Header Ads



மரணிக்கும்வரை கிளைபோசெட்க்கு எதிராக போராட போகிறேன்

கிளைபோசெட் கிருமி நாசினி பாவனைக்கு எதிராக மரணிக்கும்வரை போராடப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் சூளுரைத்துள்ளார்.

கிளைபோசெட் பாவனையினால் ஏற்படுகின்ற விளைவுகள் பற்றிய ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்துகின்ற விசேட செயலமர்வு கொழும்பில் அமைந்துள்ள மூலோபாய நிறுவன முகாமைக்கான நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமெரிக்கா – கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமை புரிந்துவரும் இலங்கையரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாடசாலை நண்பருமான மருத்துவர் சரத் குணதிலக்க கலந்துகொண்டு உரையாற்றினார்.

விவசாய நடவடிக்கைகளில் கிளைபோசெட் பாவனையில் ஈடுபடுத்தியதன் விளைவினால் அமெரிக்காவிலுள்ள குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான வழக்குகள் குவிந்து கிடப்பதாக கூறினார்.

கிளைபோசெட் பாவனையினால் ஏற்படுகின்ற விபரீதங்களில் பிரதான ஒன்றாக, மனித உடலில் புரோடீன் உற்பத்தி குறைவடையும் என்பதோடு மரணத்தை ஏற்படுத்துகின்ற பலவிதமான நோய்களுக்கும் அது வித்திடும்.

குறிப்பாக கிளைபோசெட் பயன்படுத்துகின்ற விவசாயிகளுக்கும், விவசாய உற்பத்திகளை அநுபவிப்பவர்களுக்கும் சிறுசீரக நோய் ஏற்படும் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரங்களை வெளிச்சமிட்டு காட்டியதால் தனக்கெதிராக இலங்கையிலுள்ள ஆய்வு நிபுணர்கள் 12 பேர் முறைப்பாட்டுக் கடிதமொன்றை அனுப்பியிருந்ததாக தெரிவித்த அவர், அவர்களது பெயர்களை வெளியிட விரும்பவில்லை என்று கூறினார்.

கிளைபோசெட் விவகாரம் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் நெருக்கடியை ஏற்படுத்தியதால் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரது சிறுநீரை பரிசோதனை செய்துபார்த்தபோது அவற்றில் கிளைபோசெட் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுமட்டுமன்றி தாய்ப்பாலிலும் கிளைபோசெட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த விரிவுரையாளர் மருத்துவர் சரத் குணதிலக, கிளைபோசெட் சிறுநீரக நோய் மட்டுமல்லாமல் புற்றுநோயையும் ஏற்படுத்தவல்லது என்று குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.