Header Ads



கட்டுநாயக்காவில் ரணில் நிற்கையில், துப்பாக்கி மீட்பு

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக ஜேர்மன் நோக்கி பயணிக்க முயற்சித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த பயணியின் பயணப்பையில் இருந்து எரிவாயு துப்பாக்கி ஒன்று கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலையம் போன்ற அதிமுக்கிய பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுகின்றது. நாட்டில் இருந்து செல்லும் மற்றும் வரும் பயணிகள் அனைவரும் கடுமையாக சோதனைக்குள்ளாக்கப்படுவது வழக்கம். அவ்வாறான சோதனையின் போதே இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் துப்பாக்கியை எடுத்து கொண்டதன் பின்னர் குறித்த பயணியை விடுவிப்பதற்கு விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டால் அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகவே விமான நிலைய பொலிஸ் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

விமான நிலைய பாதுகாப்பு பிரிவு அவ்வாறான எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. குறைந்த பட்சம் பயணியிடம் வாக்குமூலம் ஒன்றையேனும் பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு பிரித்தானியா நோக்கி பயணிக்கவிருந்தார். குறித்த சம்பவம் இடம்பெறும் போது பிரதமர் விமான நிலையத்திற்குள் இருந்துள்ளார். பாதுகாப்பு தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டிய சந்தர்ப்பத்தில் அவ்வாறு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எரிவாயு துப்பாக்கி வைத்திருந்த பயணியை விடுவிப்பதற்காக இவ்வாறான சர்ச்சைக்குரிய தீர்மானத்தை யார் மேற்கொண்டது என்பது தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளவில்லை என்றால் பாரிய ஆபத்தான நிலைமை ஒன்றுக்கு முகம் கொடுக்க நேரிடும் என குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.