஹம்மத் (நபி) அவர்கள், அவர்களின் சங்கையான மிம்பரிலிருந்து ஆமீன் என்று சொன்னார்கள்.

காலம் தாமதிக்கவில்லை....

ரமழானின் எஞ்சியிருக்கும் நாட்களிலாவது,  பாவத்திலிருந்து மீழ்வதாக அல்லாஹ்வுக்கு உறுதியளித்து, இனிமேல் பாவத்தை நெருங்கவேமாட்டேன் என்று உறுதியளித்து, ஸூஜூதிலும் ருகூவிலும் அல்லாஹ்விடம் இறைஞ்சி தவ்பா கேட்போம்.

அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்” 12:87

No comments

Powered by Blogger.