Header Ads



பிரதி சபாநாயகர் தெரிவில், அடிதடி ஏற்படுமா..?

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய நிலையில் பதவி விலகிய பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் வெற்றிடத்திற்கு பலரும் கண் வைத்திருந்தார்கள். முஜீபுர் ரஹ்மானை நியமிக்குமாறு பின்வரிசை எம்.பிகள் சிலர் பிரதமரிடம் எழுத்து மூலம் கோரியிருந்தார்கள். 

இந்த நிலையில் கடந்த பாராளுமன்ற அமர்வில் சு.க தேசியப்பட்டியல் எம்.பி அங்கஜன் ராமநாதனின் பெயரை ஜனாதிபதி பரிந்துரை செய்து சபாநாயகருக்கு அறிவித்திருந்தார். 

இதற்கு ஏனைய கட்சிகள் ஆட்சேபனை தெரிவிக்காத போதும் த.தே.கூ எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 

தேசிய அரசாங்கத்தில் இரு பிரதான கட்சிகளும் அமைச்சு பொறுப்புகள் மற்றும் பொறுப்புகளை பகிர்ந்து கொண்டிருந்தன. அதில் பிரதி சபாநாயகர் பதவி சு.கவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் சு.க சார்பில் அங்கஜனின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை பிரதி சபாநாயகர் தெரிவு நடைபெற இருக்கிறது. 

ஐ.தே.க சார்பில் மொனராகலை மாவட்ட எம்.பி ஆனந்த குமாரசிரியின் பெயரை சிபார்சு ​செய்ய இருப்பதாக அறிய வருகிறது.

இதனால் நாளை மறுதினம் பிரதி சபாநாயகர் தெரிவிற்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.தே.கவினதும் சு.கவினதும் பலத்தை உரசிப் பார்க்கும் இந்த போட்டியில் ஐ.தே.க வேட்பாளருக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக பாராளுமன்ற தகவல்கள் தெரவிக்கின்றன. 

இவருக்கு த.தே.கூ உம் ஆதரவு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிணைந்த எதிரணி,ஜே.வி.பி என்பன இரு வேட்பாளர்களையும் ஆதரிப்பது சந்தேகம் என அறிய வருகிறது.

ஆனால் பிரதி சபாநாயகர் தெரிவு போட்டியின்றி சுமூகமாக இடம் பெற வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய கூறியுள்ளார். இந்த தெரிவுக்காக பிளவு படுவது பொறுத்தமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.