Header Ads



"பிறை விவகாரம்" நிரந்தரத் தீர்வுக்கான ஒரு முன்மொழிவு

 –Ash. Affan Abdul Haleem (Naleemi), 
Ash. Zacky Fouz (Naleemi) 

முடிவின்றிய தொடர்கதையாக மாறி தசாப்தங்கள் தாண்டிப் பயணிக்கும் பிறை சர்ச்சைகள், இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு வடுவாக மாறி விடுமோ என்ற அச்சப்பாட்டைத் தோற்றுவிக்கின்ற அளவுக்கு உக்கிரமடைந்திருந்திருப்பதையே அவதானிக்க முடிகின்றது. எந்தளவுக்கென்றால் இலங்கையின் சில இஸ்லாமிய அமைப்புகள் பொதுவிலும், இன்னும் சில இஸ்லாமிய அமைப்புகள் தமது அங்கத்தவர்களுக்கு மத்தியிலும் பிறைக் குழுவின் தீர்மானத்துக்கு வெளியே தன்னிச்சையாக செயற்படுவதற்கான தெரிவையும், அதற்குறிய நெறிமுறைகளையும் வழங்கியதைக் காணக் கூடியதாக இருந்தது. இந்தப் பிறை விவகாரம் உடனடியாக ஒரு தீர்க்கமான முடிவுக்குக் கொண்டுவரப்படாவிட்டால் கிட்டிய எதிர்காலத்தில் ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு தனிமனிதனும் இது தொடர்பில் தன்னிச்சையான நிலைப்பாடுகளுக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதையே இத்தகைய நிகழ்வுகள் கட்டியம் கூறி நிற்கின்றன.

இந்தத் தொடர் சர்ச்சையின் புதிய அத்தியாயமான, இவ்வருட (ஹி: 1439) ஷவ்வால் தலைப்பிறை பார்ப்பது தொடர்பாக மேலெழுந்துள்ள பிரச்சினைகளை இரண்டு வகையாக பிரித்து நோக்க முடியும்.

முதலாவது, ‘பிறை பார்த்தல் மற்றும் அதற்கான வழிமுறை(கள்), அதனை நிர்ணயிக்கின்ற உஸூல்கள்’ என்பதுடன் தொடர்புபட்ட பிரச்சினையாகும். இரண்டாவது, பிறை கண்டதாக கிடைக்கும் சாட்சியங்களுடன் கூடிய தகவல்களை ஏதோ ஒரு காரணத்திற்காக பிறைக் குழு ஏற்க மறுத்தால் அல்லது புறக்கணித்தால், மற்றும் தொடர்ந்தும் நோன்பு நோற்குமாறு அல்லது மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து கொள்ளுமாறு அவர்களால் வேண்டிக் கொள்ளப்பட்டால், அதனை மறுத்து செயல்பட முடியுமா? அதற்கான மார்க்க அடிப்படை என்ன? என்பதாகும். இந்தக் கட்டுரையானது மேலே குறிப்பிடப்பட்ட இரண்டாவது கேள்விக்கே விடை தேட முனைகிறது.

அதாவது, இம்முறையும் பிறை கண்டது தொடர்பாக முன்வைக்கப்பட்ட சாட்சியங்களில் போதாமைகளும், குறைபாடுகளும் நிலவுவதாகக் கூறி அதனை பிறைக் குழு நிராகரித்தது. அதனைத் தொடர்ந்து பிறைக் குழுவின் தீர்மானத்தின் படி செயல்படும் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் (பிறைக் குழுவின் தீர்மானங்களை எவ்வகையிலும் கருத்தில் எடுக்காத பல்வேறு குழுக்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் இருப்பதை கருத்தில் கொள்க) மூன்று வித்தியாசமான நிலைப்பாடுகள் தோற்றம் பெற்றன.
1. பிறை விவகாரத்தில் தலைமைத்துவம் வழங்கும் பிறைக் குழுவுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் முழுமையாக கட்டுப்பட வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து 29வது தின நோன்பை நோற்றவர்கள்.
2. குறித்த தீர்மானத்தில் தமக்கு தெளிவான அதிருப்தி இருப்பதாகக் கூறி ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டதன் பின்னர் நோன்பு நோற்பது ஹராம் அன்ற அடிப்படையை முன்னிறுத்தி குறித்த தினம் நோன்பு நோற்காமல் விட்டவர்கள். இவர்கள் பெருநாளை பிறைக் குழுவின் தீர்மானத்துக்கேற்பவே கொண்டாடினார்கள்.
3. குறித்த தீர்மானத்தின் மீதான அதிருப்தியை வெளியிட்டு அன்றைய தினம் பெருநாள் கொண்டாடியவர்கள்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் தரப்பினர், ‘பிறைக் குழு தெளிவான சாட்சியங்களுடன் கூடிய பிறை அறிவிப்பை தமது சில நலன்களுக்காக நிராகரித்தது என்று வாதிக்கிறார்கள். இதற்கு முதலாம் அணியினர் ‘இல்லை, எது எப்படியிருந்தாலும் பிறையைத் தீர்மானிப்பதில் பிறைக் குழுவிற்கே கட்டுப்பட வேண்டும்; ஏனெனில் இந்த விடயத்தில் நாம் உடன்பட்ட தலைமைகள் அவர்களே’ என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். மேலும் நோன்பு நோற்காதவர்களையும் பெருநாள் கொண்டாடியவர்களையும் ‘ஃகவாரிஜியப் பண்பு கொண்டவர்கள்’ (அதாவது உம்மத்துக்கெதிராக வெளியேறியவர்களின் செயற்பாட்டை ஒத்தது) என அவர்களில் ஒரு சாரார் அடையாளப்படுத்தினார்கள். இந்த இரு தரப்பு வாதங்களையும் அவதானித்து நோக்கிய பின்பு, ‘பிறை விவகாரத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற கருத்தை இன்னுமொரு தரப்பினர் முன்வைக்கிறார்கள். அப்போதுதான் உள்வீட்டு அதிகார மோதல்களக்கு அப்பால் சென்று, நேர்மையானதும் குழப்பங்களற்றதுமான முடிவுகளுக்கு பிறை விவகாரத்தில் வரமுடியும் என அவர்கள் கருதுகிறார்கள்.
ஆனால், பிரச்சினையின் மூலவேர் ஒரிடத்தில் இருக்க, நாம் வேறு பல புள்ளிகளில் நின்று விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்று எமக்குப் புலப்படுகின்றது. அதாவது, பிறை அறிவிப்பது யார்? உள்முரண்பாடுகள் மற்றும் அதிகார திருவிளையாடல்களுக்கு அப்பால் சென்று சுதந்திரமாக தீர்மானங்களை யாரால் வெளியிட முடியும்? என்ற கேள்விகளுக்கு விடை காண்பதால் மாத்திரம் பிறை விவகாரத்திற்கு தீர்வு கண்டு விட முடியாது. மாறாக, பிறையை உத்தரவாதப்படுத்தும் ஒரு சபைக்கு சமகால அரசியல் மற்றும் தேசிய ஒழுங்கில் என்ன இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது? அது எங்கிருந்து தனது சட்டபூர்வத்தன்மையை பெற்றுக்கொள்கிறது? நாட்டினுடைய தேசிய ஒழுங்கில் அதற்குரிய அந்தஸ்து என்ன? என்பன போன்ற விடயங்களில் உள்ள மயக்கங்களும் தெளிவின்மைகளும் தான் இதனை தீர்வு காண முடியாத குழப்பங்களுக்கும், எல்லை காண முடியாத விவாதங்களுக்குமான அடிப்படையாக மாற்றி வைத்திருக்கின்றன. இப்பிரச்சினையின் மூலவேரும் இப்பரப்புக்குள்ளே தான் இருக்கின்றது. அதனை சற்று விரிவாக கீழே நோக்குவோம்.

அ.இ.ஜ.உ, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகிய முத்தரப்பை உள்ளடக்கிய இலங்கை பிறைக் குழுவின் முடிவை ஆதரிப்பவர்கள், இஸ்லாமிய ஃபிக்ஹில் குறிப்பிடப்பட்டுள்ள ‘வலிய்யுல் அம்ர்’ இற்கு கட்டுப்பட வேண்டும் என்ற வாதத்தையும், அவர்களது தீர்மானத்தை நிராகரிப்பதும் அதற்கு மாற்றமாக நடந்து கொள்வதும் சமூகத்தைக் குழப்பும் ஃபித்னாவுடைய செயலாகும் என்ற விவாதத்தையும் முன்வைக்கிறார்கள். அதற்கு பதில் சொல்கின்ற அல்லது அதற்கு மாற்றமான கருத்தில் இருக்கின்ற தரப்பினர் ‘எல்லை மீறிய அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்’ மற்றும் ‘பிறைக் குழுவின் உள்வீட்டு அதிகார முரண்பாடுகளையும் அதன் வெளிப்பாடுகளையும் எங்களால் ஆதரிக்க முடியாது’ என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். இந்த வகையில், இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் குறித்த இப்பிரச்சினையின் மூலவேர் ‘பிறைக் குழுவுக்கு’ உள்ள அந்தஸ்தும், இடமும், சட்டபூர்வத்தன்மையும் என்ன? என்பதிலேயே தங்கியுள்ளதை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். பிறைக் குழுவை ஆதரிக்கும் தரப்பினர் ‘பாரம்பரிய ஃபிக்ஹு’ கண்ணோட்டத்தில் பிறைக் குழுவை அணுகி அதனை நியாயப்படுத்தும் அதே வேளை, பிறைக் குழுவின் தீர்மானத்தை நிராகரித்த அல்லது ஏற்றுக்கொள்ள மறுத்த தரப்பினர் ‘நவீன அரசியல் மொழியாடல்கள் மற்றும் பொருள்கோடல்களின்’ பின்புலத்தில் பிறைக் குழுவை அணுகி அதனை நிராகரித்ததைக் கண்டு கொள்ள முடியும். சமகால அரசியல், சமூக ஒழுங்கில் பிறைக் குழுவை மற்றும் அதன் தீர்மானங்களை எந்தத் தராசில் வைத்து மதிப்பீடு செய்வது என்ற குழப்ப நிலையின் வெளிப்பாடே இந்த முரண்பாடாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் பயன்படுத்தப்பட்ட ‘வலிய்யுல் அம்ரிற்குக் கட்டுப்படல்’ என்ற அரசியல் பதப்பிரயோகமானது, ஆழமான புரிதல்களை உடையதும், சிக்கலான வேறு பல அரசியல் பதப்பிரயோகங்களுடன் தொடர்புபட்டதுமாகும். ஃகிலாபா, அதன் நீதி(த் துறை) ஒழுங்கு (அல்கழாஉ), ஒன்று பட்ட ஒரே சமூக அமைப்பு (அல்ஜமாஆ) மற்றும் சாம்ராஜ்ய உலக ஒழுங்கு என்பன போன்ற விரிந்த சிக்கலான பல்வேறு கட்டமைப்புகளுடன் நேரடியாகத் தொடர்புடையதாகவே (طاعة ولي الأمر) வலிய்யுல் அம்ரிற்கு கட்டுப்படல் என்ற அம்சம் இருந்திருக்கின்றது.
ஆனால், சிவில் சமூக நிறுவனமொன்றின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளல் மற்றும் நிராகரித்தல் தொடர்பான விடயங்களை ‘வலிய்யுல் அம்ரிற்கு கட்டுப்படல்’ என்ற சட்டகத்துக்குள் வைத்து அளப்பதற்கும், அவர்களது தீர்மானங்களை அல்கழாஉ என்று அறியப்படுகின்ற (ஃகிலாஃபத்தின்) நீதிமன்றத் தீர்ப்புக்கு ஒப்பிடுவதற்கும், அந்தத் தீர்மானங்களை மறுப்பவர்களை அல்ஜமாஆ என்று அறியப்படுகின்ற ஒரே உம்மத் என்ற சமூகக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்துகிறார்கள் என்று அடையாளப்படுத்துவதற்கும் முடியுமா? என்ற அதி முக்கியத்துவம் வாய்ந்ததொரு கேள்விக்கான பதிலை முதலில் காண வேண்டி இருக்கின்றது.

இன்றைய ‘தேசிய அரசு’ என்ற அரசியல் ஒழுங்கின் கீழ், அரசிடமிருந்தோ அல்லது மக்களிடமிருந்தோ, பாரம்பரிய ரீதியான எழுதப்படாத அங்கீகாரம் தவிர்ந்த வேறு எந்த சட்டபூர்வத்தன்மையும் இல்லாத, பல்வேறு விடயங்களுக்கும் பல்வேறு வகையான வடிவங்களில் வரையறுக்கப்பட்ட, மற்றும் சிதறிய தன்மை கொண்ட திரவ நிலைத் தலைமைத்துவங்களாக இருக்கின்ற எந்தவொரு சிவில் நிறுவனத்துக்கும், அல்லது அவ்வாறான சிவில் நிறுவனங்கள் சிலவற்றினதோ பலவற்றினதோ கூட்டணியொன்றுக்கும் மேற் சொன்ன ‘வலிய்யுல் அம்ர்’ அந்தஸ்தையோ, அவர்களது தீர்மானங்களுக்கு ‘அல்கழாஉ’ என்ற அந்தஸ்தையோ, அவர்களது தலைமைத்துவங்களுக்கு ‘அல்ஜமாஆ’வைக் கட்டுப்படுத்தும் தலைமைத்துவம் என்ற அந்தஸ்தையோ வழங்க முடியாது என்பதே எமது அடிப்படையான புரிதலாகும்.

வேறொரு வார்த்தையில் அதனை சொல்வதாக இருந்தால், சாம்ராஜ்ய உலக ஒழுங்கின் கீழிருந்த விடயங்களை நிர்வகித்த சமன்பாடுகளைக் கொண்டு தேசிய அரசு என்ற நவீன உலக ஒழுங்கின் கீழ் உள்ள விடயங்களை ஒருபோதும் சரியாக நிர்வகிக்க முடியாது. நிர்வகிக்கவும் கூடாது.

இல்லை, உலக ஒழுங்கு மாறினாலும் கூட எமது பாரம்பரிய முறைமைகளை இந்த ஒழுங்கின் கீழும் அப்படியே பிரயோகிக்க முடியும் என்று யாராவது கருதும் பட்சத்தில், பாரம்பரிய இஸ்லாமிய ஃபிக்ஹ் கலை வளர்ச்சியடைந்த சாம்ராஜ்ய உலக ஒழுங்கின் சமன்பாடுகளையும், நவீன தேசிய அரசு ஒழுங்கின் சமன்பாடுகளையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் புள்ளியிலேயே அது முடிவின்றி சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். அந்தச் சுழற்சியில்தான் இன்றைய பிறைப் பிரச்சினை மையம் கொண்டிருக்கின்றது.
இன்றை தேசிய அரசு ஒழுங்கில் உயர் நீதிமன்றொன்றின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றைக் கூட எதிர்த்து மக்கள் வீதிக்கு இறங்குகிறார்கள். இது இன்றைய உலகில் மிகவும் சர்வ சாதாரணமான விடயம். அத்தகையவர்களை யாரும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செல்கிறார்கள், சமூகக் கட்டமைப்பை சீர்குலைக்கிறார்கள் என்று அடையாளப்படுத்துவதில்லை, அவ்வாறு அடையாளப்படுத்தவும் முடியாது. அதனை சிவில் சமூகத்தின் ஓர் அரசியல் உரிமையாகவே இன்றைய உலகம் நோக்குகிறது. அந்த அடிப்படையில், சிவில் சமூக நிறுவனமொன்றின் தீர்மானத்தை பிரிதொரு சிவில் சமூக நிறுவனம் அல்லது ஒரு சிவில் சமூக அங்கத்தவன் மறுதலிப்பதில், நிராகரிப்பதில், ஏற்றுக்கொள்ள மறுப்பதில் எந்தப் பிரச்சினை இருக்கப் போகின்றது? என்ற கேள்வி எழுகிறது.

அரபு நாடுகளைப் பொருத்தவரை, நாம் மேலே கலந்துரையாடிய பிரச்சினை அங்கில்லை. ஏனெனில், அங்கு தேசிய அரசு என்ற அடையாளத்துடன் பெரும்பாலும் இன்னும் சாம்ராஜ்ய உலக ஒழுங்கின் விதிகளையும் சமன்பாடுகளையும் கொண்டே அவை இயங்குகின்றன. அந்த வகையில் அரசாங்கத்தால் நேரடியாக நியமிக்கப்பட்ட குழுவொன்றே அரச சட்டபூர்வத்தன்மையுடன் பிறை தொடர்பான அறிவிப்புக்களை வெளியிடுகின்றது. எனவே, அதனை கழாவாக (தீர்ப்பாக) நோக்க முடியும். அதனை நிராகரித்து அதற்கு மாற்றமாக கருத்துச் சொல்வதோ, அல்லது அதற்கு முரணான வேறொரு தீர்மானத்தை எடுத்து நடைமுறைப்படுத்துவதோ சமூகத்தைக் குழப்பியதாகவும் அரசுக்கெதிரானதாகவும் கருதப்படும். அத்தகையவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஒரு தரப்பினால் மாத்திரம்தான் தமது தீர்மானங்களை தீர்ப்புகளாகவும், அதற்கு மாறு செய்வதைக் குற்றமாகவும் பிரகடனப்படுத்த முடியும் என்ற அடிப்படை அரசியல் விதியே இங்கு செயல்படுகின்றது.

ஆனால், இலங்கைச் சூழலில் பிறைக் குழுவிற்கோ அல்லது அதனை சார்ந்து நிற்கும் நிறுவனங்களுக்கோ எந்த சட்டபூர்வ அந்தஸ்தும் இல்லை. அதனை விரும்பியவர் நிராகரிக்கலாம் அல்லது விரும்பியவர் ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் , இலங்கையில் பிறைக்குழுவும் , அதனை சார்ந்துள்ள ஏனைய நிறுவனங்களும் அதிகாரங்கள் அற்ற அதே நேரம் சார்பியங்கள் பல கொண்ட சிவில் சமூக நிறுவனங்களாகும். அப்படியிருக்கும் போது, அதிகாரம் பொருந்திய அரசைப் போன்றும் அந்த அரசினால் சட்டபூர்வத்தன்மை வழங்கப்பட்ட நிறுவனங்கள் போன்றும் அதன் தீர்மானங்களை ஒரு போதும் நோக்கவும் முடியாது, இஸ்லாமிய வரலாற்றில் இருந்த (طاعة ولي لأمر) என்ற ‘ஆட்சியாளரினதும், காழியினதும் தீர்மானங்களுக்குக் கட்டுப்படல்’ என்ற அம்சத்தை தேசிய அரசின் கீழ் தன்னிச்சையாக இயங்கும் சிவில் சமூகத் தலைமைகளுக்குக் கொடுக்கவும் முடியாது. ஏனெனில், இரண்டும் முற்றிலுமாக வேறுபட்ட வித்தியாசமான இருவேறு ஒழுங்குகளாகும்.

இங்குதான், ‘பிறையை ஏற்றுக் கொள்ளல் மற்றும் நிரகாரித்தல்’ என்ற செயற்பாட்டை நவீன அரசியல் மற்றும் சமூக ஒழுங்கில் பொருத்தி நோக்கி அதன் சமூக அந்தஸ்தையும் சட்டபூர்வத்தன்மையையும் விவாதிக்க வேண்டிய தேவை எழுகிறது.
ஏற்கனவே பிறை விவகாரத்தை பாரம்பரியமாக கொழும்பு பெரிய பள்ளிவாயலும் அ.இ.ஜ.உ வும் கையாண்டு வந்தாலும் கூட எச்சந்தர்ப்பத்திலும் அவர்கள் இந்த சட்டபூர்வத்தன்மையைக் கொண்டிருந்ததில்லை என்பதற்கு மேற்கண்ட முறையியல் பிரச்சினைக்கப்பால் சில நடைமுறை உதாரணங்களும் இருக்கின்றன. ஏற்கனவே இந்தப் பிறைக் குழுவின் தீர்மானங்களைக் கருத்தில் கொள்ளாமல், ‘சர்வதேசப் பிறை’ என்ற விளக்கத்தோடு இருக்கின்றவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவ்வாறே இந்தப் பிறைக் குழுவின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற வாதத்தை முன்வைத்து உள்நாட்டுப் பிறையையே தாமாகத் தீர்மானித்துக் கொள்ளும் குழுவினர்களும் இங்கே இருக்கிறார்கள். இது போக கணிப்பீட்டை அடிப்படையாக வைத்து, இந்தியாவின் ஹிஜ்ரி கமிட்டியின் கலண்டரைப் பின்பற்றி என்று வித்தியாசமான அடிப்படைகளில் பிறைத் தீர்மானங்களை மேற்கொள்கின்ற பலர் இந்நாட்டில் ஏற்கனவே இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் தமது தீர்மானத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக மாற்றுகின்ற அதிகாரமோ அல்லது தமது தீர்மானத்துக்கு மாற்றமாக நடக்கின்ற போது அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரமோ பிறைக் குழுவுக்குக் கிடையாது. இவற்றுக்கெல்லாம் அப்பால் பிறைக் குழுவில் அங்கம் வகிக்கும் நிறுவனங்களின் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அங்கத்தவர்கள் பிறைக் குழுவின் தீர்மானத்தை மறுதலித்து அதற்கு மாற்றமான தனிப்பட்ட நிலைப்பாடுகளை பொதுவில் சொன்ன சந்தர்ப்பத்தில் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்குக் கூட அதிகாரங்களற்ற சபைகளாகத்தான் இந்த சிவில் அமைப்புக்கள் காணப்படுகின்றன.

எனவே இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மார்க்க விவகாரங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான ஓர் அடிப்படை என்ற வகையில் பிறைக் கலண்டரைத் தீர்மானிக்கின்ற முழுமையான அதிகாரம், அதற்குரிய சட்டபூர்வத்தன்மையொன்றை வழங்கக் கூடிய அதிகாரம் கொண்ட, நவீன தேசிய அரசின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தின் கையில் ஒப்படைக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்கூடாக பெருநாளினூடாக அடையப்பட வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்ற முக்கியமான (மகாஸித்) அடைவுகளையும் நவீன ஒழுங்கின் கீழ் இலகுவாகவும் முழுமையாகவும் அடைந்து கொள்ள முடியுமாக இருக்கும்.

அந்த வகையில் அதற்குரிய மிகப் பொருத்தமான நிறுவனமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தையே முன்மொழிய முடியும். இப்போதும் அவர்கள் ஒரு தரப்பாக பிறைக் குழுவில் அங்கம் வகித்தாலும் கூட தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்த முடியாத ஒரு தரப்பாகவே அவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்னர். அந்த நிலை மாற்றப்பட்டு திணைக்களத்தின் அதிகாரத்துடன் கூடிய உத்தியோகபூர்வ பொறுப்புக்களுள் ஒன்றாக பிறை விவகாரம் உள்வாங்கப்பட்டு, அதற்கான ஏக அதிகாரமுள்ள சபையாக அது மாற்றப்படுமாயின் அதன் பின்னர் பிறையானது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு விடும் இன்ஷா அல்லாஹ். இன்றுள்ள நவீன உலக ஒழுங்கின் கீழ் அதுவே அறிவுபூர்வமானதும், சட்டபூர்வமானதுமாகும்.

5 comments:

  1. Your very clever.
    Your are the one create all this
    Problem.because your all need power
    In the country.your dealing with muslim cultural affairs.your going to dominate mca in the future.
    Well try .

    ReplyDelete
  2. this is what we need to solve this issue on future

    ReplyDelete
  3. ஆகவே....
    இயக்கங்கள், அமைப்புகள், நிர்வாக சபைகள் போன்றவற்றுக்கு மக்கள் கட்டுப்ட வேண்டியது மார்க்ககடமை இல்லை என்று சொல்ல வருகிறீர்கள்

    ReplyDelete
  4. Your opinion support is 02% in Sri Lanka
    next 98% support to grand mosque,
    "two more cook spoil the soup"
    Let our elders do the work
    This ramazan not a problem for us
    And allso eid is not a problem for 98%
    Of Muslims. Try to understand!


    ReplyDelete
  5. >> இங்குதான் “ பிறையை ஏற்றுக் கொள்ளல் மற்றும் நிராகரித்தல்” என்ற செயற்பாட்டை நவீன அரசியல் மற்றும் சமூக ஒழுங்கில் பொருத்தி நோக்கி அதன் சமூக அந்தஸ்தையும் சட்டபூர்வத்தன்மையையும் விவாதிக்க வேண்டிய தேவை எழுகிறது”<<
    நீங்கள் கூறுவது சரி என்றே வைத்துக் கொள்வோம், இவ்விஷயத்தில் அரசியல் சாயம் பூசுவதால் மட்டும் இலங்கை முஸ்லிம்களுக்கிடையே உள்ள வேறு பாடு நீக்கப் பட்டு ஒரே பிறையின் கீழ் இணைந்து கொள்வரார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது? அல்லது முஸ்லிம் சமய திணைக்களத்தின் தீர்மானத்திற்கு முழு சமூகமும் கட்டுப்பட வேண்டும் என்பதில் என்ன நிர்ப்பந்தம் இருக்கின்றது? நீங்கள் கூறியது போல், இது ஒரு இஸ்லாமிய சாம்ராச்சியம் இல்லையே. நீதிமன்றங்களின் தீர்ப்பையே எதிர்த்து வீதியில் இறங்கி போராடும் உரிமை இருக்கின்றது என்று நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே என்னதான் மு.ச. பிறையைத் தீர்மானித்து அறிவித்தாலும் அதனை ஏற்று நடக்க வேண்டிய பொறிமுறை ஏற்ற்படுத்த முடியாது. அப்படியே இதனை சட்டமூலமாக்கினாலும். இக்கருத்திற்கு முரண்பட்ட ஒரு இயக்கம், குழு அல்லது ஒரு ஊர் பெருநாள் கொண்டாடினாலோ நோன்பு பிடித்தாலோ அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா? அல்லது தண்டிக்க முடியுமா? வேண்டுமானால் பெருநாள் தொழுகை நடைபெறும் போது பொலிசை அல்லது ராணுவத்தைக் களமிறக்க வேண்டிய சூழல் ஏற்றப்படலாம், பின்னர் அதுவே நம் சமூகத்தை நிர்முலமாக்கும் காரணியாகவும் மாறலாம். ஆனால் நோன்பு வைப்பதையோ வைக்காமல் விடுவதையோ யாரும் தடுத்து நிறுத்த முடியாது.
    ஒரு விஷயம் புரியவே இல்லை. ஒரு கட்டமைப்பில் பிரச்சினைகள் தோன்றினால் அதனை சரி செய்யும் வழிகளை கண்டறிய வேண்டுமே தவிர , அக்கட்டமைப்பை புறந்தள்ளி புதியதோர் கட்டமைப்பை தோற்றுவிப்பதல்ல. ஒரு நிருவாகத்தில் சீர்கேடு இருந்தால் அந்த சீர்கேட்டை திருத்தி அமைக்க வேண்டுமே தவிர நிருவாகத்தை கலைத்து புதியதோர் நிருவாகத்தை உருவாக்குவதல்ல. அது அரசியலுக்கு வேண்டுமானால் பொருந்தலாம், ஒரு சமூகக் கட்டமைப்புக்குப் பொருந்தாது. வீட்டில் மூட்டைப் பூச்சி என்பதனால் வீட்டை எரிக்க நினைப்பதும், வேளாண்மையில் பூச்சித் தாக்கம் என்பதனால் அதனை அப்படியே கொளுத்தி விட நினைப்பதும் எப்படி சரியான வழியாகும்? “ வீட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக கூரையை எரிப்பாரோ” ஆனால் இவ்விஷயத்தில் அவசர அவசரமாக பிறைக்குழுவை மாற்ற வேண்டும் என்று ஒரு குழு அதிலும் குறிப்பாக (நளீமிகள்) புறப்பட்டிருப்பதானது எதோ ஒன்றை தொக்கி நிற்பதாக அல்லது ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு இயங்குவதாக எண்ணத் தோன்றுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.